About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

காலாங்கிநாதர் இயற்றி அருளிய ஞானவிந்த ரகசியம் 30

திருமூலரின் மரபில் வந்த சித்தர்கள்தான் புகழ்மிக்கக் காலாங்கி, போகர், புலிப்பாணி, கருவூரார், கோரக்கர் ஆகியோர். அதில் காலாங்கிநாதர் தன் உன்னதமான சீடர் போகருக்கு உரைத்த நூலை இங்கே தொகுத்து அளிக்கவுள்ளேன். சித்தனானவன் எப்படிப்பட்ட ஞானத்தை யோகத்தை கற்பத்தை உண்டு சித்திகள் பெற்றுக் கடைத்தேறுவது என்பதைப் பற்றி காலாங்கி தெளிவாக உரைக்கிறார். இவருக்கு கமலர், கஞ்சமலை சித்தர் என்ற வேறு பெயர்களும் உண்டு. சீன இலக்கியம் குறிப்பிடும் காங்ஸி @ கன்பூசியஸ் என்பவரும் நம் காலாங்கியே! என் முந்தைய பதிவில் காலாங்கி-போகர் பற்றிய தகவல்களைப் பதிவிட்டிருந்தேன்.

காலங்கி /காலாங்கி/ காளாங்கி என்று பலவாறு இவரை அழைப்பார்கள். சித்தர்கள் அனைவரின் பெயருமே வாசி, கலை, யோகம், ஆறாதாரம், சித்தி ஆகியவற்றை மையமாகக் கொண்டே அமைந்துள்ளது. வாசியோட்டத்தின் இடகலை-பிங்கலை-சுழுமுனை என்பதே கால் எனப்படுகின்றது. அந்தக் கலைகளான வாசிக்காலையே அங்கியாக அணிந்தவர் என்றும் கொள்ளளாம். கால/காள என்பது ஊர்ந்திடும் சர்ப்பத்தையும் குறிக்கும். பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழி இதிலிருந்து வந்ததுதான்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலையானது எத்தனை மேன்மையான சிவதலம் என்பதையும் அங்கே வெளிப்படும் சித்த தரிசனங்களுக்கும் மூலிகை அமானுஷ்யங்களுக்கும் அளவே இல்லை என்பதை இந்நூலில் தெளிவாக்கியுள்ளார். இனிவரும் பதிவுகளில் என் பரமகுரு காலாங்கிநாதர் உரைத்த பாடல்கள் வழியே அனைத்தையும் சுருக்கமாகச் சிந்தித்துத் தெளிவோம்.

பாடல்கள் 1- 5

உயர்வான நான்கு மறைகளை அறிந்துப் போற்றும் சித்தர்களுகளுக்கு வேத ஒளியாகவும், அண்டத்தில் இருக்கும் பஞ்சபூதங்களை உழுது எல்லா உயிர்களின் பிண்டத்திலும் வைத்து, பாரினில் எங்கும் வியாபித்து இருக்கும் ஓங்கார பிரணவத்தின் ஞான ஆற்றலை மெளனமாக இருந்து தியானிக்க, இந்தப் பிரபஞ்சத்தின் வஸ்துவில் சற்குருவாக நின்று நிலைத்துள்ள பரம்பொருளின் பாதவிந்தங்களைத் துதிப்பதே காப்பு. 

சம்சாரியாகக் குடும்பத்தில் இருந்துபடி பெண்களுடன் இல்லறத்தில் விளையாடிக் கொண்டிருந்தால் ஞானம் எப்படி வரும்? நாட்டில் இதை அறியாத பலபேர் அதில் இலயித்துக் கொண்டே ஞானம், வாதம், யோகம் கற்கிறேன் என்று முயல்கிறார்கள். ஏட்டிலே சுரைக்காய் என்று எழுதி வைத்தால் அது கறிக்கு உதவுமா? ஒளி பிரகாசத்துடன் இருக்கும் சகஸ்ரார சக்கர மேருமலையில் குண்டலினி யோக சக்தியை ஏற்றினாலே அதெல்லாம் சித்திக்கும். (காலங்கி நாதர் இல்லறத்தைத் துறந்து தன் மனைவியை விட்டுப்பிரிந்து தன் மகன்களை அவரவர் போக்கில் பிழைத்துக்கொள்ள விட்டுவிட்டார் என்று போகர் தன்னுடைய பெருநூலில் சொல்லியுள்ளார். ஆக, காலாங்கி தன்னுடைய அனுபவம் மூலம் இப்பாடலில் புரிய வைக்கிறார். சீன இலக்கியத்தில் கன்பூஸியஸின் சரிதையிலும் மேற்படி இவ்விஷயம் சொல்லப்பட்டுள்ளது.)

இரு கண்களுக்கும் இடையே புருமத்தி என்கிற லலாட பகுதியின் ஆக்ஞேய சக்கரத்தில் ஊன்றி நிலைத்து தரிசனம் செய்தால் பசி தெரியாது. அடி,முடி,நடுவாக ஜீவ ஒளியில் அயன் மால் ருத்ர தரிசனத்தையும் மயக்கமில்லாமல் அனுபவிக்கலாம். இம்முறையை சாம்பவி சக்தியே எனக்குக் கற்பித்தாள். இதை மறைப்பின்றி எவரும் சொல்வாருண்டோ? இந்நூலில் சொல்கிறேன் கேள்.         

உயிர்குறிலாகிய அஇஉஎஒ எழுத்துக்களான இவை ஐந்தும் நமச்சிவாயத்தின் பிம்பமாகவுள்ள எழுத்துக்கள். இவற்றில் சிவனும் சக்தியும் உறைகின்றனர். நம் தேகத்தில் ஓடுகின்ற நாடியின் கலைகளில் சந்திரகலை 16, சூரியகலை 12, அக்னிகலை 10 என்று இருப்பதும் சிவசக்தியே. நமசிவாய என்ற பஞ்சாட்சரத்தின் மேன்மையிலும், நான்கு வேதங்களிலும் ஒருங்கே இருப்பது சக்திசிவன் தான் என்பதை அறியவேண்டும். இடகலை, பிங்கலை, சுழுமுனை வழியோடியே இதில் ஏற்றம் பெறலாம்.

மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்ற இந்த நான்கும் இறைவன் நமக்கு இறவா நிலை அடைவதற்குரிய கருவிகரணங்களாகப் படைத்துள்ளான். இதுவே அந்தகரணங்கள் ஆகும். இந்த மனதை வாசியால்தான் கட்டிவைக்க முடியும். இதை வைத்துத்தான் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பாதையில் நடக்கவேண்டும். மனம் ஆகாயத் தத்துவம் கொண்டது. மனம் நினைப்பதை புத்தி (எ) மூளை கட்டளைத்தரும். ஆங்காரம் என்பது நம் உடலில் பொருந்தியிருக்கும் ஆற்றல். (ஆனால் இதை தவறாக அகங்காரம் என சொல்வோர் உண்டு. அகங்காரம் என்பது நம் உடலை விட்டு நீக்க வேண்டிய ராக-தத்துவம்.) சிந்திக்கும் இடமே சித்தம். (அதனால்தான் சிந்தித்துச் செயலாற்றும் திறனுள்ளவரை நல்ல சித்த சுவாதீனத்துடன் இருப்பவர் என்கிறோம்.) மனத்தை அறிய வேண்டுமானால் அது உருவான மூலத்தை உணர வேண்டும். காற்றை அடக்க மனம் அடங்கும். அண்டமும் பிண்டமும் பஞ்சபூதங்களின் கூட்டு. ஆகவே அடி-முடி அறிய வாசியால் இயலும். வாசியில் சூரியனும் சந்திரனும் சங்கமிக்கும் சுழுமுனையில் அக்னியே பிரதானம்.

(மேலோட்டமாகச் சொன்ன ஒவ்வொரு பாடலிலும் உட்கருப் பொருளை ஆராய்ந்தால் யோக தத்துவம், ஞானம், தீட்சை, துறவறம், சித்தி, சமாதி என இன்னும் ஆழமாகப் போகும். அதை வெவ்வேறு நூல்களின் துணைக்கொண்டு வாசித்து மகிழுங்கள்.)

பாடல்கள் 6-10

அந்தப் பரவெளிச் சுடரில் எல்லாமே அடங்கும். அதற்குள்ளே ஊன்றிப் பார்த்தால் இந்த அண்டம் எல்லாமுமே உன்னுள்ளே வெளிப்படும். அண்டத்தில் உள்ளவை அனைத்தும் பிண்டத்தில் தனித்தனியே காணலாம். சரம்-அசரம் என ஜெகத்திலுள்ள யாவையும் அந்த இரு கண்களுக்கு மத்தியில் காணலாம்.

வேதங்களும் (ஸ்ருதி), வேத அந்தங்களும் (ஸ்மிருதி) தலையும் காலுமாய் இருந்து மனிதனை தத்துவ பாதையில் நல்வழிப் படுத்துகின்றன. இவற்றைக் கைக்கொண்டால் சித்தி வாய்க்கும். அதை ஏற்காதவர்களுக்கு அருளப்பட்ட மெய்யான உறையும் பொய்யாகத் தெரியும். குருத்துக்குள் இலை பூ காய் பழமெனப் பொதிந்திருப்பதை அறியார். அதை அறிந்தவர்க்கு ஞானமெனும் குலை தள்ளும்.

மேன்மையான சதுரகிரியின் மகத்துவத்தைச் சொல்கிறேன். கேட்டு அதன்படி மனத்தில் நிறுத்தி கடைத்தேறும் வழியைப்பார். நந்தியெம்பெருமான் எனதையன் திருமூலருக்குச் சொன்னதை இப்போது உனக்குச் சொல்வேன். சதுரகிரியில் எண்ணற்ற குகைகளும் அதற்கான வழிகளும் கண்டுத்தெளிந்து போனால் தவசிகளுக்கு அருமையான இடமாகும். அங்கே அடர்ந்த தோப்புகளும் விருட்சங்களும் ஆங்காங்கே தனித்து ஓடும் நீரோடைகளும் மெத்தவுண்டு.

நான்கு வேதங்களும் ஒன்றாகச் சேர்ந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படியொரு இடமே சதுரகிரி. விண்ணவர் தேவர்களும் பண்ணிசைத்து அங்கே மகாலிங்கரின் பொன்னடிக் கமலங்களைத் தரிசித்து யோக நிஷ்டையில் இருப்பார்கள். ஈசனின் உத்தரவின் பேரில் மீண்டும் பிறந்து உடலெடுத்து முனிவராக உயர்ந்த பின் சித்தர்களாக ஏற்றம் பெறும் தலமே சதுரகிரி. (இல்லறத்தில் இருந்து உயர்வோர் ரிஷிகள், இல்லறத்தில் புகாமல் தனித்தே உயர்வோர் முனிவர்கள்.) 

பெயருக்கு ஏற்றாற்போல் நான்கு பக்கங்களிலும் மலைச் சிகரங்களுடன் விளங்கும் சதுரகிரிக்குச் செல்லும் பாதை கடினமாகத் தெரியும். குழப்பும் வழிகள் நிறையவுண்டு. மூன்று பக்கங்களிலும் வனப்பாதைகள் பிரியும் கானகத்தில் வழி அறிவது மிகவும் சிரமம். சிவனின் துணையால் தெற்குத் திசையில் மலையடிவாரதிற்குச் செல்லும் பாதையைப்பற்றிச் சொல்கிறேன். நீர் நிறைந்த ஓடையுள்ள தோணிப்பாறை இருக்கும். அவ்வோடை செல்லும் வழியே செல்! (அம்மலையின் தோற்றம் காண்பதற்குத் தோணி வடிவில் இருக்கும். பிற்பாடு அது தாணிப்பாறை என்று இக்காலத்தில் மருவியது.) 

பாடல்கள் 11-15 

அந்த ஆற்று வழியோரம் சென்றால் அது சேரும் இடத்தில் சிறு மலைக்குன்றுகள் நிறைய உண்டு. அங்கே சாய்வாகச் செல்லும் பாதையை நீ பற்றிக்கொண்டு சென்றால் நவசித்தர்கள் குகை தென்படும். அங்கே நின்று அவர்களை மனத்தில் எண்ணி தண்டமிட்டபின் இன்னும் மேற்கொண்டு போகவேண்டும். சற்றுத் தொலைவில் அவ்வழி வடக்கே இட்டுச் செல்லும் இடத்தில் உயர்ந்து நிற்கும் மலையருகில் ஒரு குகையும் தென்படும். 

அந்தக் குகையினுள்ளே சென்றால் பாம்பாட்டிச் சித்தர் தவத்தில் இருப்பார். அவரை வணங்கிக் கொண்டு நேரே மேற்காகப் போனால் அத்திரி ரிஷியாரின் குகையுண்டு. அப்படியே ஆற்றோரமாகச் சென்றால் அங்கே அத்திமரத்தடி நீரூற்றும் தென்படும். அங்கிருந்து ஏற்றத்தில் நெடும் காடு தொடங்கும். கற்பாதைகள் நிறைந்த அதைக் கடக்க யாரும் அறியார்.     

அப்பாதையிலேயே போனால் நாதாந்த சித்தர்கள் தவமியற்றும் குகைப்பகுதி வரும். அங்கே அமானுஷ்ய வேதைகள் ஏதாவது நடக்கும் அதில் மயங்காமல் உள்ளே சென்றால் குதம்பைச் சித்தரின் குகை தெரியும். சச்சிதானந்த போதையில் லயித்து இருக்கும் ஞான சித்தரை வணங்கிக் கொண்டு அங்கே வாதை மார்க்கதிற்குப் போகாமல் தவம் செய்யும்     மிருகண்டேய ரிஷியாராய் நீ வணங்கினால் அகச்சுத்தியடையும் பேற்றைப் பெற ஆசிகள் நல்குவார்.

அவ்விடத்தைவிட்டுப் போனால் சுகமான வரரிஷியார் குகையும் வரும். காத தூரத்தில் இருவழிகள் தோன்றும். மாதவம் செய்த யோக சித்தரகளாம் பதஞ்சலி வியாக்கிராமர் மற்றும் அகப்பேய் சித்தர்களும், வியாசரிஷியும் தெளிவாய்த் தெரிவார்கள்.   

அதைத் தாண்டிப்போனால் உயர்வான கோரக்கர் குண்டா தென்படும். கஞ்சா மூலிகையைக் கற்பமாகக் கடைந்து உட்கொண்ட கோரக்கர் சித்தர் அதை எல்லோருக்குமே ஈய்வார். அவர் அக்குகையில் யோகத்தில் நிலைத்திருப்பார். அவரைக் கண்டுகொண்டால் ஞான அமிர்தமும் கிட்டும். 

பாடல்கள் 16-20 

கோரக்கர் குண்டா சுனையில் தீர்த்தமாடினால் எப்படிப்பட்ட பிணியும் அகன்றுபோகும். குனிந்து இரு கரங்களையும் குவித்து அச்சுனையிலிருந்து நீரை அள்ளி மூன்று முறை குடித்தால் ஊழ்வினைகள் நீங்கும், பருகியவர் ஜென்மம் சாபல்யமாகும். சித்தரை தியானித்தால் நல்வாழ்வு கிட்டும், ஞான அமிர்தம் பருகக் கிடைப்பதோடு உயர் குணத்தைப் பெறுவார்கள்.

அக்குகையில் முனிவர்களும் சித்தர்களும் யோகிகளும் ஒன்றாய்க்கூடி கற்பம் உண்பார்கள். அங்கே பலவிதமான வைத்திய முறைகளையும் வாத தயில முறைகளையும் ஆகாய மார்க்கமாகப் பறக்க உதவும் கெவுன குளிகையையும் செய்து, பாதரசத்தை இறுக்கி உருட்டி மணியாய்க் கட்டி எந்தக் கவலையுமின்றி அங்கே இருந்து வாழ்கிறார்கள். சம்சாரத்தில் இருந்த ரிஷிகளும் அச்சங்கமத்தில் போய் இருந்தால் பெருமையைத் தரும்.

பெருமை வாய்ந்த கோரக்கர் குண்டா ஓரமாகவுள்ள சுனையில் நீராடி அதன் நீரைப் பருகினால் இதுவரை செய்த பாவங்கள் எல்லாமே அகன்றுபோகும். கோரக்கரை உளமாரத் துதி செய்தால் நற்பெரும் வாழ்வு உண்டாகும். வெறுமனே அவர் யார் கண்களுக்கும் புலப்பட மாட்டார், அவரைப் போய்ப்பார்க்க மூல மந்திரம் ஜெபித்துத் தியானித்து வேண்டிக் கொண்டாலே தரிசனம் தருவார். 

செம்பாறையின் ஏற்றத்தில் உள்ள ஒரு வழியானது மீன்கள் நிறைந்த சுனைக்கு இட்டுச்செல்லும். தெற்கே ஒரு குகையுண்டு அங்கு மச்சமுனி வாசம் செய்வதைக் காணலாம். (மச்சமுனி/ மச்சேந்திர நாதர்/ மச்சேந்திரா என்றும் அழைக்கப்படுகிறார். இவருடைய வாசஸ்தலங்களாக திருப்பரங்குன்றம், நாகை வடக்குப் பொய்கை நல்லூர், இமயமலை, ஹரித்வார், ருத்ரப்பிராயகை, சதுரகிரி, கொல்லிமலை, நேபாளத்தில் பாக்மதி, ஆகிய இடங்களும் நூல்களில் சொல்லப்படுகின்றன.) காத தூரம் (1 காதம் = 10 மைல்) கீழே சென்றால் கயிலாயச் சட்டைமுனி வெகுகாகலமாய் நிஷ்டையில் இருக்கும் இடமும் தென்படும்.

தொடர்ந்து தென்கிழக்குத் திசை நோக்கிச் சென்றால் ராமரிஷி வாசம் செய்யும் இடமுண்டு. அதைத்தாண்டிப் போனால் கருநெல்லி வனம் வரும். அங்கே இடைக்காடர் தன்னிலை மறந்து வெட்டவெளி தியானத்தில் ஈடுபட்டிருப்பார். 

பாடல்கள் 21-25

அங்கே எண்ணிலடங்காத பசுக்கள் தன் கன்றுகளுக்குப் பாலூட்டி நிற்கும். ஆண் எருது குகையிலேயே இருக்க, மேய்ச்சல் முடிந்து திரும்பும் பசுக்களுடன் ஒன்று சேரும். அவ்விடத்திற்கு மகாலிங்கர் தினமும் வந்து அமுது உண்டுவிட்டுப் போவார். அப்பசுக்கள் தவத்திலுள்ள யோகிகளுக்கும் எனக்கும் பாலமுதை வழங்குகிறது.  

அது வழங்கும் அமுதத்தை உண்ட நான் கிழங்கு கீரை காய் கனிகள் உண்டு வடக்கு ஈசான கீழ்பாகத்திலொரு குகையில் சில காலம் இருந்தேன். அங்கே கெவுன சித்தர்களுடன் கூடிப் பேசி, அவ்விடத்தில் வகார, ரசவாத தயிலங்கள் காய்ச்சியும் பலவிதமான கற்பங்கள் செய்து உண்டு சித்தர்களுக்கும் தந்தேன். (ஆகாய மார்க்கமாகப் பறந்த சித்தர்களுள் காலாங்கி போகர் அகத்தியர் திருமூலர் பிரசித்தி பெற்றவர்கள்.) எல்லோருக்கும் கொடுத்தது போக மிச்சமிருந்த தயிலத்தை அங்கே ஓரிடத்தில் ஸ்தாபித்து வைத்தேன்.    

உயிர்காக்கும் சஞ்சீவியாக உயர்வான அத்தயிலங்களும் தேக சித்திக்கு வழிவகுக்கும் கற்பங்கள் இருக்குமிடத்தை நான் உனக்குச் சொல்கிறேன். குறுக்காகப் பாறை ஒன்று எதிர்படும். தயங்காமல் நீ நேராகப் போனால் கரைகளே இல்லையோ என்று நினைக்கும் அளவில் பெரிய மூன்று சுனைகள் சூழ்ந்த பகுதி வரும். முனிவர்களும் சித்தர்களும் அங்கே வாசம் செய்து வருகின்றார்கள். அந்தத் தயிலத்தை எந்தப் பாவிகளுக்கும் பெறாமல் இருக்க பலா மரத்தடியில் பாறையை ஒன்றை தூக்கி நிறுத்தினேன்.

பாறையைத் தூக்கியபின் அங்கே குழிதோண்டினேன். போகர் உள்ளிட்ட சித்தர்களுக்குக் கற்பித்து அளித்தது போக எஞ்சிய (கற்பம், ரசவாத) தயிலத்தை வெளியே தெரியாதபடி அங்கு ஆழமாய் அக்குழியில் கொட்டி வைத்து அது மேலும் பொங்கி வழியாமல் இருக்க கற்பாறையால் மூடிவைத்துச் சீலைமண் பூசி வைத்தேன். (பிரியாணி பாத்திர வாயை மாவு கொண்டு அழுத்திப்பூசி ‘தம்’ கட்டுவது போல்). அதற்குக் காவலாக பேச்சியம்மன், வனதுர்க்கை மற்றும் பலாமரத்தடி (பிலாவடி) கருப்பரையும் நியமித்தேன்.

தயிலத்தின் தேவையறிந்து அங்கே பகலிரவாய்க் குழுமிடும் சித்தர்/ முனி/ முத்தர்கள் அனேகம்பேர். சிகரமாம் கபால பீடத்தில் வாலை ஜோதியை அறிந்த சித்தர்களாக இருந்தால் மட்டும் கிணற்றைத் திறந்து தயிலம் எடுத்துக்கொடுங்கள் என்று துர்க்கைக்கும்/கருப்பருக்கும் கட்டளை இட்டுள்ளேன். சிவனையும் சக்தியையும் அறியாத மூடர்களுக்கும் கருமிகளுக்கும் இது கிட்டாது. பேராசைப் பிடித்தவர்க்கும் வீணர்களிடமும் போய்ச் சேரக்கூடாது. பிரம்மானந்தத்தை அடைந்து, மூப்பைக் கடந்து, மாயையை வென்ற முத்தர்களுக்காக இத்தைலத்தைச் செய்து சேமித்து வைத்தேன். எம் உண்மையான சீடன் போகருக்காக 'ஞான விந்த ரகசியம்' என்ற இந்நூலை உரைத்தேன்.

(சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அருகிலே உள்ள அக்கிணறு இப்போது இரும்புச் சட்டங்களால் மூடப்பட்டுள்ளது என்பது தகவல். காலாங்கிநாதர் குறிப்பிடும் சித்தர், முத்தர், ஞானியர் என்போர் யார் என்பதை கோரக்கர் அருளிய ‘பிரம்ம ஞான தரிசனம்’ நூலில் ஒரு பாடல் விளக்குகிறது. அரும்பு -சரியை, மொட்டு -கிரியை, காய்-யோகம், கனி-ஞானம், போன்ற நிலைகளை இது ஒத்தது. அதாவது அவர்களது உயர்வு நிலைகளில் வேறுபாடுண்டு.

சதுரகிரியில் தயிலக் கிணறு இருப்பதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். வனாந்தர அடுவியில் அதைத் தேடி பூமியை அங்குலமாய்ச் சல்லித்தக் கூட்டமும் உண்டு. அதனால் கிணறு நம் கண்களுக்குப் புலப்படவேண்டும் என்றால் அவர் விதித்த உயர் தகுதியைப் பெற்றாலே சாத்தியம். அவ்விதம் எதுவுமின்றி பூர்வஜென்ம விட்டகுறையாக அதெல்லாம் கண்களுக்குப் புலப்பட்டும், தயிலம் நமக்கு வாய்க்கப் பெறவேண்டும் என்றால் அதை குருவும்-பரமகுருவுமே தீர்மானிப்பர் என்பது என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்ட உண்மை.)

பாடல்கள் 26-30

நூல் உரைத்த அவ்விடத்தில் ஈடுயிணையின்றி ஒப்புவமை இல்லாத அளவுக்குப் பல வினோதங்கள் நடக்கும். விரிந்த சதுரகிரி வனமெங்கும் கோடிக்கணக்கான மூலிகைகள் உள்ளன. மகாலிங்கரின் மகத்துவைத்தை அழுத்தமாகச் சொல்லும் சதுரகிரியின் மேன்மைக்குக் கயிலாய மலையே ஈடாகாது என்று நந்தியெம்பெருமான் எனக்கு உண்மையை உரைத்தார்.   

நான் சொன்ன பிலாவடி கருப்பனை வணங்கிகொண்டு கீழ் திசை நோக்கிச் செல்வாய். அங்கே சுயம்புவாய் உதித்த மகாலிங்கர் கோயிலுண்டு. பூலோகக் கற்பகத்தருவும் உண்டு. நலம் தரவேண்டிச் சுந்தரமகாலிங்கரை வணங்கியபின் இன்னும் கிழக்கே போனால் பல குகைகள் சூழக் குளிராட்டித் தோப்பும் அருவியிலிருந்து வரும் கருநீலச் சுனைத் தீர்த்தமும் உண்டு.  

அங்கே குகையில் (சப்த) கன்னியர்களுண்டு, நிறம் மாறுகின்ற பச்சிலைகளுமுண்டு. சுந்தர மகாலிங்கர் கோயிலுக்கு மேற்கே போனால் என் குருநாதரும் உன் பாட்டனாருமான திருமூலரின் குகைத் தென்படும். அவரையும் தண்டமிட்டுக்கொண்டு அப்பால் போனால் ஜனகரின் குகையை அடைவாய். (பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.)

அப்பகுதியில் கொங்கணர் இராமதேவர் கருவூரார் பிரம்மமுனி கூர்மானந்தர் ஆகிய சித்தர்களை குகையில் தரிசித்தால் அபூர்வமான சோதி விருட்சங்களும் மூலிகைகளும் கணங்களுக்குத் தெரியும். சிவனின் முடித்த சடையைப்போல் காணும் கல்தாமரை மூலிகையின் இலையை உண்டால் ரசவாதம் நம்முடலில் வேதிக்கும். (கல்தாமரை என்பது சித்தர் விருட்சம். செம்பை பொன்னாக்கும் ரசவாத மூலிகையாகும்.)

அழுகணி சித்தரைத் தொழுதால் கண்ணிமூலி என்ற சிறப்பைப் பெற்ற கருநொச்சி மூலிகையும் தென்படும். (நம் வீட்டுப் பகுதியில் அதிகம் பார்ப்பது வெண்ணொச்சி.) நரை திரை போக்கி கற்பமாக காக்கும் வல்லமையுடையது. அங்கே மஞ்சள் நீரோடையும் அதனருகே சுனையையும் காண்பாய். அந்த நீரைப் பருகிடு. இதுபோல் பல இடங்கள் அப்பகுதியில் உண்டு, இந்த ஆச்சரியங்கள் பலருக்கும் தெரிய வாய்க்காதப்பா. இத்தகைய மேன்மையான சதுரகிரியைத்தான் சஞ்சீவி மருந்துமலை என்று பெரியோர்கள் உரைத்தனர்.

(பதவுரை முற்றும்)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக