About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 11 மார்ச், 2017

பிறவியை அறுக்கவேண்டும்

என்னுடைய கடந்த பதிவில் போகரின் ஜெனனங்கள் பற்றி சொல்லி இருந்தேன். ஒரு நண்பர் “அப்படியெல்லாம் மறுபிறப்பு என்ற கான்சப்ட் இல்லவே இல்லை” என்று சிவவாக்கியரை மேற்கோள் காட்டியிருந்தார்... பதினெண் சித்தர்களில் போகர் சிவவாக்கியர் போன்றவர்கள் சற்று முற்போக்கு சிந்தனைகள் கொண்டவர்கள் என்பதை ஏற்கனவே நம் பதிவில் பார்த்துள்ளோம். ஆனால் சிவவாக்கியர் மட்டும் மறு பிறவி கூற்றை மறுத்துள்ளார். இன்று அதைப்பற்றிய ஒரு பதிவுதான் இது.
“கறந்த பால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே”. சிவவாக்கியருக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை என்பதை சிவவாக்கியத்தில் சொல்லிவிட்டார். அதற்கு தம்முடைய நோக்கில் பல உதாரணங்களையும் முன் வைக்கிறார்.  

'இறந்தவர் உயிர்ப்பதில்லை' என்று சொல்லாமல் 'இறந்தவர் பிறப்பதில்லை' என்று பொதுவாக சொல்லியுள்ளார். அதனால் மறுபிறப்பு பற்றிதான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எப்படிப்பட்டவர் இறந்தால் மீண்டும் பிறப்பதில்லை என்பதை பாடலில் ஆய்ந்துதான் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது,  உயர்  நிலையை அடைந்த பால், முழுமை பெற்ற  வெண் சங்கு, பூத்திட்ட பூ, முற்றிய காய் போன்ற முதிர் நிலையை எட்டிய எதுவும் மறு பிறப்பு அடைவதில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். ஆனால் மேம்போக்காக இதில் பொருள் விளங்காது. ஆக, இவர் சொன்னது முற்றுபெற்ற ஞானிகளை குறிக்கலாம்.
“இப்பிறப்பி னோடிங் கெழுபிறப்பும் அன்றியெனை” “இனிப்பிறவா நெறி எனக்களித்து அருளிய தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே' என்று வள்ளலார் திரு அருட்பாவில் தீர்க்கமாய் சொல்கிறார். சாதல்-பிறத்தல் என்னும் சுழற்சியில் பிறந்த உயிர்களாகிய நாம் இருக்கிறோமே என்பதே வள்ளலாரின் வேதனையும் வாதமும்.
“உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.” அதாவது சாக்காடும் பிறப்பும், உறங்குவதும் விழித்தலும் போல இயல்பாய் மாறிமாறி வரும் என்பதும்;
 “எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்“.. பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால அவரை ஏழு பிறப்பிலும் தீவினைப் பயன் தீண்டாது என்கிறார் வள்ளுவர். பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவன் அடியை சேர வேண்டும் என்று ஒரு குறளில் உணர்த்தியுள்ளார்.
குருநாதர் போகர் தன் சப்தகாண்டத்தில் மறுபிறவி பற்றி:
“தானான கோபத்தால் வந்தமுறையாலே தாக்கான ஜெனனமும் பலவுமாகும், மானென்ற ஜெனனமாய் ஜெனிப்பதெல்லாம் முன்செய்த பலாபலத்தின் குறையால்..” என்று சொல்லியுள்ளார்.
மானிடர்கள் தங்கள் கோபத்தில் கண்மூடித்தனமாக பல பாவங்களை செய்துவிடுகிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் ஜெனிப்பதேல்லாம் கோபத்தாலும் கொடும் பாவத்தாலும் மானிடனாக ஜெனித்து விட்டால் வீடுபெற சொர்கத்திற்கு செல்லும் வழியை கண்டறியவேண்டும் அதற்காக உழைக்கவேண்டும். முற்பிறவியில் செய்த பலா பலத்தினாலே இந்தப் பிறவி வாய்த்துள்ளது என்ற சூட்சுமத்தை அறிந்து பண்புடன் நடந்துகொண்டால், இந்த பூமி சொர்க்கம்தான் என்று சொல்கிறார்... ஈசனின் ஆக்ஞைபடி போகர் பல ஜெனன அவதாரங்கள் எடுத்தார். உடல் அழியக்கூடியது தான், ஆனால் பிறவிப்பணி இப்பூமியில் முடியும் வரை இவ்வுடலை கற்பம் உண்டு கல்ப காலத்திற்கும் நிலைக்கச் செய்யமுடியும். அதன்பின் ஈசனுடன் இரண்டறக் கலந்திட வேண்டும் என்று போகர் உணர்த்தியுள்ளார்.
“புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய் எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்”? என்று பத்திரகிரியார் தன் மெய்ஞ்ஞானப்புலம்பலில் கூறுகிறார்.
நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் தன்னுடைய உருக்கமான திருவாசகம் நூலில் சிவபுராணம் பாடலில்,
“கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற்போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்” என்கிறார் மாணிக்கவாசகர். அதாவது, கறந்த பாலோடு கரும்புச்சாறு, நெய்யைக் கலந்ததுபோல, தேன்போல அடியவர்களின் சிந்தனைக்குள் ஊறி நிற்கிறவனே, நாங்கள் எடுத்த பிறப்பைக் கெடுத்து மோட்சம் பெறச்செய்யும் எங்கள் பெருமானே என்கிறார்.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம் பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்!”
ஆக இப்படி எல்லாவிதமான பிறப்புகளையும் எடுத்து நான் மிகவும் இளைத்துவிட்டேன், மெய்யான உன்னுடைய பொன்னடிகளைக் கண்டு, இன்று நான் வீடுபேறு அடைந்தேன்! (இனி இப்படிப்பட்ட பல பிறவிகள் எனக்கு இல்லை!" என்று மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.
மணிவாசகர் பிரசங்கம் செய்ய அவ்விறைவனே படி எடுத்து நூல் வடித்தார் என்றும் தெரிகிறது.. மறுபிறவி கூற்று தவறு எனும் பட்சத்தில் ஈசனே இவ்வரியை திருத்தி எழுதியிருப்பாரே.. ஆனால் திருத்தம் செய்யவில்லை.
மறுபிறவி, ஊழ்வினை, பாவபுண்ணியம் என்று எதுவும் இல்லையென்றால் ஆன்மா என்ற அழுக்குபடிந்த வஸ்திரம் துவைக்கப்படாது. ஈசன் என்னும் வண்ணான் அழுக்கு போக துவைத்து வெளுத்திடுவார். அதுவரை துவைப்பவனுக்கும் துணிக்கும் உள்ள பிடிமானம் விட்டுப் போவதில்லையே! மறுபிறவி மூலம் சலவை செய்து ஆன்மாவை சுத்தம் செய்து இறுதியில் தன்னுள் இணைத்துக் கொள்கிறான் ஈசன். அதற்கு சுழற்சியில் இன்னல்கள் தந்து பாடம்புகட்டி தக்க தண்டனை தந்து அந்த ஆன்மா அனுபவித்த பலாபலன் ஏற்ப அதற்கு முக்தி (அ) வீடுபேறு கிட்டும்.
சிவவாக்கியர் ஒருவர் மறுத்துள்ளதால் ஒட்டுமொத்த சித்தர்களும் மறுபிறவியே இல்லை என மறுக்கவில்லை. சிவவாக்கியரைப் புரிந்துகொள்ள நாம் அவர் கண்ணோட்ட நிலைக்கு உயரவேண்டும்.. மெய்யாகவே முற்போக்காகத்தான் சொன்னாரா என்று அப்போது தான் விளங்கும்.. அது அவர் மறைப்பு வார்த்தை ஜாலங்களை காட்டுகிறது.. மறுபிறவி தத்துவம் பொய் என்றால் திதி, தர்ப்பணம், திவசம், போன்ற தென்புலத்தார் சடங்குகள் அறவே வேண்டாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக