‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்பது சில சமயங்களில் நிரூபணமாகி உள்ளதை நான் பார்த்துள்ளேன்.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்தபோது ஒரு சமயம் மெஸ்ஸில் என் மேஜைக்கு முன்னே ஒருவர் கலைந்த தலை, பனியன் போடாமல் துண்டு போர்த்தி, கைலி அணிந்தபடி நின்றிருந்தார். அவரைப் பார்த்து ‘கொஞ்சம் சாம்பார் கொண்டுவந்து ஊத்துப்பா’ என்றேன். உடனே கண்கள் விரிய என்னைப் பார்த்து, ‘நான் மியூசிக் காலேஜ்ல படிக்கிற ஹாஸ்டல் ஸ்டூடன்ட்... என்னை பாத்தா சப்ளையர் மாதிரி இருக்கா? சரியா போச்சு!’ என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து உடனே போய் விட்டார். என்னதான் விடுதியில் தங்கிப் படித்தாலும் மாணவிகளும் வந்து உண்ணும் ஒரு பொது கூடத்திற்கு உண்ண வரும்போது இப்படியா வருவது?
இன்னொரு சமயம் ஒரு கருத்தரங்கிற்கு முன்னமே முதல் ஆளாகப் போய்விட்டேன். ஹோட்டல் மேல் தளத்தின் வாயிலில் விபரங்கள் அடங்கிய பலகையைப் படித்து விட்டு உள்ளே நுழைந்தேன். அரங்க வரவேற்பு மேஜையில் இருந்த கையேடுகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே பரிதாப ஆளுமையுடன் தன் மோவாயில் கைவைத்தபடி ஒடிசலான ஒருவர் ஈன சுவரத்தில், ‘உங்க பேரு விலாசம் ஃபோன் நம்பர் எல்லாம் இதுல பூர்த்தி செய்யுங்க’ என்றார். அவரைப் பார்க்கும்போதே, ‘ஐயோ பாவம், இவருக்கு என்ன பெரிசா சம்பளம் தந்துடப் போறாங்க ... கடனேனு இங்க உக்கார வெச்சிருக்காங்க போல’ என்று நினைத்துக் கொண்டேன். ‘சார், பத்து மணிக்குத்தானே? செமினார் நடத்துறவர் வந்தாச்சா?’ என்று கேட்டேன். ‘நான் தாங்க நடத்தப் போறேன்’ என்று ஆங்கிலத்தில் அவர் சொன்னதும் நான் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். ‘ஓ.. ஈசிட்? ஹஹஹா... குட்’ என்று சமாளித்தபடி போய் உட்கார்ந்தேன். 😂
இருபது ஆண்டுகளுக்கு முன் பைபாஸ் அறுவை சிகிச்சை ஆன உறவுக்காரரை நலம் விசாரிக்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கே ICU கூடத்தின் மைய மேஜையில் இருந்த மூத்த மருத்துவரையும் பார்த்தேன். அவரிடம், ‘இவருக்கு பைபாஸ் மாற்றாக ஸ்டென்ட் வைக்கலியா?’ என்று கேட்டேன். 'இப்போது ஸ்டென்ட் விலை அதிகம். என்பதால் நாங்கள் பரிந்துரை செய்வதில்லை' என்றார். நான் புறப்படும்போது அவர் என்னிடம் ‘சார், நீங்க எந்த ஹாஸ்பிடல்ல டாக்டரா இருக்கீங்க?’ என்று கேட்டார். ‘நோ.. நான் டாக்டர் இல்லை... பார்வையாளர்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
இப்படியாக, நாம் பிறரையும், பிறர் நம்மையும் எடைப் போடுவது நகைச்சுவையாக அமைந்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக