என் பள்ளிக்கூட வகுப்பாசிரியர் தன்னுடைய அண்மைப்பதிவு ஒன்றில்...
"சஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா, பிராரப்த கர்மா... என இப்படி எனக்கு புரிந்தும் புரியாமலும் பல உள்ளன. ஆனால் இன்றும் எனக்குப் புரியாத ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று... அந்தந்த பிறவியில் செய்த பாவங்களுக்கு அந்தந்த பிறவியிலேயே தண்டனை கிடைத்தால்தானே அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். மற்றவர்களும் வாழ்க்கையில் தவறு செய்யக்கூடாது என்று நினைப்பார்கள்.
ஏதேதோ பிறவிகளில் செய்ததற்கு இப்பொழுது தண்டனையை அனுபவிப்பது எந்த வகையில் நியாயம்? நல்லவர்கள் கஷ்டப்படுவதற்கும் கெட்டவர்கள் ஆனந்தமாக வாழ்வதற்கும் இந்த கர்மாவைத்தானே காரணமாகச் சொல்கிறார்கள்" என்று எழுதியிருந்தார்.
அவருடைய ஐயத்திற்குப் பதிலளித்தேன். "அந்தந்தப் பிறவியில் திருந்துவோர் வெகு சொற்பம். பெற்றோரின் வளர்ப்பு, செல்வச்செழிப்பு, முற்போக்குச் சிந்தனை, தீய சகவாசம், அஞ்ஞானம், அதர்மம், அதிகாரம், கோபம், என பலவித காரணங்களால் பாழ்பட இருந்து விடுகிறார்கள். 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது ஒரு செயலைச் செய்யும்போதே மனம் நினைத்தால் எவ்வித தீய கர்ம வினையும் அண்டாதபடி செயலில் திருத்தம் வரும்.
செய்த குற்றத்திற்கு ஒற்றை/ இரட்டை/ மூன்று ஆயுள் தண்டனை வழங்கினால் என்ன ஆகும்? இந்திய தண்டனைச் சட்டத்தில் குற்றம் புரிந்த இந்த தேகத்திற்கே தண்டனை. மூன்று ஆயுள் தண்டனையை எல்லாம் ஓரே ஆயுளில் அனுபவித்து முடித்துவிடலாம்.
ஆனால் தருமநெறிபடி நம் ஆன்மாவுக்கே தண்டனை. அதனால் அது குடிகொண்ட தேகமும் இன்னல்களை அனுபவிக்கிறது. முற்பகலில் மனத்தால் தேகத்தால் அனுபவித்ததுபோக உள்ள எஞ்சிய தண்டனையானது பற்று வைக்கப்பட்டு அது பிற்பகலில் தொடர்கிறது. சொச்சம் இல்லாமல் ஒரே பிறவியில் அவை தீர நம் ஆயுள் நீடித்திருக்க வேண்டும் அல்லது கர்மவினை யாவும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இம்மையில் நல்லவனாக வாழ்ந்து கஷ்டப்படுபவன் தன்னுடைய மும்மையில் செய்த தீவினையால் இது வந்தது என்பதை உணர்ந்து பொறுமை காக்கிறான் நற்பண்புடன் நடக்கிறான்.
அன்றைக்குச் சமைத்த உணவு அன்றே மீதமின்றிக் காலியானால் உத்தமம். ஆனால் பழையது தினமும் இருந்துகொண்டே இருக்கப் புதிதாய்ச் சோறும் சமைத்துக் கொண்டே இருந்தால் எப்போது மீதமின்றிச் சோறு காலியாவது? அதுபோல்தான் நம் சஞ்சித ஆகாமிய பாவங்கள். பழைய கர்மவினை தீரும் முன்பே புதிய பாவங்களை ஈட்டினால் அவை மலைபோல் குவிந்துவிடும். அதை அனுபவித்துத்தீர ஒரு பிறவி போதாது.
எப்படிப்பார்த்தாலும் நம் கர்மவினையை/ தலைவிதியைப் பிறவிதோறும் நாம்தான் பக்கம்பக்கமாய் எழுதிக்கொள்கிறோம். தீதும் நன்றும் பிறர் தர வாரா! நாம் அனைவரும் அவரவர் கர்ம வினையின் திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாம் எடுத்துச் செய்து அது செயல் ஓட்டத்தில் தவறாகப் போகும்போது அதன் பழியை நான்முகன் மீது சுமத்தி அதற்கு அவனைப் பொறுப்பாக்குவது என்பது அயோக்கியத்தனம். நாம் புண்ணியம் நிறைய செய்தாலும் அதனால் சுகப்படவும் ஒரு பிறவி அமையும்.
ஆக தெரிந்தே ஒவ்வொரு பிறவியிலும் தீவினைகள் செய்பவனுக்கு மறுமையிலும் புத்தி வராவிட்டால், தவறை உணர்ந்து ஆன்ம நிலை உயர்ந்து பிறப்பை அறுக்கும்வரை ஊழ்வினையின் கரகாட்டமும் கச்சேரியும் பிறவிதோறும் தொடரும்" என்றேன். 😂
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக