சடை விரித்தாடும் அம்பலவாணன்
சிருஷ்டியில் விடுத்த ஆன்மாவை
அடை காத்துப் பத்திரமாய்ப்பேண
அழகுற அளித்த பெருங்காயத்தை
இடை வழியிலேயே களங்கப்படுத்தி
இச்சைகள் துர்குணங்கள் ஊட்டி
விடை காணாமலே பிறந்திறந்தோடி
வீணாய்ப் போனோம் நமச்சிவாய
ஆசை அதிகரித்து அகத்தை மாசாக்கி
ஆணவம் ஆத்திகம் கோலோச்சியாட
மீசை முறுக்கியே மும்மலமும் சேர்த்திட
மீண்டும் யமனின் தண்டனையேற்று
பூசை செய்யாமல் புண்ணியம் தேடாமல்
பாவியாய்ச் சிவநிந்தனைகள் புரிந்து
ஓசை கொடுத்த நாயகியை மதிக்காமல்
ஓதுவதைத் துறந்தோம் நமச்சிவாய
தடமிடும் ஆன்மா வினையறுக்கவே
தருமநெறி காக்கப் பிறவியெடுத்துப்
புடமிடும் குணங்கள் பெருங்கடல்தாவிப்
பாவம் ஈட்டாமல் நற்பேறடைய
நடமிடும் பொற்பதம் அசையவொரு
நளினமிகு குஞ்சித பாதந்தொட்டு
வடமிடும் காலன் மிரட்டும்போது
வாயாரச் சொல்வோம் நமச்சிவாய
மறை நான்கும் கைதொழும் கூத்தனை
மாசற்ற தேவாரத்தால் பாடித்தொழ
பறை அளக்கும் பரமன் பெம்மானைப்
பண்ணிசை சாமத்தால் நனைத்துக்
கறை படிந்த ஆன்மாவை வெளுக்கக்
கரங்குவிய வண்ணானைப் பணிந்து
முறை தோறும் பிணியில் சிக்காதோட
மந்திரம் சொல்வோம் நமச்சிவாய
புக்தி தசைகள் கிரகங்கள் பீடித்தாலும்
பண்புடனே கோளறு பதிகம் பாடியே
பக்தி நெறியில் பஞ்சாட்சரம் ஜெபித்து
பிரதோஷ காலம் சிவதலம் தொழுது
சக்தி பெற்றுச் சிவயோகமும் கைக்கூட
சித்தம் முழுக்க தசநாதங்கள் ஒலித்து
முக்தி சாலோக சாயுச்சியமும் அடைய
மறவாமல் சொல்வோம் நமச்சிவாய
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக