நாமறிந்த ஞானிகளும் மகான்களும் கடந்த ஒன்றை நூற்றாண்டில் இப்புண்ணிய பாரதத்தில் அவதரித்தனர். தமிழகத்தில் அருணகிரியார், பட்டினத்தார், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர், வள்ளலார், பாம்பன் சுவாமிகள், சக்கரை அம்மா, சேஷாத்ரி சுவாமிகள், ரமணர், காஞ்சி பரமாச்சாரியார் என பலபேர் அவதரித்து ஆன்மிக உலகில் சுடர்மிகு நட்சத்திரங்களாய் நிலைத்தனர். நம் கண்களுக்கு என்னமோ இவர்கள் எல்லோரும் சாதாரணமாகப் பிறந்து, வளர்ந்து, படித்து, கஷ்டங்கள் அனுபவித்து யோக சாதகம் புரிந்து குருவருள் துணையுடன் நிலைத்ததாக நினைப்போம். உண்மைதான்! ஆனால் இவர்கள் எல்லோரும் Special assignment duty ஏற்றுப் பூமியில் அவதரிக்க வந்த தேவலோக/ நாகலோக ரிஷிகள் என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
இப்பிறவிக்கு முன் நம்மைப்போல் இவர்களுக்கு முற்பிறப்பு என்னவாக இருந்திருக்கும் என்று நினைத்தால் அதற்கு விடை கிடைக்காது. ஏனென்றால் இவர்கள் பல காலமாய் ரிஷிகளாக இறையுடன் சங்கமித்துவிட்ட ஆன்மாக்கள். பூவுலகில் மனிதர்களாய் வந்து பிறக்கவேண்டிய நிலையைத் தாண்டிய பரம புருஷர்கள். ஆனால் கலியுகத்தில் ஆங்காங்கு பிராந்தியமாக மக்களை வழிநடத்த அவதாரம் செய்யச் சிறப்பாகப் பணிக்கப்பட்டவர்கள். பிற்காலத்தில் வெளியான இவர்களைப் பற்றிய சத்சரிதம் சரிதைகளில் ரிஷிமூலங்கள் வெளிபட்டிருக்க வாய்ப்புண்டு.
அண்மையில் ஸ்ரீபாதஸ்ரீவல்லபர் சரிதத்தை எழுதும் போதுதான் சதாசிவ பிரம்மேந்திரர், வள்ளலார் பற்றிய ரகசியங்களை அறிந்துகொண்டேன். நான் சொன்னதை வள்ளலாரின் சமரச சன்மார்க்க சங்கத்தாரே ஏற்க மாட்டார்கள்.
இன்றைக்கு உழன்று கொண்டிருக்கும் நீங்கள்கூட மறுபிறவி நிலைகளைக் கடந்தவர்களாக இருக்கலாம். என்ன சிரிக்கிறீர்களா? சாத்தியங்கள் உண்டு! யாரை உயர்த்திவிட வழிநடத்த இப்பிறவியை ஏற்றீர்களோ தெரியாது. ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு காரணத்தைத் தந்து இங்கே அனுப்பிய பரமனுக்கே அந்த ரகசியம் தெரியும். அதைத்தாண்டி உங்களை நோக்கி வரும் குருவுக்கும் உங்களுடைய பூர்வ சரிதம் புலப்படும். அர்ஜுனனிடம் கிருஷ்ணர், ‘விஜயா! உன்னுடைய முற்பிறவிகளை நீ அறியாய் ஆனால் நான் அறிவேன்’ என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக