'கல்கி'
கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய மறக்கமுடியாத ஒரு வரலாற்றுப் புதினமே 'பொன்னியின் செல்வன்'. அதை மீண்டும் வாசிக்க வாய்ப்பு கிடைத்தால் அருமை. முதலில் 1950-54 வரை கல்கியில் தொடராக வந்த பிறகு 2014 வரை அதே நாவல் ஐந்து முறை மீண்டும் மீண்டும் அதே இதழில் பிரசுரமானது. புத்தக வடிவில் வெளியாகும் சமயம் அதை பார்க்காமல் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி 1954 ல் மறைந்தார்.
ஓவியர் மணியம் கைவண்ணத்தில் ஒவ்வொரு கதா பாத்திரமும் மிளிர்ந்தது. இவர் ஓவியம் வரையும் போது பக்கத்திலேயே ஆசிரியரும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பாராம். தன் கதாபாத்திரங்களை வண்ணத்தில் காண அவ்வளவு ஆர்வம்!
நாவலின் இறுதியில் இடம்பெற்ற சில சுவாரசியமான 'கேள்வி- பதில்' சுருக்கமாக இங்கே. என் நினைவில் நின்றவை இவை.
கே: 'என்ன சார், இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சு போச்ச்சு?'
ப: 'இதுவே ரொம்ப வருஷ காலம் போயிருக்கு. மூன்றரை வருடங்களாக உங்களோடு கதாபாத்திரங்கள் பயணித்தது. வாசகர்கள் பொருமைசாலிகள்தான். '
கே: 'குந்தவை வந்தியத்தேவனை மணந்தாளா?'
ப: 'மணந்தார். 'ராஜராஜ தேவரின் திருத் தமக்கையார் வல்லவரையர் வந்தியத்தேவரின் மகாதேவியார், ஆழ்வார் பராந்தகக் குந்தவையார்' என்று கல்வெட்டில் குறிப்பு காணக் கிடைக்கிறது.'
கே: 'கல்யாணி என்னவானாள்?'
ப: 'சித்த சுவாதீனம் இல்லாமல் அவள் அங்கேயே திரிந்து கொண்டிருந்தாள் போலிருக்கு.'
கே: 'வைணவன் ஆழ்வார்க்கடியான் என்ன ஆனான்?'
ப: 'தனது ஒற்றறியும் வேலையை நடத்திக்கொண்டிருக்கிறான்.'
கே: 'மேற்கொண்டு அந்த கதா பாத்திரங்களை ஏன் வளர்க்கவில்லை?'
ப: 'கதையை எந்தக் காலத்தில் முடிக்கிறோமோ, அந்தக் காலத்தில் பாத்திரங்களை இருந்த நிலையிலேயே விட்டு விடுவதுதான் முறையென்று கருதினேன்.'
கே: 'வானதியின் கதி என்ன? குடந்தை சோதிடரின் வாக்கு பலித்ததா?'
ப: 'வானதியின் விஷயத்தில் பலிக்கிறது. வானதிக்குப் பிறக்கும் குழந்தையான இராஜேந்திரன் 'கங்கையும் கடாரமும் கொண்ட சோழன்' என்று பிற்காலத்தில் சரித்திரத்தில் புகழ் பெறுகிறான்.'
கே: 'வரலாறு சம்பந்தமாக இவ்வளவு ஆழமாக ஆராய்ந்து எழுத எப்படி சாத்தியமானது?
ப: 'நூல்கள்தான் எனக்குப் பெரிதும் உதவியது. நூலகங்களில் சோழ சாம்ராஜ்யம் பற்றிய பல விஷயங்களை குறிப்பெடுத்தேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பொன்னியின் செல்வன்
கதை நிகழ்ந்த இடங்களான தஞ்சாவூர், வீராணம் ஏரி, கொடும்பாளூர், பழையாரை, கோடிக்கரை, இலங்கை – போன்ற அத்தனை இடங்களிலும் வரலாற்று சரித்திர சான்றுகள் இன்றும் உள்ளன.'
இவைபோக இன்னும் பல கேள்விகளுக்கு பத்தி சொல்லியுள்ளார்.
'இந்தக் கதையின் ஆசிரியரைக் காட்டிலும் அறிவிலும் ஆற்றலிலும் ஆராய்ச்சியிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் மேலும் நவீனங்கள் படைப்பார்கள் என்று நம்புகிறேன்' இப்படியாக கல்கி எழுதி முடிக்கும் அந்த இறுதி வரிகள், அவர் எத்தனை எளிமையானவர் என்பதை நமக்குப் புரிய வைக்கும்.