டமரானந்தர் அருளிய சிவநூல் சூத்திரம் பதினேழு என்ற நூலிலுள்ள பாடலைப் பார்க்கலாம். முப்பூ சரக்கை ‘சூட்சுமப்பூ’ ‘பூவழலை’ என்று சித்த பரிபாசையில் சொல்வார்கள். நமக்குத் தெரிந்து வழலை என்றால் கபம், சவுக்காரம் சோப்பு மட்டும்தான் நினைவுக்கு வரும். இந்த வழலை எனும் முப்பூவைச் சேகரிக்கும் முறை, அதன் மேன்மை, காயாதி கற்பத்தில் சிறிது சேர்த்தால் அதன் செயல்பாடு என்ன ஆகியவற்றைச் சொல்லியுள்ளார்கள்.
பூநீறு, கற்சுண்ணம், கல்லுப்பு ஆகியவற்றின் கலவை என்றும் சொல்வதுண்டு. முப்பூ என்பது நாம் சேகரித்துச் சமைக்க வேண்டிய வஸ்து இல்லை. அது இறைவனின் சிருஷ்டியில், அதீத வெப்பத்துடன் மின்னல் வெட்டும்போது கற்பாறைகள் உருகிட உற்பத்தியாகி மண்மீது தயாராகவே இருக்கும் பொருள் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். அகத்தியரும் தன் அமுத கலைஞானத்தில் இதையே சொல்லியுள்ளார்.
ஆக, இந்த அண்டம் என்ற பிரணவத்திலுள்ள நாதவிந்து பொருள்களை எல்லாம் யோகமார்க்கத்தில் ஒன்று சேர்த்துச் சமைத்தால், நம் பிண்டத்தில் இடகலை பிங்கலை சுழுமுனையில் சங்கமிக்க நம்முள் முப்பூ சுண்ணம் முடிவாகும் என்பது சித்தர்களின் மறைப்பு. சரக்கலை ரகசியம்!
முப்பூவிலும் ஆண் பெண் அலி தன்மைகள் உண்டு. ஆனால் இக்கால வைத்தியர்களோ, அப்படி எந்தப்பொருளும் உண்மையில் இல்லை, அது மறைப்பாகச் சொல்லப்பட்ட ஏதோவொன்று என்று சொல்வார்கள். வளர்பிறையில் வழலை சேகரிக்க உகந்த இடங்கள் எவையவை என்று போகர் தன்னுடைய பெருநூலில் சொல்லிக் காட்டியுள்ளார்.
கலியுகத்தில் பேராசைக் கொண்ட மனிதர்களின் கைக்குப் போகக்கூடாது என்பதால் அதற்கு நிறைய மறைப்புப் பெயர்களைச் சித்தர்கள் சொல்லி வைத்தனர். சல்லிவேர், சிப்பி, அமுரி, பழச்சார், குருவண்டு, இந்திரகோபம், கருங்கோழி, வழலை, சுரோணிதம், பனிக்குடம், பேரண்டம், விந்து, தலைபிண்டம், கல்லுப்பு, சவுட்டுப்பு, வெள்ளைக்கல், அண்டக்கல், அம்மம்மா என்று எண்ணிலடங்கா பெயர்களை உள்ளன. தனித்தனியே பிரித்துப் படித்தால் ஒவ்வொன்றும் விபரீத அர்த்தத்தைத் தரும்.
சூரியன் சந்திரன் அக்னி மூன்றும் சேர்ந்து இயற்கையில் நடத்தும் வேதியல் மாற்றங்களால் முப்பு கிடைக்கும் என்கிறது டமரானந்தர் பாடல். இயற்கைப் பாஷாணங்கள் எல்லாமே ஆயுள் விருத்தி காரணிகளாகும். ரகசியமாய்க் காக்கப்படும் இம்மூலக்கூறுகளின் உற்பத்தி ரகசியங்கள் சாமானியனுக்கு தண்டோரா போட்டு வெளியிடலாகாது என்பது சித்தர்கள் பின்பற்றும் நெறி. மீறி ரகசியத்தைச் சொன்னால் தலை சிதறி வெடிக்குமாம்.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக