About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 9 அக்டோபர், 2020

மந்திர சப்த பிரபஞ்ச தகவல் பரிமாற்றம்

பண்டைய காலத்தில் சித்தரிஷிகள் வேற்று கிரகத்தினருடன் தொடர்பில் இருந்ததையும், ஆகாய வெளியில் பறக்கும்போது பூமியிலிருந்து தகவல் பரிமாறியதையும் பழைய பதிவுகளில் விளக்கமாகப் பார்த்தோம். இதெல்லாம் செயல்பட நம் ஆலயங்களே தகவல் ஒலிபரப்பு நிலையங்களாக இருந்தன. சிவலிங்கம், மேரு பீடம், துவஜஸ்தம்பம், மற்றும் ஏனைய விக்ரகங்கள் மின்காந்த அலைகளைப் பரப்பும் ஆற்றலைப் பெற்றிருந்தன. இப்போதும்தான்!

அதற்கு எந்த மொழி பயன்பட்டது? சமஸ்கிருதம்! கணினி மின்மொழிக்கு பைனரி முறை எப்படி உதவுகிறதோ அப்படித்தான் வடமொழி மந்திரங்களும் கச்சிதமாகச் செயல்பட்டது. மின்காந்த தகவலுக்குத் தமிழ் பயன்படவில்லையா? இல்லை. ஏன்? பீஜாக்ஷர சப்தங்களும், ஒலித்திறன் கற்றைகளை மாற்றவல்ல மந்திர கணித பிரயோகங்களும் தமிழில் இல்லை. தமிழ் மொழியானது பண்ணிசைத்துத் துதிக்க ஏற்புடையதாகும். சிவதலங்களில் கனம் பாடி வேதம் ஒதும்போதும், ஆவளி மந்திரங்களை உச்சரிக்கும் போதும், பூமியின் காந்தசக்தியாலும் மாறுபடும் சிவதலங்களின் பூகோள பாகையின் நுட்பமான தாக்கத்தாலும் இவை ஆகாசத்தில் தெறிக்கும். அங்கே சஞ்சரிப்போர் இதை அறிந்துகொண்டு அத்தலத்தில் இறங்க இவை ‘கலங்கரை விளக்கம்’ வழிகாட்டியாக உதவியது.

சோழனின் கோயில் கட்டடக்கலையில் பெரும்பாலும் திருதூங்கானை மாடம் இருக்கும். இது ஒலி/ஒளி அலைகளை பன்மடங்கு பெரிதுபடுத்தும் ஆற்றல் வாய்ந்தது. ஒருமுறை மந்திரங்கள் சொல்லும்போது மட்டும் இவை பிரபஞ்சத்தில் எதிரொலிக்குமா? இல்லை. எப்போதுமே திருவுண்ணாழியில் மந்திர அலைகளின் வீரியம் குறையாமல் உயிர்ப்புடன் இருந்துகொண்டே இருக்கும். இதை குறையவிடாமல் சக்தி பாய்ச்சுவது எது? மூலவர் சிலையின் கீழுள்ள ஸ்படிக மற்றும் நவரத்ன மணிகளும், யந்திர தகடுகளும் மின்னணு சர்கியுட் போர்ட் போல் செயல் படுகிறது. துவஜஸ்தம்ப கொடிமரம், விமானத்தின் கலசம் என இவை மின்னலைகளை வாங்கும்/அனுப்பும் கோபுரங்களாகப் பயன்படுகிறது. கோயிலில் சிவலிங்கமே ஸ்படிகத்தில் இருந்தால் அதைவிட மேலான வேறு உபகர்ணம் இல்லை. மந்திர சப்த அலைகளின் எதிரொலி தொடர்ச்சியாக வாழும். அதன் சக்தி நிலை damped signal ஆகிப் போகாமல் இருக்கத்தான் அடியில் பதித்த மணிகள் பீஸோ எலெக்ட்ரிக் கிரிஸ்டல் போல் சக்தியைப் பெருக்குகிறது. மணி அடிக்கும்போது எழும் ஓங்கார சப்தம் அவ்வப்போது pulse signal போல் சக்தியைத் தூண்டிடும். விக்ரகங்களுக்கு நவமணிகள் பதித்த ஆபரணங்கள் சூட்டுவதற்கும் இதுதான் காரணம்.

அதனால்தான் மூன்று காலமும் பூசைகள் நடந்தன. மந்திர அதிர்வுகள் தொடர்ந்து ஓதப்பட்டது. ஆகாசம்-பூமி இடையேயான ஆகர்ஷணம் நிலைத்திருக்க மின்னலைகள் கடத்தப்பட்டு வந்தன. அதனால்தான் வேதமொழி தேவமொழி என்ற சிறப்பைப் பெற்றது. இதை நிராகரிப்போர் உண்டு. கருவறையில் மூலவர் முன்னிலையில் மந்திரங்களும் வேண்டுதல் சங்கல்பமும் தவிர வேறு உரையாடல்கள் யாரும் பேசுவதில்லை. ஏன்? அதுவும் பிரபஞ்சத்தில் எதிரொலிக்கும், மின்னியல் இடர்பாடுகள் தோன்றும். மிஞ்சிப்போனால் உடல்மொழியில் சைகையாக கையசைத்து உரையாடலாம். கருவறையை விட்டு வெளியே வந்து பேசினால் பாதகமில்லை. இதை அடிப்படையாகக் கொண்டுதான் குஹகர்ப்ப ஆகர்ஷண, சப்த ஆகர்ஷண யந்திரங்கள், விஸ்வகிரியா, ரௌத்ரீ தர்ப்பன சூத்திரங்கள் மற்றும் முன்னேறிய பல காந்த மின்னியல் யந்திரங்களை வடிவமைத்தனர். அது காலா காலத்திற்கும் மந்திர ஒலியில் உயிர்ப்புடன் இருக்கும் யுத்தியை ரிஷிகள் அன்றே நிறுவினர். அதனால்தான் குழுவாக அமர்ந்து மந்திர கோஷங்களை வேதியர்கள் ஓதியதற்கு இதுவே காரணம்.

சப்தபேத உச்சாடனமோ, கனமான புருஷ பீஜங்களோ தமிழில் இல்லை. புருஷ சப்த அதிர்வுகளுக்கு எதிர்வினையுண்டு என்பதால் வேத மந்திரங்களை ஆண்கள் மட்டுமே ஓதவேண்டும் பெண்கள் ஓதக்கூடாது என்பது விதி. ஆனால் தமிழில் அப்படி எதுவும் இல்லை. நால்வர் போற்றியதுபோல் பக்திக்கான மென்மையான பண்ணிசை மொழியே தமிழ்.

- எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக