காலையில் சூரிய உதயத்திற்கு முன்பே வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போடவேண்டும். வீட்டின் உள்ளேயும் பெருக்க வேண்டும். முக்கியமாகத் தலைவாசல் சுத்தமாக இருக்கவேண்டும். வாசக்காலையும் கதவையும் பெருக்கிச்சுத்தம் செய்யும்போது உங்கள் குலதெய்வத்தின் கோயில் கருவறையைச்சுத்தம் செய்வதாய் நினைத்துச் செய்யுங்கள். அந்நேரம் வீட்டில் பெற்றோரோ/ பிள்ளைகளோ யார் முதலில் குளித்து முடித்தாலும், சுவாமி படங்களுக்குப் போட்ட நிர்மால்ய பூக்களையும், எரிந்த விளக்குத்திரிகளையும், ஊதுபத்தி சாம்பலையும் அப்புறப்படுத்தி விளக்கு ஏற்றவேண்டும். பலர் வீடுகளில் இப்படி நடப்பதில்லை. குடும்பத்தலைவி சமைத்து வீட்டு வேலை முடித்துப் பொறுமையாக ஒன்பது மணிக்குமேல் குளித்துவிட்டு வந்தபின் விளக்கேற்றுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.
அப்புறப்படுத்தியதை எல்லாம் நேரே குப்பைக்கூடையில் போடாமல் தனியே கவரில் போட்டு வைக்கவேண்டும். நிறைய வீடுகளில் முந்தைய நாள் சாப்பிட்டுப்போட்ட எச்சில் கழிவுகளின் தலையிலேயே இதையும் கூடையில் போடுவார்கள். அது அபச்சாராம்! பிறகு குப்பை வண்டியில் இதைத் தனியே போடலம். விளக்கேற்றும் இடத்தில் ஈரத்துணியால் துடைத்து சிறிய கோலமிட்டு விளக்கு ஏற்றவேண்டும். சுமார் இரண்டு மணிநேரமாவது விளக்கில் முத்துச்சுடர் நின்று எரியும் அளவு எண்ணெய் இருந்தால் போதும். மென்மையான நறுமணம் கமழ்வது சுபம். வீட்டில் பெரியவர்களுக்கே பல விதிகள் தெரியாமல் போவதால் இளைய தலைமுறைக்கு அதை எடுத்துச்சொல்ல முடிவதில்லை.
மாலையில் சூரியன் அஸ்தமனம் ஆகும்முன் என்னவெல்லாம் செய்யவேண்டும்? வெளியே காயப்போட்ட துணிகளை எடுத்துவிட வேண்டும். விளக்கு வைக்கும்முன் வீட்டைப் பெருக்கிடவேண்டும், அறையின் மூலைகளில் ஃபேன் காற்றில் சுழன்று கொண்டிருக்கும் தலைமுடி கற்றைகளை அப்புறப்படுத்த வேண்டும். அமங்கலமான பேச்சு, வாய்ச்சண்டை, சாபம், அழுகை, ஒப்பாரி ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். காலையிலோ /மதியமோ வீட்டில் அசைவம் சமைத்திருந்தால், அதன் துர்நாற்றம் வீட்டுக்குள்ளே சுற்றிக்கொண்டிருந்தால் நல்லதல்ல. அவை துர்சக்திகளை நிச்சயம் இழுக்கும்.
அதுபோல் ஈரத்துணிகளை வெளியே காயப்போட்டு இரவு முழுவதும் அப்படியே இருந்தால் அதுவும் நல்லதல்ல. அஸ்தமன நேரத்தில் பட்சிகளின் நிழல் பட்டு அந்த தோஷமும், ஒவ்வொருவரின் தேகத்தைப்பொறுத்து துர்சக்திகளின் ஆகர்ஷணமும் அதில் பீடிக்கும். பின்னிரவு நேரத்தில் இளம் ஆண்கள் தெருவோர மரத்தடியில் நின்று சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும். அவனுள் பல துஷ்ட சக்திகள் இறங்கி பாதக தசாபுத்தி நடக்கும்போது எல்லா தீயவழிகளிலும் ஆட்டிவைக்கும். பேய், பிரம்மராட்சஸன், மோகினிப்பிசாசு, எதுவேண்டுமானாலும் அவனைப் பிடிக்கும்.
இவன் என்னடா கதை அளக்கிறானா என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நான் இதை எல்லாம் சூட்சுமமாகப் பார்த்தவன். அதுபோல் கன்னிப்பெண்களின் விலக்குத்துணியையும் (சானிடரி நாப்கின்ஸ்), குழந்தைகளின் டயாபர்களையும் குப்பையில் வெளியே பகிரங்கமாக வீசக்கூடாது. அதனாலும் தோஷம் வரும். அதைத் தனியே கவரில் சுற்றி குப்பைவண்டியில் போடுங்கள். இப்பொருள்களை வைத்தே சாமக்கோடாங்கி கருந்தொழில் செய்வான்.
உங்களை அச்சமூட்டுவதற்காக இதைச்சொல்ல வரவில்லை. குடும்பத்தில் இதெல்லாம் கடுமையான எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். ஆச்சாரம் அனுஷ்டானம், சாஸ்திரம் சம்பிரதாயம் என்பது இக்காலத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் செயல்பாடு, அது நமக்குத் தேவையில்லை என்று நினைத்துப் புறந்தள்ளினால் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக