மறுஜென்மத்தில் நம்பிக்கை இல்லாத பலபேர் தங்கள் கூற்றை நிரூபிக்க சிவவாக்கியத்திலிருந்து பாடலை மேற்கோள் காட்டுவது வழக்கமே. அந்த வரிகள் 'கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணெய் மோர்புகா ... இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை இல்லையே' (பா.166).
ஆஹா, நமக்கு மறுபிறப்பில்லை என்று சித்தரே சொல்லிவிட்டார், அதனால் இஷ்டம்போல் வாழ்வோம் என்று தம் போக்கில் அதர்மவழியில் ஈடுபடுவோரே அதிகம். சிவசித்தர்கள் எல்லோருமே மறைப்பு பாஷை கைகொண்டு பாடலியற்றினார்கள். போகர் சொன்னதுபோல் அதை நாம்தான் தவறாக புரிந்துகொண்டு களங்கமான புதியபொருள் கற்பிக்கிறோம். எப்படிபட்டவருக்கு பிறப்பு இறப்பு இல்லை? முற்றுபெற்ற நிலையை அடைந்தவருக்கு!
பின் ஏன் கறந்த பால், வெண்ணெய், பூத்த மலர், சங்கு, என்று உவமை தந்தார்? இவை எல்லாம் உருமாற்றம் பெற்ற உச்சநிலையை காட்டுகிறது. ஒன்றிலிருந்து இன்னொன்று கடைந்து எடுத்து தெளிவாக்கியபின் அது ஏன் மீண்டும் இளநிலையை அடைய வேண்டும்? மலர்ந்த பூ ஏன் மொட்டாக வேண்டும்? பால் ஏன் மீண்டும் அதே மடியில் நுழைய வேண்டும்? கடைந்தபின் வெண்ணெய் ஏன் மோருக்குள் கரையவேண்டும்? ஆக, இவர் மேலே சொன்னது நமக்குப் பொருந்தாது.
அவரே,
'நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடு போய்,
எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே'
என்று தெளிவாகச் சொல்கிறார் ( பா.110).
அப்படி என்றால் என்ன? எவன் ஒருவன் தன் சுழுமுனை (அ) துரியம் அறிந்து பிரம்மரந்திர (துளையை) ஞான வாசலைத் திறந்து ஆன்ம தரிசனம் செய்வானோ, அந்த (ஆகாச) சிதம்பரத்தின் வாயிலை திறந்துகொண்டு உள்ளே சென்றவன் மீண்டும் பிறக்கமாட்டான். இப்போது சொல்லுங்கள், நாம் அந்த நிலையை எட்டிவிட்டோமா?
கபாலத்தில் புருவ மத்தியிலிருந்து சகஸ்ரார சக்கரம் வரை இந்த வாசல் நீண்டு இருக்கும். பிறந்த சிசுவுக்கு தலைமேல் விரல் வைத்து அழுத்தக் கூடாது என்பார்கள். ஏன்? கபாலத்தின் அடியில் இந்த வாசல் மூடாமலே இருக்கும்.வளர்ந்த பின்தான் மூடும். அது சிற்றம்பலனை ஜோதியாக எந்நேரமும் பார்த்துக் கொண்டே இருக்கிறது, சிரிக்கிறது.
ஆனால் மக்கள் தங்கள் கொள்கைக்கு ஏற்றபடி சித்தர் பாடல்களை வளைத்து ஒடித்து பொருள் திரித்து வருவது இயல்பான ஒன்றுதான். நான் பார்த்த வரை, இப்படி எல்லாம் மறைப்பு பரிபாசை அறியாமல் பொருள் கொள்வார்கள் என்ர்பதால் மூத்த சித்தர்கள் அதே வாக்கியங்களை தங்கள் பாடல்களில் நுழைத்து செய்தியை திறந்து போடுவார்கள். யார் எப்படி நூல் எழுதினார்கள் என்பது அநேகமாக எல்லா சித்தர்களும் அறிந்துள்ளனர்.
இந்த ஐயத்தை போக்கும் வகையில் போகர் விளக்குகிறார். வாசியோகம் சித்தித்தவர்களுக்கு பிறப்பு இறப்பு இனி இல்லை. ஆனால், யாரொருவன் பழித்து நிந்தனை செய்து, கோபம், பொறாமை, வெறி , பாவங்கள் என்று புரிவானோ அவன் மீண்டும் பல ஜெனனங்கள் எடுக்கிறான். மலத்தில் கிருமிகள் நெளிவதுபோல் இந்த பாவ நரகத்தில் கிடந்தது அல்லல் படுகிறான்.
பிறவியோட்டம் எப்போது முடியும்? சொர்கத்தின் ஞானவாசல் வழியை அறிந்து முன்னேறும்வரை இந்த சுழற்சி ஓட்டம் இருக்கும் என்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக