டிவி செய்தியில் காய்கறி மற்றும் முட்டை மொத்த விற்பனையின் விலை பற்றிச் சொல்லும்போது, முட்டை ரூ.5.50 வரை விற்பனை ஆகின்றது என்று சொன்னார்கள். அப்போது மறக்கமுடியாத ஒரு பழைய நினைவு எழுந்தது. பள்ளியில் நம் எல்லோருக்குமே பலவிதமான அனுபவங்கள் வாய்த்திருக்கும். அப்படியொன்றுதான் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது.
எங்களுக்கு உயிரியல் நடத்தியவர் திரு.இஸ்மாயில் என்ற திறமையான ஆசிரியர். Reproduction in birds and mammals என்ற தலைப்பில் அன்றைய பாடம் நடந்தது. கரு முட்டை வெளிப்படும் சுழற்சி பற்றி, அடை காக்கும் விதம் பற்றி, பாலூட்டிகள் பற்றி நடத்திக்கொண்டு போனார். பெண்களுக்குச் சினைப்பையில் கருமுட்டை உருவாவது பற்றியும், கர்ப்பம் தரித்து மகப்பேறுவரை சுருக்கமாய் விளக்கி முடித்தார்.
அப்போது நெடுமாறன் என்ற என் வகுப்பு மாணவன், “சார், என்ன சார் சொல்றீங்க? லேடீஸ் முட்டை போடுவாங்களா? எனக்கு இதுவரைக்கும் தெரியாது. அண்ணாச்சி கடையில முட்டை 75 பைசா விக்கித்து. தினமும் அஞ்சு முட்டை வாங்குறோம். வீட்லேயே போடுறாங்கனா ஏன் கடையில போய் காசு கொடுத்து வாங்கணும்? ஆயாகிட்ட அம்மாகிட்ட தினமும் முட்டை போடசொல்லணும். இவ்ளோ நாளா என் கண்ணுல காட்டாம அவ்ளோ பெரிய முட்டைங்கள அவங்களே அவிச்சு தின்றாங்களா!” என்று ஆச்சரிய கோபத்துடன் சொன்னான்.
இதை எதிர்பார்க்காத இஸ்மாயில், “டேய் இந்த முட்டை கண்ணுக்கு தெரியாதுடா, ovary releases microscopic eggs அதைத் திங்க முடியாது என்று விளக்கிச் சொன்னார். இருந்தாலும் அவன் திருப்தியடையவில்லை.
“சார், சின்ன கோழியே பெரிய முட்டை போடும்போது, பெரிய மனுஷங்க ஏன் சின்ன முட்டை போடணும்? அதைவிட பெரிசாத்தான போடணும்?” என்றான். “மாறா, லஞ்ச் முடிச்சிட்டு என்னை வந்து பார், விளக்கமா சொல்றேன்” என்றார். இன்றும் அந்தச் சம்பவத்தை நினைத்தால் சிரிப்பை அடக்கமுடியாது.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக