About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 21 அக்டோபர், 2020

தொடரும் வம்ச சாபம்!

சிலரது குடும்பங்களில் ஆறேழு தலைமுறைகளாக சாபம் தொன்றுதொட்டு வருவதை அறிந்திருப்பீர்கள். அல்லது உங்கள் வம்சத்திலேயே அவ்வாறு நடப்பதை பார்த்திருப்பீர்கள். வம்சத்து மூதாதையர்களில் பாட்டி/பூட்டி/ஓட்டி யாரேனும் சாபம் விட்டிருப்பார்கள். மருமகளாக வந்தபின் அக்குடும்பத்தில் அல்லல் பட்டு வேதனைகள் அனுபவித்து, கொலை/தற்கொலை என எவ்விதத்திலோ மாண்டு போயிருக்கலாம். அந்த சாபத்தின் தாக்கம் சந்ததிகளில் பிரயாணிக்கிறது.

வம்சத்தினர் தவறாமல் வழிபடும் அவர்களின் குலதெய்வமே இதைத் தடுக்க முடியாதா? அவள் நினைத்தால் துடைத்து நீக்கியிருக்கலாமே என்றும் நினைப்பீர்கள். செய்யலாம், ஆனால் ஏன் செய்யவில்லை? அவள் தர்மத்தையும் கிரகபலனையும் மீறுவதாக ஆகிவிடும். கர்மவினைகளின் வீரியமும் தாக்கமும் அடுத்துவரும் வம்சாவளியினருக்கு எச்சரிக்கை விடுக்கும் பாடமாக அமைகிறது.
சாபம் விடுத்த பூட்டி/ஓட்டியே தன் ஊழ்வினையின் தாக்கத்தால்தான் அக்குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு, சொல்லொண்ணா வேதனைகளை அனுபவித்தாள் என்பதை நாம் அறிவோம். ஆனால் தர்மநெறி போதிக்கும் அந்த உண்மையை கணநேரம் சிந்திக்காமல் கோபத்தில் பழிதீர்க்க விடுக்கும் வார்த்தைகளே தன் சந்ததிகளின் துயருக்குக் காரணமாக விளங்குகிறது. அதுபோன்ற உக்கிர ஆன்மாக்கள் சாந்தியடைந்து வம்சத்தை ஆசிர்வதிக்க காசி /இராமேஸ்வரத்தில் திலா ஓமம் செய்வதுதான் ஒரே மார்க்கம் என்கிறது சாத்திரங்கள்.
ஊழ்வினையின் தாக்கமான ‘தீதும் நன்றும் பிறர் தர வாராது’ என்பதை நாம் அறிவோம். ஆனால் இதை மறந்துவிட்டுச் சாபம் விடுத்தால் அதன் தாக்கம் சந்ததிதோறும் துரத்தும். இவ்வாறு அவர்களுடைய கிளைகளின் கீழ் வரும் எல்லா பங்காளிகளின் குடும்பமும் வேதனையை அனுபவிக்கும். ஆக சந்ததியர் தத்தம் சஞ்சித/பிராரப்த கர்ம வினையால்தான் அக்குடும்பத்தில் வந்து பிறக்குமாறு ஈசன் பணிக்கிறான். பழைய கதாபாத்திரம் ஏற்று நடித்தவர்கள் புது தேகம் எடுத்து வந்து விடுபட்ட தங்கள் சொற்பத்தை அரியர்ஸ் பாடம் எழுதுவதுபோல் அனுபவித்துத் தீர்க்கிறார்கள். நாம்தான் அந்த நொந்துபோன பூட்டன் /பூட்டி என்பதை அறியோம். அதனால்தான் அவர்களுடைய பெயர்களை நமக்குத் தொட்டிலில் போடும்போது வைக்கிறார்கள். அதாவது அந்த மூதாதையர் இறந்தபின் நாமாகப் பிறக்கும் வரை இடைப்பட்ட காலத்தில் எங்கோ வெவ்வேறு ஜாதியில் பிறந்து பழைய பாக்கியை அனுபவித்து ஈட்டிய கர்மாவையும் சுமந்தபடி வந்து பிறக்கிறோம்.

மூதாதையர்கள் மீது நமக்கே கோபம் வந்து மனம் நொந்து அவர்களையே திட்டி சாபம் விடுக்கும் சூழலும் சில சமயம் ஏற்படும். இச்செயலானது மல்லாக்கப் படுத்துக்கொண்டு காரி உமிழ்ந்த கதையாகி விடும். ஆகவே அதை சற்றே பொறுமையுடன் சிந்தித்து அவ்வாறு ஏற்படும் இன்னல்களைத் துடைக்க அந்தந்த குலதெய்வமே காத்தருள வேண்டி விட்டுவிடுவது நலம்! இல்லாவிடில் அச்செயலானது புதிதாகவொரு ஆகாம்ய கர்மாவை ஈட்டித் தரும். ஆதலினால் மூதாதையர் செய்த தவறை நாம் செய்யக் கூடாது! ஒவ்வொரு பிரதோஷம் /மகாசிவராத்திரி வழிபாடு செய்துவந்தால் அது சாபங்களை-பாபங்களைத் துடைக்கும். ஜீவராசிகளுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் தருவதும் பரிகாரமாக அமையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக