இன்று பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தேன். பின்வரிசை நாற்காலியில் அமரந்திருந்த ஒரு நடுத்தரவயது ஆண், காரசாரமாக மனைவியிடம் ஃபோன் பேசிக்கொண்டிருந்தான். அது பொது இடம் என்றும் பார்க்காமல் ஜோராக சண்டையிட்டுக் கொண்டிருந்தான். அவன் பேசிய டயலாகுகளைக் கேட்கும்போது 'இது வன்கொடுமைதான்' என்று நினைக்கத் தோன்றியது.
"அடியேய்! உன்னை கல்யாணம் கட்டி இருபத்தஞ்சு வருஷம் ஆச்சு. இன்னும் என்னோட சம்பாதியத்துல உக்காந்து சோறு திங்கிறியே, வெக்கமா இல்ல?"
எதிர்முனையில் அந்தக் குரல் ஏதோ பேசுகிறது.
"நாங்க அப்படித்தாண்டி.என் அண்ணிய வேலைக்கு போன்னு அண்ணன் விரட்டினான். நாங்க சொன்னபடி நீ நடந்துக்கணும். நீ வேலைக்குப்போய் சம்பாதிச்சியா? உனக்கு எதுக்குடி நான் சோறு போடணும்? எனக்கு பேங்கு டெபாசிட் பணத்துல வருசத்துக்கு ஆறு லட்சம் வட்டி வருது.. அதுல உனக்கு சல்லிக்காசு குடுக்கணும்னு அவசியமில்ல. அது கூடபொறந்த அண்ணனுங்க அக்காவுக்கு மட்டும் தான். நம்ம பையனுக்கும் தரமாட்டேன். உன்னை வூட்டவிட்டு தெரத்திட்டுதான் மறுவேலை ... பொண்ணெடுக்க ஊரெல்லாம் தேடிட்டு உன்ன இஷ்டமில்லாமத்தான் கட்டுனேண்டி.. பத்து வயசு வித்யாசம் வேற... போன மாசம் உன் துணிமணிய தெருல கடாசியும் உனக்கு புத்தி வரல... கை ஒங்குறது என்னோட ஸ்டைலுடி"
இதெல்லாம் கேட்கவே பகீர் என்றது. வலியப்போய் விருப்பமின்றி அவன் மணம் செய்துகொண்டு பழங்கதை பேசி அவனே சண்டை வளர்க்கிறான். கணவன் தன் மனைவிக்கு சோறு போட அவசியமில்லை என்ற புதிய கொள்கையை வகுத்துள்ளான். கலியுக மக்களின் அடுக்கடுக்கான பாவச்செயல்கள் என்னென்ன என்று போகர் அன்றே சொன்னார். கண்ணில்பட்ட இது ஒரு சாம்பிள்தான். தேசம் முழுதும் இவளைப்போன்ற பெண்கள் படும்பாடு என்னவோ?!
கந்துவட்டி கொடுமை என்று காரணம் சொல்லி அவன்மீது அவளே பெட்ரோல் ஊற்றி எரித்தால் தப்பே இல்லை! ஊர் உலகம் நம்பும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக