இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு/நேர்காணலை எதிர்கொள்ள ஆங்காங்கே பயிற்சி வகுப்புகள் நடப்பதைக் காண்கிறோம். ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி IPS அவர்களைப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். புகுந்த வீட்டில் கருத்து வேறுபாடுகளால் தன் கைக்குழந்தையுடன் பாட்டி வீட்டில் தங்கியிருந்த சமயம் நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. குழவினர் கேட்ட கேள்விகளுக்கு அப்போது நிலவிய அவரது விரக்தி கோபம் கலந்த மனநிலையில் முகத்தில் அடித்தாற்போல் பதில் சொல்லியுள்ளார். ‘என்னவொரு துணிச்சலான பதில்... அந்நியாயத்தை கோபத்துடன் அணுகும் மனநிலை... இப்பெண் காவல் துறைக்குச் சரியான தேர்வு!’ என்று முடிவு செய்து அவருக்குப் பணி நியமனம் தந்தனர் என்று பேட்டியில் கூறினார். அவர் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இவருடைய பாணியை எல்லோரும் பின்பற்றினால் என்னவாகும்? நாம் தான் யோசித்துச் செயல்பட வேண்டும்!
This blog carries interesting articles on travel, spiritual, personal, poetical, social experience of the author.
About Author
- S.Chandrasekar
- A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.
வெள்ளி, 4 செப்டம்பர், 2020
மேலாண்மைக் கல்வியும் ஏட்டுச் சுரைக்காயும்...
என் நட்பிலுள்ள ஓர் ஆங்கிலநூல் பதிப்பாளர் ‘Sales Success Secrets’ என்ற தலைப்பில் ஆன்லைன் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் பலர் கலந்து கொண்டனர். இன்னார் தன்னுடைய வர்த்தக வெற்றிக்கான யுக்திகள் பற்றி விளக்கமாகப் பேசுவார் என்று போட்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான செயலியை தளமாகக்கொண்டு நிகழ்சியை நடத்துவதால் நான்
இதுபோன்ற App-களை தரவிறக்கம் செய்வதில்லை. இறுதியில் ஏகப்பட்ட செயலிகள் போனில் குப்பையாகக் குவிய, அதை வைத்துக்கொள்வதா நீக்கிவிடுவதா அல்லது அவ்வப்போது hibernate செய்வதா என்றும் தெரிவதில்லை. சரி, விஷயத்துக்கு வருவோம்.
ஒருவர் வகுத்த வெற்றிக்கான யுக்திகள் இன்னொருவருக்குப் பயன்படுமா? படலாம் /படாமலும் போகலாம். இவை எல்லாம் அவரவர் தேர்ந்தெடுத்த தொழிலையும், ஆய்வையும், திட்டங்களையும், கிடைத்த வாய்ப்பையும், சந்தை நிலவரத்தையும், அணுகுதலையும், சந்தித்த சவால்களையும் சார்ந்தது. அச்சு அசலாக எல்லாமே பொருந்தி இருந்தால் இன்னொருவர் எதிர்கொண்டு சமாளித்த விதங்கள் ஓரளவுக்குப் பயன்படும். இல்லாவிட்டால் அந்த அறிவுரைகள் பலசமயங்களில் விபரீதமாகப் போவதுண்டு. நீங்கள் உண்ணும் உணவு இன்னொருவருக்கும் நலம்தரும் என்று நினைத்திடக்கூடாது. ஒவ்வாமல் போக வாய்ப்புண்டு! ஆக இதுபோன்ற சொற்பொழிவுகள் நம் புத்தியில் பதியாமல் போகும்!
80களில் IIM மேலாண்மைப் பள்ளியில் படித்துத் தேறியபின் பல துறைகளில் நிறுவனங்களை தனியாக/கூட்டாக நடத்துபவர்களை பதினாரு ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆங்கில இதழுக்காகப் பேட்டி எடுத்தேன். இயக்குநர் குழுவின் கூட்டாளிகளுடன் தனித்தனியே பேசினேன். ஒவ்வொருவருடைய கோட்பாடும் அணுகுமுறையும் சற்றும் சம்பந்தமின்றி வெவ்வேறு கோணத்தில் இருந்ததைக்கண்டு ஆச்சரியப்பட்டேன். எண்ணத்தால் அணுகுமுறையால் வேறுபடும் இவர்கள் பிறகு எப்படி ஒன்றாகத் தொழில் செய்ய முடிகிறது? என்று நினைத்தேன். அதில் ஒருவர் மட்டும் நிறுவன இயக்கத்தையும் செயலாக்க முடிவுகளையும் தீர்மானிக்கும் தலைமையில் இருந்தார். அனேகமாக அவர்தான் அதிகபட்ச முதலீடு செய்தவராகவும் இருந்தார். மற்றவர்கள் தமக்கு அளிக்கப்பட்டதை முடுக்கி விடுவதிலும், பராமரிப்பிலும், பின்னணிப் பணிகளையும் மேற்கொண்டனர்.
மதிய தேநீர் இடைவேளையில் எல்லோருடன் ஒன்றாக அமர்ந்து நான் பேசிக் கொண்டிருந்தபோது, ‘I understand you all have different perspectives in business approach and problem solving. Then how is this symphony possible?’ என்றேன். அதற்கு மூத்தவர் ‘They are wise enough to take my words and cooperate with me’ என்றார். மற்ற கூட்டாளிகள் தனித்தனியே தொழில் செய்தால் நீடித்திருப்பார்களா? காணாது போயிருப்பார்களா? அது அவரவருக்கு வாய்க்கும் சூழ்நிலையைப் பொறுத்தது. முன்னொரு காலத்தில் பிரபலமாகப் பேசப்பட்ட சுபிக்ஷா சூப்பர் மார்கெட் நினைவிருக்கிறதா? அதை நடத்திய திரு.சுப்பிரமணியம் மேற்படி நபர்களுடன் IIM-இல் ஒன்றாகப் படித்தவர்தான். சூப்பர் மார்கெட் சுருங்கி பால்/காய்கறி வியாபாரமாகி அதுவும் சுருங்கி பட்டாசு விற்பனையுடன் வியாபாரம் வந்து நின்றது. பின்னாளில் நிதிநிலை குளறுபடியாகி மொத்தமாக ஊற்றி மூடியது தான் மிச்சம்!
ஆகவே, கைத்தடியானது உங்களுக்காக நடை போகாது. அடுத்தவருடைய பழக்க வழக்கங்கள் உங்களுக்கு ஒவ்வாது. அவரவர் கர்ம வினைகளுக்கேற்ப வெற்றியும் தோல்வியும் வாய்க்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். Don't choose a career for the other person என்பது என்னுடைய கருத்து.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக