அண்மைப் பதிவுகளில் காலாங்கிநாதர் அருளிய ஞானவிந்த ரகசியம் பதவுரையை வாசித்து மகிழ்ந்திருப்பீர்கள். அதில் அவர் குறிப்பிட்ட சுனைகள் அருவிகள் எங்குள்ளது என சிலர் கேட்டிருந்தனர். அங்கே சுனைகளிலுள்ள நீர் நமக்கானதா? அக்கோயில் நாம் வழிபாட்டிற்கா? ஆம் என்று பலரும் அடித்துச் சொல்வார்கள். ஆனால் இல்லை!
திருமூலர் காலாங்கி போகர் கோரக்கர் அனைவருமே அங்குள்ள உதக நீர் பற்றி விளக்கியுள்ளனர். இச்சுனையில் உதகம் எனப்படும் நீர் பார்ப்பதற்குக் குழம்பிய சேற்று நீர்போல் இருக்கும். மூலிகை மரம் செடிகளின் மேல் பட்டு இறங்கிவரும் தண்ணீரே இந்தச் சுனைகளில் தேங்கியுள்ளது. இது மருத்துவ குணங்கள் கொண்டது என்பதால் அதைக் கண்டவுடன் அள்ளிப் பருகிவிடக் கூடாது. விபரமறிந்த வைத்தியரை அணுகி அவர்களின் ஆலோசனைப்படி அதை எப்படிப் பயன்படுத்துவது எனக் கேட்டறியவேண்டும். அதில் சில பொருட்களைப் போட்டு வைத்தால் அவை கல்லாக மாறும் தன்மையும் உண்டு.
சித்தர்களின் தலைமையகத்தில் அத்துமீறி நுழைந்து அங்கே கண்ணில் பட்ட எல்லா இலைகளையும் பறித்தும், தேங்கிய சுனைநீரை பாட்டிலில் அடைத்துக் கொண்டும் போவது வீண். அவர்கள் ஒப்புதல் தந்தாலே அது பயன்தரும். அதைத்தாண்டி ஏதேனும் கல்மிஷமாக நினைத்தால் உயிருக்கே ஆபத்தும் வரும். எல்லையைத் தாண்டிப்போய் மதிமயக்கும் வனத்தில் காலடி வைப்போருண்டு. 64000 ஏக்கர் பரப்பளவுள்ள சதுரகிரியில் ஆபத்தான இடங்கள் பலவுண்டு. உஷார்! சிறப்பு நாட்களில் சுந்தர மகாலிங்கரை பூசித்து வழிபட சித்தர்கள் வருகிறார்கள். வானிலிருந்து நட்சத்திரங்களாய் சித்தர்கள் மலைப்பகுதியில் இறங்குவதை மலையேறும் வைத்தியர்கள்/ பூசாரிகள் இரவில் பார்த்துள்ளனர்.
கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் அங்கே படை எடுப்போரின் எண்ணிக்கை அசாத்தியமாக அதிகமாகியுள்ளது. அதற்கு முன்புவரை சதுரகிரி வனப்பகுதிக்குள் வெகு சிலரைத்தவிர வேறு யாரும் அத்துமீறி பிரவேசித்ததில்லை. அங்கே நடக்க, பச்சிலை பறிக்க, சுனை நீர் சேகரிக்க, சில சித்த வைத்தியர்கள் மட்டுமே அனுமதி/ சாபநிவர்த்தி மந்திரங்கள் ஜெபித்துவிட்டு நுழைந்தனர். அங்குப் போகவேண்டும் என்றால் கட்டுக்கோப்புடன் உபவாசம் விரதம் இருந்தபின் தீட்சை அளித்த குருவோடு மகாலிங்கரை நினைத்தபடி மலையேற வேண்டும்.
மக்கள் முற்றுகை இடுவதால் இன்று மின்சார ஜெனரேடர்கள் இயங்கி விளக்குகள் ஒளிருகின்றது. சித்தர்கள் பொறுமை காத்து வருகின்றனர். அது பொதுவிடம் என்றாகி விட்டது. மாமிசம் உண்டு, மது குடித்து, உடல் சுத்தம் பேணாமலும், அக்கழிவுகளின் தாக்கம் உடலில் இருக்கும்போதே உல்லாசப் பயணமாக ட்ரெக்கிங் போகிறார்கள். அங்கே அதிர்ந்து பேசக்கூடாது, துப்பக் கூடாது, வேகமாக நடக்கக் கூடாது என பல நிபந்தனைகள் உள்ளதை பலரும் அறியார். திருவண்ணாமலை கிரிவலமும் அப்படியே! நாம போகாம வேற யார் போவாங்க என்ற சிந்தனையில் பலர்.
பிராப்தம் இருந்தால் நாம் இருக்கும் இடத்திலிருந்தே சித்தர்கள் நம்மை கணநேரத்தில் கூட்டிக்கொண்டுபோய் தரிசனம் பெறவைத்து மீண்டும் நம் இடத்திலேயே விட்டுவிடுவார்கள் என்பது என் அனுபவத்தில் புரிந்துகொண்ட உண்மை. கயிலாயம்கூட சதுரகிரிக்கு ஈடாகாது என்று நந்தியெம்பெருமான் காலாங்கியிடம் கூறினார். நல்ல வேளையாக கயிலாய மலையின் மேல் இன்றுவரை மனிதர்கள் யாரும் ஏறவில்லை. ஓம் நமசிவாய!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக