About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 2 ஆகஸ்ட், 2017

ஈசனின் மொழி - சமஸ்கிருதம்

போகர் பல வடமொழி நூல்களை ஆராய்ந்து அதன் சாரத்தை தன் ஏழுகாண்ட நூலில் சொல்லியுள்ளார் என்பதை அவரே கூறுகிறார். 'ஈசருடைய வடமொழி' என்று போற்றுவதால், அது யாரால் சிருஷ்டியானது என்பதையும் தெளிவாக்குகிறார். அவரிடம் மொழி துவேஷம் இருக்கவில்லை என்று தெரிகிறது. ஒரு தமிழ்ச் சித்தர் இதுபோல் உரைப்பது நமக்கெல்லாம் மெத்த ஆச்சரியத்தைத் தரும். அதை எல்லாம் ஆராய வேண்டுமெனில் வடமொழியில் போகர் எப்படிப்பட்ட பாண்டித்தியமும் புலமையும் பெற்றிருக்க வேண்டும்? அசாத்தியம்!
அதன் அடிப்படையில் தான் வடித்த மாபெரும் சப்தகாண்ட நூலில் பொய்யுரைக்கவில்லை என்றும், இதை சரியாக படித்துப்புரிந்து கொள்ளாதவர்களுக்கு மறைப்பாகவே தோன்றும் என்கிறார். உலகத்தாரின் நன்மைக்காக ரகசியm எல்லாவற்றையும் ஏழு காண்டங்களில் வெட்ட வெளிச்சமாக்கிப் போட்டார். வடமொழி நூல்களை ஆராயும்போது எங்கெல்லாம் தனக்கு ஐயம் வருமோ அதை உமையாளிடம் போகர் கேட்டுத் தெளிவடைந்துள்ளார். (அவ்வப்போது இவர் எனக்கு தன்னுடைய பாடலில் வரும் சந்தேகத்தை தீர்த்துவைத்து வழிகாட்டுவதைப் போல!). ஆயுர்வேதம் இலக்கணம் சாத்திரங்கள் பெருநூல் காவியங்கள் எல்லாம் மேருமலையில் கண்டுள்ளார். மலை போல் குவிந்திருந்த அத்தனை வடமொழி நூல்களையும் படித்துப் பார்த்து ஆராய அவகாசம் போதவில்லை என்று வருத்தப்பட்டு கூறியுள்ளார். இவர் குறிப்பிட்டுள்ள மேரு மலை, சீனத்தின் தக்ஷணத்தில் -இமயமலைத்தொடர். ஒரு வேளை குமரிகண்டம் (எ) தென்னாடு இருந்தபோது அங்குள்ள உயர்ந்த மலைமீதும் வைத்திருக்கலாம். பேரிடர் ஊழிக் காலத்தின்போது நூல்களை வடக்கே போய் மேருவில் ஈசனின் பொறுப்பில் வைப்பதை சித்தரிஷிகள் வழக்கமாகவே கொண்டிருந்தனர். சித்த பரம்பரையில் வரும் சீடரானவர், தமிழையும் வடமொழியையும் பிரித்து ஆராய்ந்திட புலமை பெற்றிருக்க வேண்டும் என்கிறார். சித்தனானவன் பத்தராய் இருந்தாலும் (பொற்கொல்லரான தன்னையே சுட்டிக்காட்டி), முத்தமிழ் என்னும் பரிமீது தன் எண்ணங்களைச் செலுத்தத் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார். அப்படிப்பட்டவரே அகத்தியர் மெச்சும் 'விருதுபெற்ற' சீடராவார் என்று அதன் பின்வரும் பாடல்களில் சொல்கிறார்.
பின் குறிப்பு:- இதுவே ஈசனுடைய மொழி என்கிறார் போகர். அப்படி எனில் தமிழ் மொழி என்னவாம்? இப்படி ஒரு கேள்வி எழும். ஈசன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து குமரக் கடவுளை படைத்ததுமே, அவர் அருளால் பொதிகை மலையில் அகத்தியர் மூலம் தமிழ் பிறக்கும் என்று ஈசன் சொன்னதை பழைய பதிவில் பார்த்தோம். ஆக, முன்தோன்றிய மூத்த குடியான குறிஞ்சி மலை நிலத்து மக்கள் முதன்முதலில் பேசியதே தமிழ்தான்! ஐந்நிலங்களில் 'குறிஞ்சி' மலையும் மலை சார்ந்த இதுதான் தொன்மையானது, குடிகளும் நாகரிகமும், மொழியும் தோன்றியது. அப்படி என்றால் அகத்தியரும் மற்ற ரிஷிகளும் மனிதர்கள்தானே, அவர்கள் மட்டும் தமிழல்லாமல் வடமொழி பேசியது ஏன்? விஸ்வகர்மா இப்பிரபஞ்சத்தில் பஞ்ச கிருத்தியங்கள் செய்யும்போதே, சில ரிஷிகளையும் படைத்தார். அவர்கள் மூலம் ஏனைய செயல்கள் நடந்தேறின. இதெல்லாம் நம்பும்படி இல்லையே என்று யாரேனும் சொன்னால், அவன் தமிழை ஆராயும் தகுதி அற்றவன் என்பது பொருள். ஆன்மிக அடித்தளம் சற்றும் இல்லாமல் பகுத்தறிவு மட்டுமே கொண்டு தமிழ் மொழியின் அடிமுடி தேட முற்படுவது நடவாது. ஆகவே இங்கிருந்துதான் வடமொழியா? தமிழா? என்ற பிரச்சனை தொடங்கியது. தமிழே தெய்வம் என்றால் அங்கு நாத்திகம் வருமோ? அதெப்படி சுயம்புவாகவே ஈசன், தெய்வங்கள், ரிஷிகள், மொழி, வேதங்கள், கல், புல், பூண்டு எல்லாமே வரும்? என்று கேட்டால் அவர்களுக்கு விஸ்வபிரம்ம தாற்பரியத்தை விளக்கவேண்டிய கட்டாயமில்லை. அவர்கள் தெரிந்துகொண்டு ஒன்றும் ஆகப்போவது இல்லை. இதன்படி பார்த்தால் விஸ்வகர்மாவினர் ஈசருடைய மொழியாம் சமஸ்கிருதத்தை கற்றுத் தெரிந்திருக்க வேண்டும். பஞ்சபிரம்ம முகத்திலிருந்து வந்த வேதங்கள் எல்லாமே சமஸ்கிருதத்தில் இருப்பதே சான்று. நெற்றிக்கண்ணிலிருந்து ஈசன் படைத்த முருகன் வந்த பிறகுதான் தமிழே வந்தது. சுமார் ஒரு நூற்றாண்டிற்கு மேலாக நாத்திகம், பகுத்தறிவு, ஜாதிப்பிரிவினை இயல்பை விட பூதாகாரமாக காட்டப்பட்டதால், விஸ்வகர்மா குலத்தினருக்கு இம்மொழி தெரியாமலே போனது. மொழி ஆர்வம் இல்லாததாலும், அதை வெறுத்து எதிர்த்துப்பேசும் திராவிட சமூகத்தில் வாழ்வதால், அம்மொழி தெரிந்து கொள்ளாமல் போனது இன்று நமக்கு கோபத்தை உண்டாக்கும். 'சம்யக்-கிருதம்' என்றால் 'நன்கு அமைக்கப்பட்டது' Complete form என்று பொருள். ஆகவே, ஈசன் --> முருகன் --> தமிழ்... இப்படிப் பார்த்தால் உலகத்தில் மக்கள் பயன்பாட்டில் மூத்த மொழி தமிழ்தானே! சித்தர்கள் முத்தமிழ் வல்லவர்களாக இருந்தால்தான் அகத்தியர் ஏற்றுக் கொள்வார் என்றும் போகர் சொல்கிறார். ஈசனின் மொழி இன்று நம் நாட்டில் அநேகமாக பயன்பாட்டில் இல்லாமல் அழியும் நிலையில் உள்ளது. விஸ்வபிரம்ம புராணம் தெரியாமல் போனதால் எது ஆதிமொழி என்று நம்மவர்கள் அறியவில்லை. துவிஜ பிராமணர்களும் இதைத்தான் சொல்லிவந்தனர். ஆனால் ஜாதிரீதியாக இவர்கள் தமிழை அடக்கி வைத்துள்ளனர் என்று சொல்லி தடைபோட்டனர். ஈசனின் மொழி அழியக்கூடாது என்பதால் தில்லை ஆதிதீட்சிதர்கள் பஞ்சாட்சரப்படி கருவறையில் சமஸ்கிருதம்தான் பேணவேண்டும் என்று கடைபிடித்த முறையை அறநிலையத் துறையும் சில முற்போக்கு அமைப்புகளும் குறை கூறின. அங்கு முதல் மரியாதை சமஸ்கிருதத்திற்கும், அதன் பிற்பாடு தமிழுக்கும் கொடுங்கள் என்று வாதாடினர். தில்லையில் நால்வர் பாடிய திருமுறைகள் தமிழ்தான்.என்பதை அவர்கள் இகழவில்லை. ஆனால் வடமொழியை காக்க வேண்டும் என்றனர். இதில் நாம் வேடிக்கைதான் பார்க்க இயலும்! வேறென்ன செய்ய? ஆகவே, திராவி கட்சிகளோடு சேர்ந்து நாம் என்றுமே மொழி நிந்தனை செய்யக்கூடாது. அது ஈசனை பழித்த பாவத்திற்கு சமம்! உங்களுக்கு ஆர்வமிருந்து, வயதும் ஞாபக சக்தியும் வேலை நேரமும் ஒத்துழைத்தால், சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளலாம். இதன் அடிப்படையில்தான் (தேவ லிபி) தேவநாகரி (Devanaagari script) எழுத்துகளிலிருந்து ஏனைய ஹிந்தி மராத்தி நேபாள மொழிகள் பிறந்து வளரந்தது. காலபோக்கில் எழுத்துரு மாறி இன்று இருக்கும் நிலைக்கு வந்துள்ளது. மொழிகளின் மூலம் ஈசன் தானே? தொல்காப்பியர் 'சேயோன் மேவ மைவரை உலகமும்' என்கிறார். குறிஞ்சி நிலமக்கள் சிவந்த நிறமான மலைக்கடவுள் முருகப்பெருமானை வணங்கினார்கள். இதுநாள் வரை எந்த மொழி பழையது என்றால் பயன்பாட்டு மொழியான 'தமிழ்' மொழிதான் என்று தெரிகிறது. இது புரியாமல் இன்று வரை தர்க்கமும் நிந்தனையும் நடந்து வருகிறது. பெரிய சந்தேகத்தை போகர் தீர்த்துவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக