டீ கடைகளில், பட்டாசு தொழிற்சாலைகளில், சுமக்கும் கட்டுமான வேலைகளில், வயக்காட்டில், மெக்கானிக் கடைகளில் என்று பல இடங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணியாற்றுவதை பார்க்கிறோம். இது சட்டப்படி குற்றம். தினசரி இவர்கள் நூறு-இருநூறு ஈட்டுகிறார்கள். சிலர் அதைவிட குறைவு.
ஆனால் திரைப்படங்களில், டிவி மெகா சீரியல்களில் குழந்தைகளை நடிக்க வைத்து வருடக்கணக்கில் ஓட்டுகிறார்கள். இவர்களும் பணம் சம்பாதிக்கிறார்கள், Sec. 64 (1A) கீழ் வருமான வரியும் கட்டுகிறார்கள். இது குற்றம் இல்லையா? இவை நடிப்பாற்றலை, திறமையை வெளிக்கொண்டு வரும் வழிகள் என்பதால் குற்றம் இல்லையாம். என்ன கோமாளித்தனம்? வம்சம், தெய்வமகள், குலதெய்வம் போன்ற (சன் டிவி) சீரியல்களில் கைக்குழந்தையாக வந்த அரை டிக்கெட்டுக்கள் இன்று வளர்ந்து விட்டார்கள். ஐயோ பாவம்! இதுங்க பள்ளிக்கூடம் போகிறதோ இல்லையோ? தினசரி இவர்கள் ஆயிரங்கள் பணம் ஈட்டுகிறார்கள்.
முழுநேரம் / பகுதிநேரம் என்று காலங்காலமாக நடித்த குழந்தை நட்சத்திரங்களே இன்று கிழமாகி விட்டனர். இவர்களை வேலை செய்ய வைத்த அதன் பெற்றோர்/ தயாரிப்பாளர் / இயக்குனர்/ எதிர்ப்பு காட்டாத சினிமா Censor board தணிக்கை துறை மீதும் என்றுமே தொழிலாளர் நலத்துறை வழக்கு போட்டதில்லை. சினிமாவுக்கு இது சரி என்றால் டீகடைக்கும் சரிதான். ஆனால் ஏன் இந்த பாகுபாடு?
அருமையாக டீ போடுகிறான், பூட் பாலிஷ் செய்கிறான். அவர்களிடமும் கலைவாணி நல்ல வித்யை தந்துள்ளாள் ! அதுவும் திறமையை வெளிக்காட்டும் செயல்தானே? அவர்களுக்கும் தினசரி ஆயிரங்களில் சம்பளம் தந்தால் இது குற்றச்செயல் ஆகாதோ? சினிமாவில் கலைத்திறமை காட்டி நடிப்பதால் அது உழைப்பு அல்ல என்றால், வருமான வரி வரக்கூடாதே! வருமானம் என்ற சொல் வந்தாலே உழைப்பு தானே? ஆக மொத்தம் இரு பிரிவினருமே பெற்றோருக்கு பணம் சம்பாதித்து தருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக