About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ரூ.1,500 = ரூ.3,00,00000

என் நண்பரின் நண்பர் சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் கிரிப்டோ நாணய வர்த்தக சந்தையில் $20 முதலீடு செய்தார். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் அது சுமார் 1500 ரூபாய். திடீரென அந்த வர்த்தகம் மடமடவென உயர்ந்து போய் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா? ரூபாய் மூன்று கோடியே இருபது லட்சம். ஆத்தாடி! அதில் எக்ஸ்சேஞ் மூலம் நாம் பணம் போடவும் எடுக்கவும் சிறிய கமிஷன் கழிக்கப்படும். உலகம் முழுக்க வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பண கையிருப்பு குறைந்து போவதும், நாணயமில்லாத நாணயத்தில் போய் முதலீடு ஆவது பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
உட்கார்ந்தபடியே வருடத்திற்கு ஐந்து முதல் ஏழு லட்சம்வரை அதிலிருந்து அவர் தேவையான பணத்தை எடுக்கிறார். எஞ்சிய தொகை தொடர்ந்து சந்தையில் ஏறிக்கொண்டு இருக்கிறது. இவர்கள் எல்லாம் ஆரம்பத்திலேயே ICO அறிமுகமானபோது பங்கு கொண்டவர்கள். அன்றைக்கு ஒரு கிராம் தங்கம் ரூ.2200 இருந்த நினைவு. இவரை விட மிகப்பெரிய திமிங்கிலங்கள் இதில் உள்ளனர். இன்றைக்கு ஊரெல்லாம் இது பேசப்படுகிறது. ஒவ்வொருவரும் இதில் பல ஆயிரங்களையும் லட்சங்களையும் சக்திக்கேற்ப முதலீடு செய்து அதிர்ஷ்டம் எப்படி என்று பார்க்கிறார்கள். நிதி மேலாண்மையில் High risk, High return என்போம். இன்று எழுபத்துக்கும் மேற்பட்ட virtual நாணயங்கள் அறிமுகமாகிவிட்டது.
அதன்படி வர்த்தகத்தில் விழுந்தால் செம்ம அடிதான். தாறுமாறாக ஏறினால் கூரையை பிச்சிகிட்டு கொட்டும். ஆனால் இப்போது எத்தனை முதலீடு செய்தாலும் அது நாம் எதிர்பார்த்த லாபத்தை குறுகிய காலத்தில் ஈட்டாது. நம்ம ரிசர்வ் வங்கி சும்மா இருக்குமா? இதில் பணம் போட்டு லாபம் சம்பாதிப்பதை எப்படியாவது வருமான வரி சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறது. ரூபாயில் ரொக்கமாக மாற்றாமல் அந்த நாணயம் மூலம் மாற்று பரிவர்த்தனை செய்வதை தடுக்க முனைந்துள்ளது. நமக்கு வந்தவரை ஆதாயமே!
No automatic alt text available.

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

வடமொழியின் மாண்பு

தவத்திரு பாம்பன் சுவாமிகளின் கருத்தை உரைத்து வெளியான கட்டுரையை இங்கே பதிக்கிறேன். இது தமிழின உணர்வை சிதைக்கிறது என்று உங்களில் சிலர் நினைக்கலாம். அந்தத் தொகுப்பு இங்கே. 
     --*---- * -----*--
வடமொழியும் தென்மொழியும் நாவலந்தீவு நார்களுக்கு வாய்த்த இரு கண்களாம். இவ்வுண்மை உணராது வடமொழியைத் தூடனை புரிவோர் குமுகாயப் புண்களாம். வடமொழி கல்லாதவரைத் திருஞான சம்பந்தர் “மந்திபோற்றிரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்” என இழித்துரைத்தல் காண்க. பாம்பன் சுவாமிகள் திருஞானசம்பந்தர் வாக்கிற்கேற்ப வடமொழி கற்று இருகண்களையும் பெற்றார். நமக்கு அதனைச் சொன்னார். திருப்பா நூன் முகத்தில் சுவாமிகள் கூற்று “நமா ஆர்ந்த கடவுளுடைய நாமார்ச்சனத்திற்கும் நாம மந்திர செபத்திற்கும் சத்திபீஜ மணைந்த மந்திர செபத்திற்கும் பிறமந்திரங்கட்கும் அங்கியை முன்னிட்டு ஒற்று உத்திரகிரியைக்கும் வடமொழியே முக்கிய உதவியாகவும் இருத்தலின் இவ்விருதிறமுந் தமிழர் கொண்டுய்பவரே யாவர்” திருப்பா பக்கம் 17.
சுவாமிகள், வடமொழியறிவு பெற்றதனாலேயே சாம வேதத்திலே சுவாமி என அழைக்கப்பட்ட சிறப்பு ஆறுமுகச் சிவனுக்கே கிட்டியது என்பதைப் பாடலாய்ப் பாடியருளினார். தன் சாத்திர நூல்களில் எல்லாம் வேதாகம உபநிடதக் கருத்துக்களை மேற்கோளாக எடுத்துக் காட்டி குகபரத்துவக் கொள்கையை நிருவியருளினார். பிறப்பாலுயர்வு தாழ்வு இல்லையெனும் கருத்தை சாமவேத வஜ்ரஸுசிகோப நிஷதம் கொண்டு பரிபூரணானந்த போதம் நூலில் பகர்ந்தார். தமிழ்த் தென்றல் திரு.வி.கவும் சுவாமிகளின் வடமொழிப் புலமையை தன் வாழ்க்கைக் குறிப்பு நூலில் சொல்லியுள்ளார்.
“பாம்பன் சுவாமிகள் என்பவர் பாம்பனில் தோன்றிய குமரகுருதாச சுவாமிகள்-சுவாமிகள் வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் முழுதொருங்குண்ட காளமேகம்”
“குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த போது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர். அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்” திரு.வி.க.வாழ்க்கை குறிப்பு பக்கம் 127.
சுவாமிகள் வடமொழியிலியற்றிய “குமாரஸ்தவம்” தௌத்தியம், அட்டாட்ட விக்கிரகலீலை போல்வன என்றும் பாராயணத்திற்குரிய பனுவல்களாய் விளங்குகின்றன. 
Image may contain: 5 people

வெள்ளி, 15 டிசம்பர், 2017

மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

என் நண்பர்வீட்டு திருமணத்திற்குச் சென்றேன். அவர் முற்போக்காளர். அன்பளிப்பைத் தவிர்க்கவும், கொடுத்தால் எங்களை அவமதித்தகாக ஆகும் என்று கண்டிப்பாக பத்திரிகையில் போட்டிருந்தனர். அதனால் நாங்கள் எல்லோரும் கைவீசிக்கொண்டு போனோம். அவருடைய சகோதரியை மணமேடைக்கு அழைத்து வந்தனர். அங்கே இருவீட்டு மூத்தவர்கள் மட்டும் ரெண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தனர். பெரிய குத்துவிளக்கு இருந்தது. ஒரு மூதாட்டி அதை ஏற்றினாள்.
'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது." திருக்குறளை சொல்லிவிட்டு ஒரு தாத்தா தட்டில் இருந்த தாலியை எடுத்து மப்பிள்ளைக்குக் கொடுத்தார். அவர் பெண்ணின் கழுத்தில் கட்ட, கல்யாணம் முடிந்தது. என்னுடன் வந்த ஆந்திரா நண்பர் அப்போதுதான் போன் பேசிவிட்டு சுதாரித்துக்கொண்டார்.
"முஹுர்தத்திற்கு இன்னும் நேரம் இருக்கு இல்லையா?" என்று கேட்டார். சரியாபோச்சு. இப்போதானே கல்யாணம் முடிந்தது என்றேன். "எப்போ? இங்கதானே இருந்தேன். இன்னும் மேடைல அக்னி குண்டமே வளர்க்கலையே?" என்றார். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று நடந்த கதையைச் சொன்னேன். "ஆஆஹ்..." என்று வாய்பிளந்தார். நாங்களும் பந்திக்குப் போனோம். பஞ்சமுக குத்துவிளக்கு அக்னிதான் ஹோம குண்டம். சித்தர் திருவள்ளுவரின் ஒரு குறள்தான் வேதமந்திரம். அதுதான் வாழ்த்துப் பா. அங்கே ஒரு வைணவ புரோகிதர் சும்மா உட்கார்ந்திருந்தார். அவருக்கு என்ன வேலை என்று சத்தியமாகப் புலப்படவில்லை.
"ஹையோ.. இதுக்கா இவ்ளோ பெரிய சத்திரம் எடுத்து செலவு செய்யணும்.. இதை வீட்லயே பண்ணிருக்கலாமே? ஓட்டல்ல ஒரு ரிசப்ஷன் சிம்பிளா கொடுத்திருந்தா போதும்" என்றார் மிகுந்த ஏமாற்றத்துடன். நாம் என்னத்தை சொல்ல? அது அவரவர் விருப்பம்.
"மாங்கல்யம் தந்துனானே.." என்ற வாக்கியங்களை பாரதம் முழுக்க மணமேடையில் கேட்கிறோம். அது எந்த தெய்வத்தைப் பற்றியது? இது ஸ்லோகமா? ஹுஹூம். இது எதுவுமில்லை. "என்னுடைய வாழ்க்கையில் அங்கமாகி இருப்பவளே, இந்த மங்கல நாணை, உன் கழுத்தில் அணிவித்து நம் உறவை உறுதி செய்கிறேன். குணவதியே நூறாண்டுகாலம் வாழ்க!" என்பதுதான் அதன் பொருள்.
No automatic alt text available.

சிவன் சொத்து : பனைவோலை, பாதுகை

மாணிக்கவாசகர் திருவாசகத்தைப் பாட அந்த ஈசனே அந்தணர் வடிவாக வந்து, பாடல்கேட்டு, படி எடுத்து ஒலைச்சுவடியாக வடித்து கையொப்பமும் இட்டார். திருவாதவூரான் சொல்லக்கேட்டு தில்லையம்பலன் எழுதிய திருவாசகம் ஓலைக்கட்டு இன்றும் இருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள அம்பலத்தாடி மடத்தில் பாதுகாக்கப்பட்டு, தற்போது அது பாண்டிச்சேரி (பஜாஜ் ஆட்டோ ஷாப் எதிரில், முத்தியால்பேட்) அம்பலத்தாடி (தலைமை) மடத்தில் பூசனை செய்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. வருடம் ஒருமுறை மார்கழித் திருவாதிரை அன்று மட்டும் ஓலைச்சுவடி பேழைக்கு சிறப்பு தைலங்கள் சாற்றப்படும். ஆனால் மகா சிவராத்திரி அன்று இரவு 11-12 வரை மட்டுமே பொதுமக்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறதாம்.
அதுபோல், சுந்தரர் எமக்கு அடிமை என்று வழக்காடி திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்) வரை கூட்டிச்சென்று இறுதியில் கருவறைக்குள் மறைந்த ஈசன், தன் பாதுகைகளை விட்டுச்சென்றார். இன்றும் அது கிருபாபுரீஸ்வரர் கோயில் கருவறைக்கு முன்பாக சிறு கண்ணாடி பெட்டிக்குள் பாதுகைகள் வைக்கப்பட்டுள்ளது. போய் தரிசனம் செய்து இப்பிறவியை அறுத்திடுங்கள்.

தமிழை ஆண்ட கோதை

ஸ்ரீபெரியாழ்வார் வாழ்ந்த அந்த வீடு, ஆண்டாள் ஓடி விளையாடிய வீடு எங்குள்ளது? ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள வென்று கிழியறுத்தான் வீதியில் இன்றும் உள்ளது.
இங்கே நாம் காண்பது பெரியாழ்வாரின் பாதுகைகள், மற்றும் அவர் கையால் ஆராதித்த விக்ரகங்கள். பெரியாழ்வாருடைய 224வது வம்சத்தவர் ஸ்ரீ வேதபிரான் பட்டர் இவற்றை பூசித்து வருகிறார். கோயில் சமீபத்திலேயே ஆண்டாள் வாழ்ந்த திருமாளிகை உள்ளது. அங்கே சென்றால் மறவாது தரிசித்து வாருங்கள்.

வியாழன், 14 டிசம்பர், 2017

குல்கந்து ரெடி


ரோஜா. இதன் சுகந்தம், நிறம், குணம் எல்லாமே நமக்கு பல்வேறு மருத்துவ நலன்களை அள்ளித்தரும். குடல், ரத்தம், இதயம், நுரையீரல், மூளை புத்துணர்வு, ஞாபக சக்தி, கெட்ட கொழுப்பு கட்டுப்பாடு, வயிறு, கருப்பை/ஆண்மை கோளாறு, என்று பலத்துக்கும் நல்ல மருந்து. இதை தினமும் ஒரு ஸ்பூன் உண்டு வந்தால் மருத்துவப் பிரச்சனைகள் தீரும். நான் செய்யும் முறையை இங்கே சொல்கிறேன்.

ரோஜா 25 பூக்கள், தேன் ஒரு பாட்டில் (100கி). பனஞ்சக்கரை 100கி.

இதழ்களை உதிர்த்து, ஈரம் போக நன்கு துடைத்து, துணியில் பரப்பி ஆற விடுங்கள். உலர் பாட்டிலில் கொஞ்சம் இதழ்களை போடுங்கள், அதன் மேலே பனஞ்சக்கரை ஒரு ஸ்பூன் தூவுங்கள், தேன் கொஞ்சம் ஊற்றுங்கள், மீண்டும் இதழ் தூவுங்கள், இப்படியே செய்து முடியுங்கள். ஒரு மண்டலம் ஊறினால் நல்லது. அதற்கு முன்பே நன்றாக ஊறிடும். கிளறினால் இளகல் (அல்வா) போல் வரும். ஒரு ஸ்பூன் எடுத்து உள்ளங்கையில் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு ரசித்து உண்ணுங்கள். அருமை!

விருப்பப்பட்டால் இதோடு பேரிச்சம் பழ சிறு துண்டுகளையும், ஒரு சிட்டிகை கசகசா விதைகளையும், வெள்ளரி விதைகளையும் ஒவ்வொரு layer லும்  தூவி ஊறவிடலாம். கடையில் விற்கும் விலைக்கு நீங்களே செய்திடுங்கள்.

வாசனை /சென்ட்/ பன்னீர்/ நேச்சுரல் ரோஜா வாங்கி பயன் படுத்தவும். விலை சற்று குறைந்துவிட்டது. நான் 20 ரூபாய்க்கு 25 பூ வாங்கினேன். வாசமில்லா அலங்கார ரோஜா இதற்கு உதவாது.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

இயற்கை நடத்தும் பாடங்கள்

கன்னியாகுமரி கேரளா கடலோரங்களில் பத்து நாட்களாக திமிலங்கள், சிறு மீன்கள் எல்லாமே கொத்துகொத்தாக கரை ஒதுங்கிக்கொண்டிருந்தது. மேலோட்டமாக சீதோஷ்ண மற்றும் பூகோள பரப்பில் ஏதும் அசம்பாவிதமாக நமக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால் ஜீவராசிகள் உணர்ந்துள்ளன. மக்கள் அதுபற்றி பேசிவிட்டு சும்மா இருந்தனர். பிற்பாடு பலத்த காற்று தொடங்கியது.
முன்கூட்டியே கணித்துச்சொல்லி அச்சிட்டு விற்கும் பஞ்சாங்கத்தை வானிலை மையம் வழிகாட்டுதலாக பின்பற்றக்கூடாது. அது மூடநம்பிக்கையாகிவிடும். அறிவியலுக்கு உட்பட்டு வானிலை மையம் சொன்னால்தான் பரிசீலனை செய்யலாம் என்ற நிலைதான் இன்றும் உள்ளது. இந்நிலையில்தான் தென்கோடி மாவட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்குப் போய் மாட்டிக்கொண்டனர். பாதிபேர் திரும்பினர், சிலர் எங்கோ ஒதுங்கினர், சிலர் காணவில்லை. பஞ்சாங்கத்தில் சொன்னதெல்லாம் அப்படியே குறிப்பிட்ட தேதியில் நடக்கவேண்டும் என்று எந்த உத்தரவாதமுமில்லை. கோள்களின் நிலையும் நகர்வும் கணக்கிட்டு சொல்லும் ஒரு அனுமானம்!
நீண்ட கடல்பரப்பைக் கொண்ட தென் பகுதியில் கடல்வாழ் ஜீவராசிகளின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் வந்தால் அதை ஆராய்ந்து பார்த்து காரணம் அறிய முற்படுவதில்லை. கரை ஒதுங்கிய 20 அடி நீள திமிலங்களை நடுக்கடலுக்கு விரட்டினால் அவை மீண்டும் கரைக்கு வந்தது. இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதற்கே கடலுக்குள் போகப் பிடிக்கவில்லை எனும்போது மீனவர்கள் போகலாமா? ஏதோ அசம்பாவிதம் வானிலையிலோ பூமித்தட்டிலோ நிகழ வாய்ப்புண்டு என்பதை எல்லோருமே சொல்கிறோம், பதிவுகளைப் பார்க்கிறோம், அத்தோடு மறந்துபோகிறோம்.
வெளியே புயல் அடிப்பதற்கும் கடலில் திமிங்கிலம் ஒதுங்குவதற்கும் என்னங்க சம்பந்தம்? இதெல்லாம் பழைய முகநூல் பதிவும் செய்தி. மக்கள்.இதை நம்ப வேண்டாம், புரளி கிளப்ப வேண்டாம் என்று ஆட்சியரே சொன்னால், வேறு என்ன செய்ய?
"தெரியுது...பயப்பட்டா முடியுமா? பிழைப்புன்னு இருக்கே. கடலுக்குப் போகாட்டி எப்படி?" என்று மீனவர்கள் சொல்கிறார்கள். அவர்களை குறை சொல்ல முடியாது.
இதுபற்றி டிவியில் செய்தி பார்த்தபின் விமர்சனம் செய்துவிட்டு இருப்பதோடு நம் கடமை முடிந்தது. இனி அடுத்தடுத்து சீற்றங்கள் மிகுதியாகி வருகிற விளம்பி வருடம் (உகாதி) சித்திரையில் உச்சக்கட்ட பிரளயம் நிச்சயம்.

கணித்தது நடந்ததா?
~~~~~~~~~~~~

ஆற்காடு திருக்கணித பஞ்சாகத்தில் கணித்தபடி எவையெல்லாம் இந்த கார்த்திகை மாதத்தில் நடந்துள்ளது?
1) ஓக்கி புயல்  - குமரி மாவட்டம் பாதிப்பு
2) சூரியனிச் சுற்றி பரிவேடம் என்னும் Halo தோன்றும்போது 'பரிவேடம் பலத்த மழை' என்பது தமிழர்களின் சொற்றொடர்.
3) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை விரைவாக தயாரிக்க ஒப்புதல் போனவாரம் கையெழுத்தானது.
4) தெற்காசிய பகுதி இந்தோனேசியாவின் பாலி தீவில் Mt.Agung எரிமலை வெடித்துச் சிதறியது.
5) தூத்துக்குடி-குமரிமாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் புயலில் சிக்கி, அதில் பலர் இறந்ததாக அசுப செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.  
6) புதிதாக 'சாகர்' புயல் அந்தமான் அருகே உருவாகியுள்ளது. நாளை முதல் வட தமிழகம்- ஆந்திராவை நோக்கி நகர்ந்து வந்து மிரட்டும்.