அது ஏப்ரல் 2011. திநகர் ரங்கநாதன் தெருவுக்கு எதிரே சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு ஒட்டினாற்போல் உள்ள தெரு முனையில் ஒரு சித்தரைக் கண்டேன். அவர் தாடி வைத்த முதியவர். நரைத்த தலையுடன் வெற்றுடம்போடு இடுப்பில் வெள்ளைத்துண்டு மட்டும் கட்டியிருந்தார். தெருவில் ஒரு வீட்டின் சுவரில் சாய்ந்துகொண்டு தெருவோரம் மண்மீது கால் மடக்கி கண் மூடியபடி உட்கார்ந்திருந்தார்.
கடை முன்னே நான் நின்று எதிரில் அங்கே அமர்ந்திருந்த இவரைப் பார்த்தபடி 'இவர் பிச்சைக்காரரா, சித்தரா? இங்கே என்ன செய்கிறார்?' என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று அவர் கண் திறந்து வேறு எங்கும் சுற்றுமுற்றும் பார்க்காமல் தலையைத் தூக்கி நேராக என்னை உற்று நோக்கிப் புன்முறுவல் செய்தபின் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். அதாவது தான் சித்தர்தான் என்பதை உணர்த்தினார். ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அவ்வழியே கடக்கும்போது அவர் அங்கில்லை. அவர் யார்? சித்தர் ஸ்ரீ ரெட்டியப்பட்டி சுவாமிகள் (1857 - 1923). 🕉️🙏 அவர் இன்னார் என்பது அப்போது எனக்குத் தெரியாது.
இன்று எதேச்சையாக என் பார்வையில் ஒரு காணொளி தென்பட்டது. மக்கள் நெருக்கடி மிக்க ரங்கநாதன் தெருவில் ரெட்டியப்பட்டி சித்தரின் ஆலயத்தை ரத்னா ஃபேன் ஹவுஸ் கட்டியுள்ளது என்றும், சுவாமிகளின் 100 ஆவது ஆராதனை விமரிசையாக நடந்தது என்றும் போட்டிருந்தது. தனக்கு இங்கே ஓர் ஆலயம் வரும் என்பதை 13 ஆண்டுகளுக்கு முன்பே ரங்கநாதன் தெருவுக்கு எதிரில் அமர்ந்து அவர் உணர்த்தினார் என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிந்தது. எல்லாம் சிவசித்தம்!
சித்தர்கள் எல்லோரும் அஷ்டசித்தியைக் கைவரப்பெற்றவர்கள். அவர்கள் அகக்கண் மூலம் நம்மைக் கண்காணித்து நம் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்கள். நாம் போகும் இடத்தில் நம் கண்ணில்பட நமக்காக் காத்திருப்பார்கள். இவர்கள் வட்டத்திற்குள் பல இலாக்காகள் உள்ளது. மிகப்பெரிய சித்து வலைப்பின்னல் உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. யாரை எங்கு வந்து யார் சந்திப்பார் என்ற தகவல் அவர்களுக்குள் பரிமாறப்படுகிறது.
-- எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக