திராவிட கழகத்தின் சைவ -ஆரியர் மறுப்பு என்ற கட்டுரையின் கீழ் என் கண்ணில் பட்டதை இங்கே பதிக்கிறேன் ...
பெரியார் நினைவு நாளில், திருமூலர்- வள்ளலார், பெரியார் வழியில் - வேத மரபு மறுப்பு மாநாட்டை நடத்தியது. பெரியாரே அங்கீகரித்துப் பதிப்பித்துப் பரப்பக் கூடிய அளவுக்கு வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் பாடல்கள் இருந்துள்ளது.
வள்ளலார் வருகைக்கு முன் சன்மார்க்கம் என்பது சைவ சன்மார்க்கம் என்ற அளவில் இருந்தது. அவர் வந்தபின் தான் சுத்த சன்மார்க்கம் என மாறியது. அவர் ஒரு புரட்சியாளர். உருவ வழிபாட்டை வெறுத்தார், காவி அணியாமல் வெள்ளாடை உடுத்தினார், கோவிலை சபை என்றார், ஒளியே வழிபாட்டுக்குப் போதும் என்றார். ஆரிய மொழி ஆரவாரம் மிக்கது, அதை கற்கப் பிரயாசப்பட வேண்டும் என்று கூறியவர். ஆறுமுக நாவலரையே அவருக்கு எதிராக ஏவி விட்ட தீய சமூகம் இது. ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் வெவ்வேறு பிரிவினர்கள் சைவ சமய மடாதிபதிகளாக கோலோச்சிய காலம். வள்ளலாரை ஆதிக்கம் செய்ய விடவில்லை.
“வேதநெறி ஆகமத்தின் நெறிபவு ராணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுவதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே”
என்பது வள்ளலாரின் கூற்று.
வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் ஆகிய அனைத்திலும் சொல்லப்பட்டவை எல்லாமே சூதும் சூழ்ச்சியும் நிறைந்தது, அதை நம்ப வேண்டாம் என்று அவரே சொன்னார். அதுமட்டுமல்லாமல் மக்களில் ஒருவர்கூட விடாமல் கல்வியறிவு பெரும் போதுதான் சாதி சமய வேறுபாடுகளிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும். நாங்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்றாலும் அவருடைய வேத மறுப்பு சைவ எதிர்ப்பு கொள்கையை நாங்கள் ஏற்கிறோம் ...
‘சைவத்தை வேதத்தை எதிர்த்தவர் வள்ளலார்’ என்ற தலைப்பில் பூங்குழலி என்பவரின் உரை இவ்வாறு இருந்தது.
* * * * * * * * * * * * * *
இதை வாசித்தீர்களா? இனி நம்முடைய பகுப்பாய்வுக்கு வருவோம்.
ஐந்தாம் திருமுறை வரை சிவனை சக்தியை முருகனை கணபதியை ஆழமாகப் போற்றி உருகிப் பாடிய பாடல்கள் அதிகம். தன்னுள் அக ஜோதியைக் கண்ட பிறகு முன்சொன்ன அனைத்தும் அவசியமில்லை என்பதை உணர்ந்த பின்தான் ஆறாம் திருமுறையில் ஜோதி தரிசனத்தின் மேன்மையைப் பாடினார். அவர் எங்குமே சிவனையோ வேதத்தையோ ஆரியத்தையோ ஒருபோதும் நிந்தித்ததில்லை. அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர். நிழல் விழாத ஒளி தேகம் பெற்றதால் வெண்ணிற ஆடையே உடுத்தினார்.
சைவ சன்மார்க்கம் என்று எங்குமே இல்லை. சன்மார்க்கம் (எ) ஷண்மதம் என்பது சைவத்தையும் உள்ளடக்கியது. சுத்த சன்மார்க்கம் என்பது இதில் எதையும் குறிப்பிட்டுச் சாராமல் ஷண்மதம் உணர்த்திய நெறியின் உச்ச நிலையை வழிபடுவது. தன்னுள் சுயம்பிரகாச ஜோதியைக் காண்பதே இறுதி நிலையாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தினார். அதில் ஆசை மாயை வெறுப்பு போன்ற தீயவற்றை பொசுக்கிட வேண்டும் என்றார். அந்த நிலையில் உருவ வழிபாடும் தேவையில்லை, மந்திரமும் ஜெபிக்க வேண்டாம்.
வேதம் ஓதுவதோ, தேவாரம் பாடுவதோ தேவையில்லை என்பதை எடுத்த எடுப்பிலேயே வள்ளல் பெருமான் சொல்லவில்லை. கலியுகதிற்குத் தக்கபடி இறையருள் பெற்று அகத்தீயைக் காணும் வழியை அவர் கூறினார். ஆறாதார சக்கரத்தின் கபாலத்தில் பிரம்மரந்திர வாசலைத் திறந்துகொண்டு போய் அங்கே ஜோதியைக் கண்டுவிட்டால் யாரும் மீண்டும் பிறப்பதில்லை இல்லையே! என்கிறார் சிவவாக்கியர். உச்சபட்ச முதிர்ந்த நிலையில் உணர்த்தப்பட்ட நல்ல விஷயத்தை தவறாகப் புரிந்துகொண்ட மக்கள், சிவனை வேதத்தைத் தூற்ற ஆரம்பித்தனர். இதைத்தான் வெவ்வேறு சைவ மடாதிபதிகள் எதிர்த்தனர்.
‘வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம், இவை அனைத்தும் எடுத்துரைக்கும் உபாயங்கள் மற்றும் மறைப்பு ரகசியங்கள் யாவற்றையும் காட்டி அவற்றில் சொல்லப்பட்டதை உள்ளதை உள்ளபடி உணர வைத்த பரம்பொருளே’ என்றுதான் மேற்படி பாடலில் அவர் சொல்லியுள்ளார். ஓதாமலே எல்லாவற்றையும் ஓதி உணர்ந்த ஆற்றல் வரும். இங்கே சூது-உளவு என்பது சித்த மறைப்புச் சொற்கள். உபாயம் –ரகசியம் என பொருள் கொள்ளவேண்டும். ஆனால் அதை சூது-வாது-சூழ்ச்சி என்று தவறாகப் பொருள்கொண்டு வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தினர் பரப்புரை செய்வதை பகுத்தறிவு கழகங்கள் வரவேற்கின்றன.
கோவில் என்பதை சபை என்று மாற்றினாராம். கோவில் பற்றி: காலங்காலமாகவே சபை என்றால் தில்லை என்றும், அரங்கம் என்றால் திருவரங்கம் என்றும் பொருள் கொள்ளப்பட்டது. பஞ்ச சபை, சபாபதி, சபாநாயகன், சபேசன் என்ற பெயர்கள் தேவாரங்கள் தோறும் சொல்லப்பட்டுள்ளதே! வள்ளலார் வந்தபிறகு அல்ல!
வள்ளலாரின் பாடலை ஈவெரா அவர்களே அங்கீகரித்தாராம். இது எப்படி இருக்கு? குரு தன் சீடரின் பாடலை அங்கீகரித்து ஏற்பது போல் அல்லவா உள்ளது!
வேதங்களை பிரயாசையுடன் ஓதும்போது உள்ள சப்தகோஷ ஆரவாரம் தமிழ் மொழியில் இல்லை என்பதை வள்ளலார் இயல்பாக உணர்த்தினார். உண்மைதானே! ஆனால் அதை கழகத்தினர் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டனர். மக்கள் அனைவரும் மேம்பட கல்வி அவசியம் என்றார். எல்லோரிடமும் அன்பு காருண்யம் காட்டினால் பேதம் வராது என்றார். வடலூர் சித்தி வளாகத்தில் இயங்கிய பாடசாலையில் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் என மும்மொழிகளைக் கட்டாயப் பாடமாகக் கற்க வேண்டும் என்று வைத்தார். அது மட்டும் ஏன்? வடமொழியை வெறுத்தவர் அதை பாடசாலையில் கற்பிக்கச் சொல்லக் கூடாதே!
‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்று அவர் நொந்து போய் சொன்னது, இன்று கழகக் கடைகளில் விலை போகிறது. அதற்குக் காரணம் சுத்த சன்மார்க்க சங்கத்தினரே!
“ஜோதி ஜோதி ஜோதி அகத்தில் தெரியுது ஜோதி
ஜோதி ஜோதி ஜோதி இறைவன் அருட்பெரும்ஜோதி“
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக