About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 30 ஜூலை, 2023

மந்திர சுவரூபமாகும் சொற்கள்!

சங்க இலக்கியங்களில் பலவிதமான கவிப்பாடல்களைப்பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். பக்தி, சந்தான விருத்தி, ஆயுள் ஆரோக்கிய ஆசிகள் நல்கும் வாழ்த்து, வேதனைப்படும் உயிர் விடுதலை பெற பிரார்த்தனை, எதிரியைத் தண்டிக்க அறம் பாடுதல், சரம கவி இயற்றல் என்று பல்வேறு ரகங்கள் உள்ளன. உற்ற நேரத்தில் அருள்புரி என்று சித்தர்களை, குலதெய்வத்தை வேண்டிப்பாடினால் உடனே நிறைவேறும்.

இதெல்லாம் நம்பும்படி இல்லை என்று இக்காலத்தில் நினைப்போரே அதிகம். சமஸ்கிருதம் தமிழ் மட்டுமல்ல எந்த மொழியில் பாடினாலும் பலன் உண்டு. பாடும் கவிஞனின் மனத்திலும் வாக்கிலும் பாடப்படும் கவிப்பாடலிலும் தன்னலமற்ற சக்திவாய்ந்த பிரயோகமும் தெய்வீகமும் இருக்கவேண்டும். அக்காலத்தில் ஔவையார், காளிதாசன், நந்திவர்மன், கம்பன் போன்றோர் பாடிய கனமான நடையில் நிறை இலக்கணம் ஏற்றிய பாடல் போன்று இருக்கவேண்டும் என்பதில்லை. எழுதப்படிக்கத் தெரியாத ஊமையன் மானசீகமாகப் பாடினாலும் அதற்குப் பலனுண்டு.

சமூக வெளியில் இரண்டு வரிகளில் வாழ்த்துவது இயல்பான ஒன்று. ஆனால் கூடியவரையில் நெருங்கிய நட்புகளை வாழ்த்த பிரத்தியேக தனிப்பாடல்களைத் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அக்கணம் தருவது என் பழக்கம். நாம் பாடும் நேரம் நம்முடைய ஜீவகாந்த எண்ணங்கள் பரமாகாச வெட்டவெளியில் எதிரொலிக்கும், அந்த அலைகள் ஜீவராசிகள் மூலம் கடத்தப்பட்டு அந்தந்த நபரை வந்தடையும். அவர்களும் உடனே அதை உணர்ந்து ஆமோதிப்பார்கள். எனக்குத் தெரிந்து மதுரை சென்னை இலங்கை லண்டன் ஆகிய தலங்களிலுள்ள நண்பர்கள் என் எண்ணங்களைத் திறம்பட கிரகிக்க முடிகிறது. இங்கே அவர்களுடைய பெயர்களைச் சொல்லக்கூடாது.

அன்றாடம் எந்த மனநிலையில் இருந்தாலும் நல்ல இன்சொற்கள் சொன்னால் மட்டும் போதுமா? போதாது! ஏன்? சில சமயங்களில் வாக்குவாதம் முற்றிப்போய் பாதிக்கப்பட்டவர் கோபத்தில் “நீங்க நல்லா இருப்பீங்கடா” என்று அழுதுகொண்டே அனல் கொதிக்கும் புண்பட்ட மனத்துடன் சொன்னாலும் அது கேடு விளைவிக்கும். “மனஸா வாச்சா கர்மனா” என்றுதான் கிருஷ்ணர் சொல்கிறார். 

“ஆமா, சொன்னா உடனே பலிக்குற அளவுக்கு இக்காலத்துல ஒரு பய கிடையாது. இப்படி சும்மா உதார் பேசி பயமுறுத்துறாங்க” என்று தவறாக எண்ணுவோர் உண்டு. கல், தாவரம், மீன், பறவை, நாய், பசு, மனிதர் என்று இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா சரம்-அசரம் ஜீவனும் சக்தி அலைகளை வீசும் நம்மை வாழ்த்தும் என்பதை மறந்திடக்கூடாது.

இரண்டு நண்பர்களுக்காக வாழ்நாளில் இதுவரை இருமுறைதான் மோட்ச கவி பாடியுள்ளேன். பாடிய இரண்டே சாமத்தில் அவர்கள் இறையடி சேர்ந்தனர். பதிவிடும் பதிகங்களின் வீரியத்தை அப்போதுதான் இறைவன் எனக்கு உணர்த்தினான். அது முதலே சொற்பிரயோகங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறேன். ஓம் நமசிவாய! 🙏

-எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 18 ஜூலை, 2023

பிறவி எடுக்க அச்சம், பாவம் செய்ய மோகம்!

மனிதன் மரணித்தபின் அவ்வுடலைத் தகனம் செய்யாமல் வைத்தால் என்னவாகும்? 

இயற்கையாகச் சித்தியாகும் யோகிகளின் தேகம் பல மணிநேரங்கள்/ நாட்கள் ஆகியும்கூட கெடாமல் இருந்துள்ளது. ஆனால் நம்மைப்போல் சாதாரண மனிதர்களின் நிலை அப்படியல்ல. அவரவர் உடல்வாகைப் பொறுத்து வெப்பம் மெள்ளக்குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமல் போகும். அந்தச்சருமம் உயிரோட்டப் பொலிவை இழந்து மாற்றமடையும். என்னதான் வாசனாதி ஊதுபத்திகள் ஏற்றினாலும் அதன் மண இயல்பை மாற்றும் வல்லமை தசவாயுக்களுக்கு உண்டு.  

1 நாள் கழித்து ஈக்கள் முட்டையிடத் தொடங்கும், 2 நாள் கழித்துப் புழுக்கள் தோன்றுகின்றன, 3 நாட்களில் நகங்கள் விழும், 4 நாட்களில் ஈறுகள் கரையும், 5 நாட்களில் மூளை உருகும், 1 வாரத்தில் வாயு தேங்கி வீங்கி வயிறு வெடிக்கும், 2 மாதங்களில் உடல் உருகித் திரவமாகிறது. தக்க சீதோஷ்ண நிலை உறுதுணையாக இருந்தால் உடல் நிலைப்பொறுத்து ஒரு மாதத்திலேயே சதையும் கொழுப்பும் ஒழுகிக் காணாமல் போகும். ஆக எப்படியும் அறுபது நட்களுள் அடையாளம் இல்லாமல் வெறும் எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சும்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஒரு வருடத்திற்குள் ஒரு புழு/பூச்சி (ஆண்/ பெண்) உருவாகி வயிற்றில் தங்காதா என்று புதிதாய்த் திருமணமான பெண்ணின் உறவுகள் காத்துக் கிடக்கும். யாத்திரைப் போகாத தலங்கள் இல்லை, இருக்காத விரதங்கள் இல்லை, பார்க்காத வைத்தியர் இல்லை, எடுக்காத முயற்சிகள் இல்லை என்று பெரும் கடுந்தவத்திற்குப்பிறகு கரு தரித்து வயிற்றில் ஒரு சிசு உருவாகி, பிரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகு பிரசவத்தில் குழந்தைப் பிறக்கிறது. 

கர்ப்பத்தில் இருக்கும்போது முதல் 2-3 மாதங்கள் சதைப்பிண்டமாக இருந்தபின் ஆறு மாதங்களில் விதிக்கப்பட்ட ஆன்மா ஒன்று அதில் நுழைந்துத் தங்கும். அப்போது ஊழ்வினை கனத்தால் தலை குப்புற கவிழும். வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்த நீர் நிறைந்த கருவறைக் குடத்தினுள்ளே அச்சத்தில் அவ்வான்மா திணறும் தப்பிக்க நினைக்கும். “நான் போன பிறவிகளில் ஆட்டம் போட்டேன், தலைக்கனம் பிடித்து ஆணவத்தில் பாவங்கள் புரிந்தேன், இனி செய்ய மாட்டேன். மன்னித்துவிடு. தப்பிக்க வழியற்ற ஆரண்யத்திலிருந்து என்னைப் போகவிடு இறைவா” என்று மன்றாடிக் கெஞ்சும். 

ஆனால் தூய்மையாகப் பிறந்தபோதும் உள்ளே இருக்கும் திமிரு பிடித்த ஆன்மா மெள்ள தன் வாசனையை உணர்ந்து மீண்டும் ஆட்டம் போடும். கர்ப்பத்தில் இருந்தபோது இறைவனிடம் சத்தியம் செய்து கெஞ்சியதை காற்றில் விடும். காலப்போக்கில் பிராரப்த கர்மாவின் பிடியில் சிக்கி விட்டகுறைப்பயனாக மீண்டும் ஆகாம்ய பாவங்கள் ஈட்டி நரகதிக்கு வழி தேடிக்கொள்ளும்.

மரணித்தபின் வெளியேறிய ஆன்மா போக்கிடம் இல்லாமல் அங்கேயே சுற்றிக்கொண்டு இருக்கும். மீண்டும் அந்த உடலுக்குள் எப்படியேனும் நுழைய வழியுண்டா என்று தவிக்கும். ஆனால் உடலின் நவதுவாரங்களை அடைத்துவிடுவார்கள். இறுதியாக அது ஆசனவாய் வழியாகவாவது நுழைய முடியுமா என்று நினைக்கும். ஆனால் கால் கட்டைவிரல்களைச் சேர்த்து இறுகக்கட்டிவிட ஆசனவாய் வழியும் மூடிவிடும். அதன் கடைசி முயற்சியும் தோல்விதான். தகனமாகிக் காரியங்கள் முடிந்து கடைசி நாளில் சூட்சும தேகம் பெறும் அந்த ஆன்மாவைக் கிங்கர்கள் இழுத்துப் போவார்கள். 

அச்சமூட்டும் கர்ப்பத்திலிருந்து வெளியே தப்பித்துப்போனால் போதும் என இருந்த நிலை மாறி, கடைசியில் வெளியே போன ஆன்மா மீண்டும் அவ்வுடலுக்குள்ளே வர வழியில்லையா இறைவா என்று கதறும். அது இறைவனைத்தவிர அதன் வீட்டார் யார் காதுகளுக்கும் விழாது. அதன் வாரிசு எள்ளும் நீரும் இறைத்து அதற்குப் பிண்டம் வைத்துச் சோறு போட்டால் உண்டு. இல்லாவிட்டால் போக இடமின்றிக் கோபமாக அலைந்துத் திரியும். 

கோபப்பட அதற்கு யோக்கியதை உண்டா? உயிருடன் இருக்கும்போது ஆட்டம்போடு என்று இறைவனா சொன்னான்? மேன்மேலும் வினைகளைச் சேர்த்துக்கொள்ளச் சொன்னது யார்? “நான் ஆதியில் படைத்து உயர்நிலைக்கு அனுப்பிய ஆன்மா எப்படி அப்பழுக்கில்லாமல் தெய்வீகமாய் இருந்ததோ அப்படித்தான் என்னிடம் வந்து சேரவேண்டும். தக்க குருநாதர் வந்து உன்னை நல்வழிப்படுத்தும்வரை பிறவிதோறும் அடிபட்டு மிதிபட்டுப் பாடம் கற்றுக்கொள்” என்பான். அந்த ஆன்மா பாவம் செய்து கெட்டதாகவே இருந்தாலும் அதன் சந்ததியர் அதைத் தென்புலத்தார் என்ற அளவில் கும்பிடவேண்டும், அதனிடம் ஆசி பெற வேண்டும் என்கிறது நம் சாஸ்திரம். 

ஆதலால் இப்பிறவியில் இக்கண்ணாமூச்சி விளையாட்டிலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் தர்மநெறி பின்பற்றி, குருவின் சொல் ஏற்று அதன்படி நற்கதிக்கு வழியைத்தேடி மோக்ஷம் அடையவேண்டும்.

- எஸ்.சந்திரசேகர்



வியாழன், 13 ஜூலை, 2023

அடிமுடி சித்தர்

அடி அண்ணாமலை கிரிவலப் பாதையில் அடிமுடி சித்தரின் ஜீவசமாதி உள்ளது. இவர் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து அரிய மூலிகை மருத்துவத்தால் பக்தர்களின் நோயை குணமாக்கியவர். நவகண்ட யோகம் செய்தவர். கல்லைத் தொட்டுத் தந்தால் தங்கமாகும், காய்ந்த இலையைத் தந்தால் திருநீறாக மாறும். இந்த அடிமுடி சித்தர்தான் முதன்முதலில் கிரிவலப் பாதையை ஏற்படுத்தினார்.

இவருடைய குரு கௌதம முனிவர். இவர் கிரிவலப் பாதையை ஏற்படுத்தும்போது அங்கே வழியில் அகலாமல் இருந்த பெரிய கனமான பாறை ஒன்றைத் தன் ஜடாமுடியால் கட்டி இழுத்து ஓரமாகப் போட்டாராம். இன்றும் கௌதம நதி இவ்வூருக்கு அருகாமையில் ஓடுகிறது. மாசி மகம் தீர்த்தவாரி உற்சவம் அங்கு நடக்கும். அதை நம்முடைய பழைய பதிவில் விரிவாகப் பார்த்துள்ளோம்.

பறக்கும் பெண் சித்தர் அனந்தாம்பாள் (எ) ஸ்ரீசக்கரம் (எ) சக்கரை அம்மாவுக்கு உபதேசம் தந்த குருதான் அடிமுடியார். இவர் சர்வ சாதாரணமாகப் பல அற்புதமான சித்துகளை நிகழ்த்தியவர்.

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே

அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா...     (கந்த குரு கவசம், பா.45)

-எஸ்.சந்திரசேகர்





செவ்வாய், 11 ஜூலை, 2023

தில்லையில் வாழ்ந்த மூவாயிரம்!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் முதுகலை படித்தபோது தவறாமல் கோயிலுக்குப் போவேன். அவ்வூரில் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தீட்சிதர் குலத்தின் மூத்தவர்களைப் பார்ப்பேன். அவர்கள் கருத்த தேகத்துடன் இருந்தனர்.  தூரத்திலிருந்து பார்த்தால் யார் என்றே  தெரியாத அளவுக்கு நிறம்‌. நெற்றியில் விபூதி பட்டை, பூணூல், முன் குடுமி மட்டும் பளிச்சென்று தெரியும். இவர்களுடைய கருத்த தோற்றத்திற்கான காரணம் அப்போது எனக்குத் தெரியாது.

இவர்கள் தங்களுக்குள்ளேயே சம்பந்தம் செய்து கொள்வதால் தங்கள் ஆதிகுடி மரபணு தன்மையின் அடையாளத்தை இழக்காமல் உள்ளனரோ என்று நினைப்பேன். அவர்களுடைய பழைய ஓடு வீடுகள் பலகாரக்கடையைப்போல் பொலிவின்றி இருந்தது. ஓரிருவர் வீட்டு வாசலில் மட்டும் சைக்கிள் இருந்தது. இன்றைய தலைமுறையினரின் தோல் நிறம் மெள்ள மாறி வருவது கண்கூடு. வாழ்வாதாரம் ஊசலாடுவதால் இதுவரை ஆற்றிய சிவத்தொண்டு போதும் என்று முடிவெடுத்து சில ஆண் வாரிசுகள் வேறு வேலைக்குப் போய்விட்டனர். தில்லைக்கு உள்ளேயே சொந்தங்களில் சம்பந்தம் செய்து வருவதால் குழந்தைப்பேறு இல்லாமல் போகும் நிலையே உள்ளது. அதனால் இக்காலத்தில் கோத்ர பிரவரம் சம்பிரதாயம் மீறி தீட்சிதர்கள் மணமுடிக்க சாத்தியமுண்டு.

கடந்த வாரம் தீட்சிதர்களை இலக்காக வைத்து நடந்த அக்கப்போர் அனைவரும் அறிந்ததே. சந்தடி சாக்கில் அவர்களைப் பற்றிய வதந்திகளும் பரப்பப்பட்டன. அது என்ன? பராந்தக சோழன் வேய்ந்த பொன் கூரையின் ஆணிகளைப் பிய்த்து எடுத்து தீட்சிதர் குடும்பத்துப் பெண்கள் நகை செய்து கொள்கிறார்களாம். கனகசபை மீது ஏறி நின்று தரிசிக்க அங்கே பணம் தர வேண்டுமாம். சிவன் சொத்தை விற்று ஜீவனம் செய்கிறார்களாம். இப்படிச் சில பரப்புரைகள். கனகசபை சர்ச்சை இன்னொன்று. கனகசபை மேடை என்பது சிறப்பு நாளில் இறைவனை அங்கே எழுந்தருளச்செய்து அபிஷேகம் பூசைகள் நடத்தும் புனிதமான இடம். அவர்களைத் தவிர யாரும் அங்கே நிற்கவோ பஞ்சாட்சரப்படி ஏறி மிதிக்கவோ விதியில்லை. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளில் அதை அனுமதித்தனர். இப்போது சீருடையில் பெண் காவலர்கள் உள்ளே திபுதிபு என ஏறிப்போய் நிற்பதை டிவியில் காட்டினார்கள். 🤔

"சிவன் சொத்து குல நாசம்" என்ற முதுமொழி இவர்களுக்குப் பொருந்தாது. மூத்தவனாம் சிவனின் சொத்து இவர்கள் சொத்து, இவர்கள் உண்ணும் சோறு சிவனுடையது. கைலாய பூதகணங்கள் எல்லாம் அந்தணர்களாகி சிவனிடம் தீட்சை பெற்றபின் சிவனே இவர்களைத் தில்லையில் அமர்த்தினான். அவர்களே தில்லை மூவாயிரத்தார் (எ) தீட்சிதர்கள். இவர்களைப் பேணினால் சிவத்தொண்டு புரிந்த புண்ணியம் கிட்டும் என்பதால் ஒவ்வொரு காலகட்டத்தில் மன்னர்கள் கோயிலை விரிவாக்கி நிலங்கள் மானியங்கள் வழங்கினார்கள். இன்று பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே உள்ளது, எங்கே போனது என்பது இவர்களுக்கே தெரியாது. அதிக அளவில் அந்நியர் படையெடுப்பின்போது கோயில் சூறையாடப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. 

தில்லை அந்தணர்களை வைத்தே ஈசன் பல திருவிளையாடல்கள் புரிந்தான் என்கிறது திருத்தொண்டத்தொகை மற்றும் பெரியபுராணம். நந்தனாரின் மேன்மை, பூட்டிக்கிடந்த அறையிலிருந்து எடுத்து நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருமுறைகள், மாணிக்கவாசகர் பாடியதை ஈசனே சுவடிகளில் தன் கையால் படியெடுத்த நிகழ்வு, போன்ற பலவற்றைச் சொல்லலாம்.

இக்குலத்தினரின் எண்ணிக்கை இன்று 150ஐ தாண்டவில்லை. ஆண்- பெண் சதவிகிதம் சமன்பாடின்றி உள்ளதும் கஷ்டம்தான். அவர்களை நசுக்கிவைக்க சமூக-அரசியல் எதிர்ப்புகள் வலுக்கின்றன. ஒரு கட்டத்தில் ஆதி தீக்ஷிதர் வம்சத்தில் அந்த ஆதி மரபணு தொடராத நிலை வரலாம். இக்கலியுகத்தில் அவர்களுக்கு விதிக்கப்பட்டது அவ்வளவுதான் என்றாலும் இன்றும் அவர்களுள் சிவனும் ஒருவனாக இருந்து அவர்களைக் காத்து வழி நடத்துவது சிறப்பு. தனி நபர் அளவில் அவர்கள் செய்யும் தவறுகள் ஏதும் இருப்பின் அது அவர்களையும் சிவனையுமே சேரும். டிவி செய்திகளைப் பார்த்து இவர்களைப் பற்றி ஆர்வக்கோளாறில் நாம் விமர்சனம் என்ற சிவநிந்தனையைச் செய்யாமல் இருப்போம். 🕉️🙏

-எஸ்.சந்திரசேகர்



வியாழன், 6 ஜூலை, 2023

ஒரு யோகியுடன் உரையாடல்!

என் மெசஞ்சர் உள்பெட்டியில் பலருடன் பேசிய மிகப்பழைய உரையாடல்கள் எல்லாம் இருக்கிறது. அதில் வேண்டாத சிலவற்றை நீக்கலாமென நினைத்து பார்வையிட்டேன்.  நான் மறந்துபோன /தொடர்பில் இல்லாத பல பெயர்கள் இருந்தன. அதில் ஓர் உரையாடல் மதுரையைச் சேர்ந்த வாசி/அஷ்டாங்க யோகி திரு. வி. ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களுடையது.

ஏழாண்டுகள் பழைமையான தகவலைத் திறந்து வாசிக்கும்போதுதான் இருவரும் என்னென்ன உரையாடினோம் என்பது புலப்பட்டது.

என் ஆன்மிக நிலையைப் பற்றியும் பின்புலத்தில் என்னைக் கண்காணித்து வழிநடத்தும் சித்தர்கள் பற்றியும் அதில் சொல்லியிருந்தார். பெரும்பாலும் ஐயா இரவில்தான் தொடர்பில் வந்துள்ளது தெரிந்தது.

என் பிறப்பு முதல் சித்தர் போகர் பிரான் என் தீக்காயத்திற்கு வைத்தியம் செய்தது வரை துரிய தியானத்தில் சென்று அவர் கண்டுணர்ந்து விவரித்தார். வாசி/ அஷ்டாங்கம் குறித்து விவாதங்கள் செய்துள்ளேன். ஒருவர் மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திட வாசியும், உடல் அழியாமல் இருக்க அஷ்டாங்கமும் தேவை என்றால் எதைத் தேர்ந்தெடுத்து ஆழமாகக் கடைப்பிடிப்பது? என்று கேட்டேன். அதற்கு அவர் சிலருடைய விருப்பங்களைச் சொல்லி தன்னுடைய கட்டுரையின் link-ஐ அனுப்பினார். அதன்பின் இடைப்பட்ட காலங்கள் நான் அவருடன் தொடர்பில் இருக்கவில்லை.

ஆக நம் ஆன்மா மீண்டும் பிறக்காமல் இருப்பதே மரணமில்லாத பெருவாழ்வு. இந்த உடலுக்கு அழிவே வராமல் இருக்க வேண்டுமானால் அது உயர் வித்தை. அதை நிலைநிறுத்த உபாயங்கள் தேவை என்று சித்தர்கள் சொல்லியுள்ளனர்‌. "வந்த நோக்கமும் யுகாந்திர காலமும் முடிந்தால் கல்பதேகமும் ஒருநாள் மண்ணுக்கும் போகவேணும்" என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுவது மெய். சித்தியும் யோகமும், சித்தியும் மருத்துவமும் இரு வழித்தடங்களாக இருந்து வருகிறது. சமாதியில் அமர்ந்த சித்தர்களில் சிலர் காயகற்பம் உண்டும், சிலர் யோகம் மட்டுமே கையாண்டும் இருந்தனர் என்பது தெரிகிறது.

நம்மைப் பொறுத்தவரை ஆன்மாவுக்கு வீடு கிடைத்தாலே உத்தமம்! இவ்வுடலை உறுதியாக்கிக் குறிக்கோளின்றி நீட்டித்து வைத்துக்கொண்டு இக்காலத்தில் என்ன செய்ய? 

"பின்கலையும் இடகலையும் மாறும் போது

அறிவான சுழிமுனையில் மனதை வைத்து

அசையாமல் ஒருமனதாய்ப் பார்க்கும் போது

குறியான சிவயோகம் சித்தியாச்சு

கோடி சென்மம் சித்தரைபோல் வாழலாமே"

என்பது வாசியோகம் பற்றி சித்தர்களின் வாக்கு. 



ஐயா அவர்கள் சொன்னதுபோல் இது எனக்குச் சித்தி ஆனதா? ஆகியது என்பதை இரு தருணங்களில் கண்டு உணர்ந்தேன். எப்படி என்பதைச் சொன்னால் அச்சப்படுவீர்கள்‌ என்பதால் இங்கே சொல்லாமல் ரகசியமாக வைக்கிறேன். வாசியோகப் பயிற்சி என எனக்கு எதுவுமில்லை என்றாலும் ஜாதக ரீதியாகக் கோள்களும், மூதாதையர் ஆசியும் என்னுள் வாசியை இயல்பாய்த் தூண்டி நடத்தியுள்ளது என்பது புரிந்தது. எல்லாம் சிவசித்தம். 🕉️

-எஸ்.சந்திரசேகர்