About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 5 செப்டம்பர், 2020

நாம் வாழ்வது நமக்காக அல்ல!

ஒருவன் பாவங்கள் செய்யாது தவ நிலையில் பக்தியில் இலயிக்க வேண்டும் என்றும், எந்த பழிபாவ வம்புக்கும் போகக்கூடாது என்றும் நம் சித்தர்கள் தங்கள் பாடல்களில் சொல்லியுள்ளனர். அதுபோல் என்னென்ன செயல்கள் எல்லாம் பாவங்களில் வரும் என்ற ஒரு நீண்ட பட்டியலை போகர், கோரக்கர் முதலான சித்தர்கள் சொல்லியுள்ளார்கள்.

உங்கள் வளர்ச்சியில் யாரேனும் குறுக்கீடு செய்து உங்களைத் தாழ்த்த நினைப்பது, மேலதிகாரி உங்களை ஏய்ப்பது, உங்களுடைய உழைப்பை வேறு ஒருவர் தன்னுடையது என்பது, புறம் பேசுவது, உங்களுடைய பொருளை அபகரிக்க நினைப்பது, உங்களை வசியப்படுத்தி அடிமையாக்குவது, வேண்டுமென்றே மாந்திரீகம் வைப்பது, நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் குடும்பத்தைக் குலைக்க நினைப்பது, கீழ்த்தரமாக மனம் புண்படக் கடிந்து பேசுவது, என்று பல தினுசான பாவங்கள் நீண்ட வரிசையில் உள்ளது.

இதெல்லாம் ஒருவருக்கு ஊழ்வினைப் பயனாகவே ஒவ்வொரு பிறவியிலும் ஏதோ ரூபத்தில் துரத்துகிறது என்பதற்காக நடக்கும் அநீதிகளை பேசாமல் பார்த்துக் கொண்டு இருக்க இயலுமா? பதிலுக்கு நாம் நேர்முகமாக/மறைமுகமாக போராடி அவர்களை துவம்சம் செய்வது எந்த வகை பாவத்தைச் சேர்ந்ததாக இருக்கும்? ஒருவர் நமக்கு தீங்கு தராதவரை யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்று சித்தர்கள் கருதொழில் காண்டங்களில் சிறப்புறச் சொல்லியுள்ளனர். அப்படியும் மீறி செய்பவர்களை என்ன வகையில் எல்லாம் தாக்கி செயலிழக்க வைக்கலாம் என்பதையும் தகடு மந்திரம் இத்யாதி வழிகளை உபாயமாக சொல்லியுள்ளனர். அவர்கள் சொல்வதையும் நம்பாதோர் பலருண்டு.

'செய்வினையாவது செயப்பாட்டுவினையாவது... இதெல்லாம் போயி நம்பிகிட்டு..' என்று சிலருக்கு முற்போக்காக மூளைச்சலவை செய்துவிட்டு, பிற்பாடு அவர்களே அந்த அப்பிராணி நபர்களுக்கு கருதொழில் மூலம் நசுக்க முற்படுவதையும் பார்த்துள்ளேன். இது என்ன பிழைப்பு? இது போன்றவர்களை, ஸ்தம்பனம் மாரணம் பேதனம் ஆக்ரூஷணம் வித்வேடனம் உச்சாடனம் மூலம் தாக்கி படுக்க வைக்கமுடியும் என்பது பாடல்களில் தெளிவாக உரைத்துள்ளார்கள். ஆனால் எந்த முகாந்திரமும் இல்லாமல் தாக்கீடு செயக்கூடாது. எதிர் தாக்குதல் தரும்போது எந்த சேதாரமும் நிகழாமலா இருக்கும்?

ஆக, அது மீண்டும் ஒரு பாவச்சுற்றுக்குள் ஒருவனை தள்ளிவிடும்... இப்படியாக பழிதீர்க்கும் பிறவிப் பயணங்கள் ஜோராக ஓடுகிறது... வீடுபேறு அடையும் வரை. எத்தனை தொல்லைகள் வந்தாலும் இறைவனின் பாதங்களைப் பற்றியபடி 'அபயம் தா' என்று சொல்லிக் கொண்டே இருப்பதும் ஒரு அளவுக்குமேல் முடுயுமா? எதிராளியை ஒரு கைபார்க்க மனம் கடுங்கோபத்தில் விழையும். இப்படி நிலை மறந்து பாவம் செய்வோமா என்பதும் ஈசனின் சோதனையாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம். ஆசை, பொறாமை, கோபம், வெறி எல்லாம் கடந்து இறுதியில் 'தன்வினை பிறவினை எதிர்வினை' என்று எல்லா வினை வகைகளும் பாவ இலக்கணம் நடத்தும். 

இன்னும் சிலர் மறுபிறப்பு என்ற கான்செப்ட் இல்லை என்று வாதாடுவார்கள். அப்படி என்றால் நாம் பிறக்க வேண்டாமே! காரணமின்றி அல்லல்பட வேண்டாமே! மறு ஜென்மம் இல்லை என்றால் ஊழ்வினை, இம்மை மறுமை, வீடுபேறு என்று ஔவை, வள்ளுவர் மற்றும் பலர் சொன்னது அப்பட்டமான பொய் என ஆகுமே... தவறு செய்த அரசியல்வாதிகளுக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தால் வரவேற்கிறோம்... அதையே ஆன்மாவுக்கு ஈசன் கொடுத்தால் அதை ஏற்க முடிவதில்லை. அவனையே திட்டுகிறோம். 

அந்த ஜென்மத்தின் பாவச்செயல்களுக்கான தீர்க்கப்படாத எஞ்சிய தண்டனை அடுத்த பிறவிக்குப் போய் சேருவதுதான் இத்தனைக்கும் காரணம். ஆன்மாவுக்கான தண்டனை எல்லாவற்றையும் பைசல் பண்ணிக்கொண்டு உடலை போக்க வேண்டியதுதானே, அதற்குள் தர்ம தேவனுக்கு என்ன அவசரம்... எதற்கு மறுபிறப்பில் சொல்லொண்ணா வேதனை தரவேண்டும்? நம்மை யாரும் துன்புறுத்தாமல், நமக்குக் கேடு தராமலும் இருக்கவேண்டும். மீண்டும் ஒவ்வொரு சுற்றிலும் நாம் பழிதீர்க்காதவாறு நமக்குச் சுற்றமும் நட்பும் வாய்க்க வேண்டும். இரு கைகள் தட்டினால்தானே ஓசை வரும்? நம்மை இம்சிக்காத துரோகம் செய்யாத தக்க சுற்றங்களையும் சகவாசங்களையும் அணைக்கவேண்டும். அது ஈசனின் பொறுப்பு! நாம் கலங்கிய ஓடையில் தெளிந்த நீர்போல் இருக்க முடியாதுதான், ஆனால் அப்படி இருக்க அவனருளும், அப்படி தொல்லையில்லாதொரு பிறவி பிராப்தமும் வாய்க்கவேண்டும். கலியுகத்தில் பெரிய யாகமோ பூசைகளோ வேண்டாம், 'நாம ஜெபம்' செய்தாலே நற்கதி கிட்டும். மகான்கள் அருளிய மந்திரங்களை எப்போதும் சொல்லிக்கொண்டே உரு ஏற்றி நம் ஆன்ம பலத்தை வலிமையாக்கிட வேண்டும்.

போன பிறவியில் தவறு இழைத்து தீங்கு செய்தது இந்த உடல் இல்லைதான், ஆனால் அதனுள் இருந்த ஆன்ம லேசுப்பட்டது இல்லை அதனால் அதற்குத்தான் தண்டனை... இதன் காரணமாக அந்த ஆன்மா குடியிருக்கும் தற்போதைய தேகத்திற்கு இன்னல்கள் வருகிறது. இதைத்தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனமறிந்து இப்பிறவியில் பழி- பாவம் செய்யாத நம்மால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம் விருப்பபடியா ஆன்மாவிற்கு புது தேகம் கிடைக்கிறது? நடக்கும் எல்லாவற்றையும் ஈசன்தான் தீர்மானிக்கிறான். மனதால் உடலால் நாம் செய்யும் பாவங்கள் ஆன்மாவையே பற்றும். இவ்வான்மா பல லட்ச தேகங்களில் குடியிருந்தபின் அவை புதைந்தும் எரிந்தும் அழிந்ததைப் பார்த்த ஒரே சாட்சி. வீடுபேறு கிட்டும்வரை அதற்கு அலுப்பில்லை போல. தேகத்தை அதன் கருவியாக  இயங்கவைத்து அது செய்யும் அக்கப்போர் கொஞ்சமில்லை! ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் 3ம் விதியின் படி, 'தீதும் நன்றும் பிறர்தர வாராது' என்பதால் காரணமின்றி துன்பமோ இன்பமோ வருவதில்லை. எல்லாம் நம் கர்மாவின் பிரதி பிம்பம்தான்.

ஆக, தெரிந்தோ தெரியாமலோ கலியுகத்தில் ஒரு சதவிகிதம் கூட பாவம் செய்யாமல் இருக்கமுடியும் என்றால் அவர் மனிதப் பிறவியே அல்ல. அப்படியே ஒரு மனிதன் இத்தனையும் தாங்கிக்கொண்டு பொறுமையாக இருக்கமுடியும் என்றால் அவன் தெய்வத்திற்கு சமம்... வையத்துள் போற்றப்படுவார்!

எல்லோருள்ளும் அந்த சதாசிவம் பரப்பிரம்மமாக இருக்கிறார் என்பதை எப்போதும் நினைக்காமல் செயல்படுவதே பாவங்களுக்கு வழிவகுக்கும். ஆகவே முடிந்தவரை தர்மநெறி கடைபிடிக்க முயற்சிப்போம்!

"பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான்
வேத விதிப்படி நில்லு நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு"

பாவங்கள் செய்வதால் அல்லல்பட்டு இறக்க நேரிடும், அந்த ஊழ்வினைக்கேற்ப பிறவிகள் துரத்தும், யமன் துரத்துவான். இப்படியே இந்த ஓட்டம் தொடரும். கோபத்தையும் அதன் காரணிகளையும் விட்டொழித்தால் பிறப்பு-இறப்பு அறுபடும். வேதம் உரைத்த தர்மநெறிப்படி வாழ்ந்தால் மேன்மையான இடத்தை அடையலாம் என்ற கடுவெளி சித்தர் பாடல் என் நினைவுக்கு வந்தது. சொர்க்க-நரக பதியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்த குருநாதர் போகரும் இதைத்தான் வலியுறுத்தியுள்ளார்.

நம்மால் பிறருடைய பாவங்கள் போக வாய்ப்புண்டா? உண்டு என்கிறார்கள் சித்த பெருமக்கள். நாம் சாலையில் நடந்து போகும்போது, நம் எதிரே முகம் தெரியாத யாரோ எதிர்படுகிறார்கள். எதிர்ப்படுவோரை எல்லாம் நாம் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வையாக நாம் போய்க்கொண்டு இருப்போம்.

பலபேரில் தனிப்பட்ட யாரோ ஒரு நபரை  குறிப்பிட்டு நாம் உற்றுப் பார்ப்பதில்லை. ஆனால், அவர் நம்மை ஒருமுறை பார்க்கலாம், மீண்டும் இரண்டாவது முறையாக ஏதோ ஈர்ப்பின் காரணமாகவோ நம்மைப் பார்க்கவேண்டும் என்ற நினைப்பில் நம்மைத் தாண்டிப்போகும்வரை நம்மையே பார்க்கவும் வாய்ப்புண்டு. இதை நாம் கவனிக்கத் தவறிவிடுவோம். அப்படி நம்மை பார்க்கும்போது, பூர்வஜென்ம பந்தத்தினாலோ, ஊழ்வினைப் பயனாகவோ அவர் நம்மை காரணத்தோடுதான் காண நேரிடுகிறது. நாம் போகும் வழியில் அவரை வரவைத்துக் காணச்செய்கிறது. இதெல்லாம் புரியாத மர்மம்தான்!

இப்படிச் செய்யும்போது, நம்முடைய பார்வையோ, அல்லது அவர் நம் முகத்தைக் காண நேரிடும்போதோ, தன்னிடமிருக்கும் சில பாவங்கள் அடிபட்டுப் போகிறது என்பதை சித்தர்கள் என்னிடம் சொன்னார்கள். நாம் என்ன புனிதனா? நம்மைப் பார்த்து ஒருவனின் பாவங்கள் விலகுமா? என்று உள்மனம் உடனே நினைக்கும். அல்லவா? நாம் அடுத்தவரின் பாவங்களைப் போக்கும்போது நாமே நம் பாவங்களை களையமுடியாதா? என்று எண்ணவும் தோன்றும். நம்மால் சமூகம் மேம்படுவதற்கே நாம் பிறக்கிறோம், நம் அடிச்சுவட்டை விட்டுச்செல்கிறோம். நாம் வாழ்வது நமக்காக அல்ல! ஆனால் இப்படி நடப்பது உண்மை. காரணத்தோடுதான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நம்மைக் கடந்து போவோர்களின் முக்கியத்துவம் அமைகிறது. அப்படித்தான் அவர்கள் வாழ்க்கையிலும் நாம் வந்து போகிறோம். நண்பனாக, சொந்தமாக, ஆசானாக, மாணாக்கராக, இப்படி பல வேடங்கள் ஏற்கிறோம்.

இப்படித்தான் ஒருமுறை என் நண்பரோடு வழக்கமாகச் செல்லாத ஒரு தெரு வழியே நான் செல்ல நேர்ந்தது. நண்பர் ஒரு கடைக்குள்ளே சென்றார். நான் கடை முன்னே நிழலில் நின்றிருந்தேன். அப்போது என் கண் எதிரே ஒருவர் கண் மூடிய நிலையில் சுவரில் சாய்ந்து தெருவில் கால் மடித்து அமர்ந்திருந்தார். "இவர் கோலத்தைப் பார்த்தால் சித்தரா பிச்சைக்காரரா என்று தெரியவில்லையே" என்று என் மனதில் நினைத்தேன். அக்கணமே அவர் திடீரென கண் திறந்து வேறெங்கும் பார்க்காமல் நேராக என்னைப் பார்த்து மெல்லச் சிரித்துவிட்டு மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டார். நான் நினைத்ததை அவர் அறிந்ததால் தன் புன்சிரிப்பு மூலம் பதிலளித்தார். நான் வரும் வழியில் அவர் வந்து அமரந்து என்னைக் காணவேண்டும் என்று மேல் நிலையில் கட்டளை வந்திருக்கலாம். அதேபோல், இவரை தரிசனம் செய்ய என்றுமே போகாத அத்தெரு வழியே அப்போது போகவேண்டி இருந்திருக்கும். அதுபோல் வேறு எவரோ என்னைக் காணும்படி அவர் எதிரே நான் பயணப்படவேண்டி இருக்கும்.

நம்மைச்சுற்றி இருக்கும் இப்படியான சித்த வலைப்பின்னல் மூலம் நம்முடைய ஆன்மாவின் நிலை அறியப்படுகிறது.



3 கருத்துகள்:

  1. Sir I read about your mention about Pranava Veda & Aintiram and its author Brahmarishi Mayan. I would like to know more about this. Could your please provide your mail ID. Mine is gayatrishyam@gmail.com. Thanks

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks for reading my blog post. Vastu Vedic Trust that was founded by Late V. Ganapathy Sthapathi, published it. Please search with keywords 'pranava vedam, ainthiram, ganapathi, vastu vedic trust'.

      நீக்கு
  2. Thanks for your reply. I am Gaythri Shanmugavelan Daughter in law and research associate of erstwhile Vastu Vedic Trust. After Mama's demise, the Trust has gone into some incapable hands and is dysfunctional now. We are collecting more details about Pravana Veda apart from what is available with us. SO when I came upon your post, though of getting some addl info on this. Thannks again.

    பதிலளிநீக்கு