நாம் பேசும்போது நம்மைச் சுற்றி தேவதைகள் இருந்து கொண்டே இருக்கும். அரூபமாகவோ ரூபமாகவோ இருக்கும். வீட்டிற்கு வெளியே காக்கையாக, வீட்டிற்குள் பல்லியாக இருந்து நம் எண்ண அலைகளை வாங்கிப் படித்துக் கொண்டு பிரதிபலிக்கும். உங்கள் அலுவலக அறையோ, வீட்டினுள்ளோ இதன் தாக்கம் தெரியும். தேக ஆரா வட்டத்தின் சக்தியைப் பொறுத்து இவை நம் எண்ணங்களை மாற்றி அந்நேரம் நம் நாவில் சில தீய/நல்ல சொற்கள் வராமலோ/வருமாறோ செய்யும். அஸ்து தேவதைகளை நாம் மதிக்க வேண்டும். நான் எண்ணற்ற முறை கண்கூடாக அனுபவித்துள்ளேன்.
அப்படியெல்லாம் எதுவுமில்லை! அவரவர் மனோ சுத்தியும் சித்தர் வழிபாட்டில் உள்ளதாலும் இத்தகைய அருள்வாக்கு வருவதுண்டு என்றும் சொல்வோர் உண்டு. அது அவரவர் கருத்து.
சில ஆண்டுகளுக்குமுன் நான் பணிசெய்த கம்பனியில் உடன் பணிசெய்யும் நண்பருடன் அவர் துறையின் புராஜக்ட் போக்கைப்பற்றி என் கேபினில் விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவருடைய நண்பர் ஒருவர் வந்தார். ‘என்ன காரசாரமா எதைப்பத்தி பேசறீங்க? எனக்கு ஆரம்பத்துல இருந்து கதை தெரிஞ்சாகணும்’ என்று அவரைக் குடைந்தார்.
‘ஐயே.. என்ன இந்தாளு வந்து இப்படி இம்சை பண்றாரே!’ என்று மனதில் நினைத்தேன். உடனே நான், ‘அது ஒன்றுமில்லீங்க.. அவர் சம்சாரத்துக்கு இது இரண்டாவது மாசமாம்.. அதைப்பத்தி சொல்லிக்கிட்டு இருந்தாரு.. வேறேதுமில்ல’ என்று அக்கணம் அடித்து விட்டேன். உடனே அவரைப் பார்த்து, ‘கங்கிராட்ஸ் நண்பா’ என்று கைகுலுக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.
பேந்தபேந்த முழித்த நம் நண்பருக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. ‘என்ன சார், நீங்க பாட்டுக்கு எதையோ சொல்லிவிட்டீங்க.. அந்த ஆளு ஓட்டவாய்’ என்று சொல்லி சங்கடப்பட்டார். ‘அட, நீங்க வேற! அவரை கலாய்க்கத்தான் சும்மா அப்படிச் சொன்னேன்’ என்று சொல்லி சமாதானம் செய்தேன்.
ஒரு வாரம் கழித்து நம் நண்பர், ‘சார், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நிஜமாவே என் வைஃப் இரண்டு மாசம் கேரியிங்... அன்னைக்கு நீங்க சொன்னதை அவகிட்ட நேத்து சொன்னேன். அவ நம்பல... அவருக்கு எப்படி தெரியும்னு கேட்டா சார்’ என்றார். நண்பர் என்னை வியப்புடன் பார்த்தார்.
‘ஆமா... உங்க சம்சாரத்துக்கே தெரியாதபோது.. எனக்கு மட்டும் எப்படித் தெரியும்? சும்மா வாயில் வந்ததை அன்றைக்கு அளந்து விட்டேன்’ என்று சொல்லிச் சிரித்தேன். இப்போது உங்களுக்கு இப்பதிவின் தாற்பரியம் புரிந்திருக்கும். ஆகவே நம் வாயால் கூடுமானவரை யாரையும் தூற்றவோ சபிக்கவோ கூடாது.