About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 12 ஆகஸ்ட், 2017

தேசத்தில் வேறு மன்னர்களே இருக்கவில்லையோ?

நாடு என்றால் அது தமிழ்நாடு மட்டுமே! மன்னன் என்றால் ராஜராஜ சோழன் மட்டுதான் தெரியும்! நமக்கு வேறு யாரையுமே தெரியாது. தெரிந்தாலும் ஏற்கமாட்டோம்!
பாரத நாடு மீதும், தமிழ் அல்லாத மொழிகள் மீதும் வெறுப்பு உள்ளதால், வெளி மாநிலங்களிலுள்ள அம்சமான பல விஷயங்களை நம்மால் பாராட்ட முடிவதில்லை. சோழனுக்கு இணையாகவே மற்றவர்களும் கட்டிடவியலில் இருந்துள்ளனர் என்பதற்கு இந்த படமே சான்று. இதுபோல் இந்தியா முழுதும் பல கலைச்சின்னங்கள் உள்ளது. அரசன் கட்டினான் என்றால் ஒரு ஷத்ரியனாக கைப்பட கட்டினானா? கட்டுமானத்திற்கு செலவு செய்தது ஒன்றுதான் பங்களிப்பு. மற்றபடி தனிப்பட்ட பங்களிப்பு என்றால் ??? பூஜ்யம்தான்!
இதில் எல்லாமே ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவில் கணித, கட்டிட சாஸ்த்திரங்களோடு உள்ளது. ஒரு விஸ்வகர்மா ஸ்தபதியின் திட்டம்-துணை இல்லாமல் எந்த அரசனும் பெயர் வாங்க முடியாது. சோழன் கைப்பற்றிய இமயம், கங்கை, கடாரம், காம்போஜியம், இலங்கை எல்லாமே இன்று இவன் பெயரைத் தாங்கியா நிற்கிறது? அங்கெல்லாம் அவனைப்பற்றி தெரிந்திருக்க ஞாயமில்லை.
பல்லவர், மூவேந்தர்கள், சாளுக்கியர், ராயர், குப்தர், நாயக்கர், மராட்டியர், முகலாயர், சுல்தான், ஹோயசல, சிந்தியா என்று எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வந்தது போனது. அவனவன் சாதித்த புகழ் பெருமை வீழ்ச்சி என எல்லாமே, இன்று வரலாற்று பக்கங்களில் மட்டுமே தூங்குகிறது.
இவர்கள் காலத்தில் நிறுவப்பட்ட விசாலமான அரண்மனைகள், கோயில் கோபுரங்கள், குளங்கள், கல்வெட்டுகள், அச்சடித்த செப்பு-தங்க காசுகள் என்று அனைத்தும் ஒரு விஸ்வகர்மன் கைவண்ணத்தில் வந்தவைதானே? அவர்களே சூத்திரதாரிகள். இது இப்படியிருக்க சோழன் மட்டுமே சிறந்தவன் என்று எப்படி சொல்லமுடியும்? இதுபோக மன்னர்களைப்பற்றி இன்று பெருமைப்பட வேறென்ன இருக்கிறது?
அவர்களுடைய புகழ், படையெடுத்து அபகரித்த சொத்துக்கள், மனைவிகள், கஜானா, நிலபரப்பு என எல்லாம் இன்று உள்ளதா? அவையெல்லாம் ஆணவத்தோடு சேர்த்தவை. ஆனால் அரச காலத்தில் விஸ்வகர்மா மக்கள் (ஸ்தபதி, கன்னார், தச்சர், கொல்லர், தட்டார்) படைத்த பொக்கிஷங்கள் இன்றும் காலத்தை வென்று நிற்கிறது. இதில் படைப்பு மட்டுமே ஆத்மார்த்தமாக ஆக்கபூர்வமாக இருந்ததால் அழிவு ஏற்படவில்லை. அதில் தெய்வீகம் உள்ளது.
விஸ்வகர்ம ஆச்சாரி ஈடுபடாத ஏதேனுமொரு தடயத்தைக் காட்டுங்கள். இதை நடுநிலை கண்ணோட்டத்தோடு சொல்லுங்கள், சோழன் மட்டும்தான் உயர்ந்து நிற்பவனா? இவனைப்போன்ற ஷத்ரிய மன்னர்கள் சுயமாக விட்டுச்சென்றது என்ன? என்ன? ஒன்றுமில்லை! ஒன்றுமேயில்லை.
இந்த நெருடல் ராஜராஜ சோழனுக்கு இருந்ததுபோலும். அதனால்தான் 'வீரசோழ குஞ்சர மாமல்லன், நித்தவினோத ராஜராஜ பெருந்தச்சன், குணவான் மதுராந்தகன் மூவரும் ஸ்தாபித்த பிரகதீஸ்வரம்' என்று அங்கே பெருமைமிகு கல்வெட்டு பொறிக்கபட்டுள்ளது. அதை தான் உருவாக்கி கட்டவில்லை என்று சொன்ன ராஜராஜனை பாராட்டவேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக