நேற்றைய பதிவினையொட்டி ஒரு நண்பர் ‘கல் உலோகம் தாவரம் ஊர்வன பறப்பன என இருந்தபின் ஆன்மாவின் நிலை உயர்ந்து பசுவாக இருந்து முதல் முறையாக அது மனிதனாகப் பிறப்பு எடுக்கும்போது எப்படிப்பட்ட இடத்தில் போய் ஜெனிக்கும்?' என்ற சுவாரசியமான சந்தேகத்தைக் கேட்டிருந்தார்.
முதல்முறை படைக்கப்படும் எதுவுமே அப்பழுக்கற்ற நிலையில்தான் வந்து உதிக்கிறது. பெற்றோரின் கர்ம பலாபலனுக்கேற்ப நல்ல குடும்பத்தில் அதன் வளர்ப்பு, கல்வி, குணம், தன்மை, செயல்கள் எல்லாம் மேன்மைப் பெற்றும்; உணவு உடை இருப்பிடம் செல்வம் எதற்கும் குறைவின்றி நல்ல நிலையில் இருக்கும். காலங்கள் செல்லச்செல்ல அந்த ஆன்மாவின் போக்கும், நெறிகளும் பல சந்தர்ப்பச் சூழல்களில் மாசுபட அவை எல்லாமே அதன் மறுபிறப்புக்கான வழித்தடத்தை அமைத்துக் கொடுக்கிறது. இங்கிருந்து அந்த ஆன்மாவை சோதனைக்கு உட்படுத்துவான்.
தூய வெள்ளைச்சட்டை வாங்கி உடுத்துகிறோம். நாள்பட நாள்பட நம்முடைய உடல் வியர்வையின் ரசாயனத் தன்மையாலும்; நாம் புழங்கும் சூழலின் தன்மையாலும்; கழுத்து காலர்/ கை மடிப்பு/ பாக்கெட் விளிம்பு போன்ற பகுதியில் படியும் அழுக்காலும்; சோப்பு போட்டு அலசும் தண்ணீரின் தன்மையாலும்; வெள்ளை நிறமானது நமக்குத் தெரியாமலே மெல்லப் பழுப்பாகி மாறுவதைக் காண்கிறோம், அல்லவா? என்னதான் சொட்டு நீலம் கூட்டினாலும் இயற்கையாக அது துணியின் இழையுடன் கலந்து நிற்காமல் கலங்கிப்போனதாய் இருக்கும். அதை வெளுக்க நன்கு பிரஷ் போட்டுத் தேய்க்கும்போது துணி இற்றுப்போகும்.
அதுபோல்தான் புதிதாக மனிதப் பிறவி எடுத்த ஆன்மாவின் நிலையும். Zero balance இல் தொடங்கி, காலவோட்டத்தில் வினைகள் செய்து, மறுபிறவி எடுக்கும்போது ஊழின் சஞ்சித கர்மவினையை பிராரப்த வினைகளாக அனுபவித்து, இப்பிறவியில் புதிதாய் ஆகாம்ய கர்ம வினைகளைச் சம்பாதித்து முடிவற்றப் பிறவிப் பயணங்களில் போய்க்கொண்டிருக்கும்.
முற்பிறவிகளில் தனக்கு நன்மை/ தீமை தந்து சம்பந்தப்பட்ட ஆன்மாக்களுடன் பிறவிதோறும் ஏதோவொரு வகையில் பந்தத்தை அளித்துச் சந்திக்க வைத்து அதற்கான நன்றிக்கடனைக் காட்டவோ, வஞ்சம் தீர்த்துக் கொள்ளவோ இப்பிறவியில் கடமையாற்றுமாறு அமைந்து விடுகின்றது. நாம் இதுவரை எத்தனை ஜாதி/மதங்களில் எத்தனை லட்சம் பிறவிகள் கடந்தோமோ தெரியாது! இனி சட்டையே வேண்டாம் என்ற நிலையை எட்ட வேண்டுமானால், நம் ஆன்மா பழிபாவம் ஏற்காமல் பிரதிபலன் பாராமல் பயணம் தொடங்கிய அப்பழுக்கற்ற, புண்ணியம்-பாவம் இல்லாத அகர்மா நிலைக்கு வரவேண்டும்.
ஒவ்வொரு பிறவியிலும் ஈசனே புடம்போடும் வெட்டியானாக/ வெளுக்கும் வண்ணானாக வந்து அவனவன் செய்த வினைகளின் தொகையை ஏடறினாதனாக இருந்து கடமையாற்றி நம்மைச் செம்மைப் படுத்துகிறான். எக்காரணம் கொண்டும் பின்னோக்கித் தாழ்நிலைப் பிறவிகளில் ஜெனிக்காமல் இருக்க அவனே அருளவேண்டும். ஏரழிஞ்சில் விதைகள் மரத்திலிருந்து கீழே விழும்போது அது பூமியைத் தொடாமல் மீண்டும் மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும் என்று சித்தர் பாடல்களில் உள்ளது. நம் ஆன்மா மீண்டும் போய் அவனது பாதங்களில் ஒட்டிக்கொள்ளும் சமயம் நம் கர்மவினைகள் பலமான காற்றாக வீசித் தடத்தை மாற்றாமல் இருக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக