About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 20 ஜனவரி, 2023

எப்படி நம்புவது?

நேற்றைய பதிவைப் பற்றி ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். “செவ்வாய் கிரகத்துல காந்த சக்தி மூன்று வேளையும் வருவதற்கு பழனிதான் காரணம்னு எப்படி சொல்றீங்க? நவபாஷாண சிலை பற்றி தெரிஞ்ச நாம் வேணும்னா இதை நம்பலாம் ஆனால் வெளிநாட்டுக்காரங்க ஒத்துப்பாங்களா?”

அவர் கேட்டது சரியே. 👍 ஆன்மிகத்தை வைத்துத்தான் அறிவியல் நிகழ்வு ஒன்று நிரூபிக்கப்படவேண்டும் என்று இருந்தால் அதை உலக விஞ்ஞானிகள் நிராகரிப்பார்கள். தென்னிந்தியாவில் எங்கோ பழனியில் உள்ள மூன்றடி உயர ஒரு சிலை எப்படி 250 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் விளைவுகளை ஏற்படுத்தும்? நான் சொன்ன கருத்தை ஏற்பதா வேண்டாமா என்று இந்த முகநூல் குழுவில் உள்ளவர்களே நினைக்கலாம்.

செவ்வாய் கிரகம் பூமியின் கர்ப்பத்திலிருந்து விடுபட்டுப்போன ஒரு செந்நிறமான கோள். அதில் உயிர்கள் வாழாது ஏனென்றால் -80°C குளிர், நீர் இல்லை, உப்பும் ரசாயனங்களும் பாறைகளும் நிறைந்த நிலப்பரப்பு, ஏறக்குறைய காற்று இல்லாத வெற்றிடம், அங்கே புவியீர்ப்பு விசை என்பது நாற்பது விழுக்காடுகூட இல்லை.

நம் பூமியிலிருந்து ரேடியோ சிக்னல் சமிக்ஞை அனுப்பினால் அது அங்கே சென்று சேர குறைந்தது 3 நிமிடம் முதல் 22 நிமிடம் வரை ஆகும். பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரத்தைப் பொறுத்தே நேரம் அமையும். ஆக சிக்னல் இங்கிருந்து போய் அங்கே அடைந்தபின் மீண்டும் பூமிக்குத் திரும்ப எப்படியும் சராசரியாக 12 நிமிடங்கள் ஆகும். 

முன்னொரு சமயம் பழனி விக்ரகத்தில் சாற்றிய ராக்கால சந்தனத்தை எடுத்துக் கரைசலாக்கி அதில் என்னென்ன உலோக பாஷாணங்கள் கரைந்துள்ளது என்பதை அடாமிக் ஸ்பெக்ட்ரோமீட்டார் மூலம் கண்டறிய முயன்று, அதில் எந்தவொரு உலோக அணுக்களும் வெளிப்படாது போனதே நவீன தொழிநுட்பதிற்குக் கிடைத்த பெருந்தோல்வி.

விளாபூஜை, உச்சிகாலம், சாயரட்சை காலங்களில் பழனி முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் ஆராதனையின்போது அங்கே செவ்வாயில் நாஸா செயற்கைக்கோள் இறக்கிவிட்ட யந்திரம் காந்தப்புல வீரியத்தை அளவீடு செய்து பார்த்தால் முடிவு தெரிந்துவிடும். சந்தன கரைசல் போலவே காந்தப்புல சோதனையில் தெய்வசக்திபற்றி எதுவும் தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை.     

ஆன்மிகத்தைக் கொண்டு அறிவியலை நிரூபிக்க இருப்பின் அதை இவ்வுலகம் ஏற்காது. Theory of doubt, அடிப்படையில் பழனி அத்தியாயத்தை ஓரமாய் வைப்பார்கள். வெகுகாலமாய்த் துப்புத் துலங்காத ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் சம்பந்தப்பட்ட காவலர், கடைசியாய் அஷ்டகர்ம மாந்திரீகரிடம் சென்று அந்தக் கொலையை யார் செய்தது, அதற்கான தடயங்கள் எங்கேனும் உள்ளதா என்பதை ரகசியமாய்க் கேட்டறிந்து, மேய்ந்து, இழுபறியான வழக்கை விரைந்து சரியாக முடித்துவிடுகிறார். அஷ்டகர்ம பிரயோகத்தில் வெளிப்பட்ட விஷயங்களை நம் சட்டம்/நீதி ஏற்காது என்பதால் தனிப்பட்ட காவலர் புரிதலில் ஏற்றுக்கொள்ளலாமே தவிர அதை ஒரு வாக்குமூல சாட்சியாய் ஏற்கமுடியாது. 

கிரகண காலத்தில் உணவுப் பண்டங்களின் மீது தர்ப்பைப்புல் போட்டால் அது கதிர்வீச்சைத் தடுக்கும் என்பதை மேலையில் ஏற்கவில்லை. ஆனால் அதை நெடுங்காலமாய் வீடுகள்தோறும் சாஸ்திரமாக நாம் கடைப்பிடித்தோம். பல நூற்றாண்டுகளுக்கு முன் போகர் நிறுவிய நவபாஷாண சிலையானது காலத்தால் தேய்மானமாகி வலுவிழந்தது என்றாலும், இன்னும் சக்தியை இழக்கவில்லை. அதை அவ்வப்போது போகர் தன் நிலவறையிலிருந்தே செப்பனிடுகிறார் என்று நான் சொன்னாலும் அதற்கு ஏது சாட்சி? 

அதுபோல்தான் செவ்வாயின் காந்தப்புலமும் பழனி முருகனின் அபிஷேகங்களும். காந்தப்புல சோதனையில் இந்து சமய நம்பிக்கை வெற்றிபெற்றால் வல்லரசு நாடுகள் இதை விரும்பாது. அதையும் தாண்டி இச்சோதனையில் தன்னுடைய சக்தியை உலகறிய வெளிப்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டியது தண்டபாணித் தெய்வமே தவிர நாம் அல்ல! நான் சொன்னது ஒரு தகவலாக இருக்கட்டும். 🙏

-எஸ்.சந்திரசேகர்





வியாழன், 19 ஜனவரி, 2023

பழனியும் செவ்வாயின் காந்தப்புலமும்!

காந்தப்புலம் என்பது செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் சம்பந்தமே இல்லை. ஏனென்றால், பூமியைச் சுற்றி காந்த மண்டலம் கவசமாக இருப்பதுபோல் செவ்வாய் கிரகத்தில் இல்லை. ஏன்?

மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் இருந்த காந்த மண்டலம் மறைந்து போனதாம். அதன் விளைவாக காஸ்மிக் கதிர்வீச்சுகள் நேரடியாக செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திற்குள் (Martian atmosphere) புகுந்து செவ்வாய் கிரகத்தை உயிர்கள் வாழ முடியாத இடமாக மாற்றியது.

நாஸா ஆர்பிட்டர் மூலம் சேகரிக்க்கப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்த இந்திய விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் காந்தப்புல சாலிட்டரி வேவ்ஸ் (Solitary waves) உள்ளதென கண்டறிந்தனர்.

இது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் (Mars Surface) இருந்து சுமார் 1,000 முதல் 3,500 கிமீ உயரத்தில், விடியற்காலை, பிற்பகல் மற்றும் அந்தி சாயும் பொழுதில் பெரும்பாலும் அடர்த்தியாய் ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்பின் மூலம் செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலம் தொடர்பான பல புதிர்களுக்கு விடைகள் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். முருகன்- பழனி- செவ்வாய் தொடர்பைப் பற்றி நம் மிகப்பழைய பதிவில் சொல்லியிருந்த விஷயத்தை நினைவூட்டிப் பாருங்கள். செவ்வாய் கிரகத்தில் எப்போது சாலிட்டரி வேவ்ஸ் அதிகமாகிறது?

இங்கே பழனியில் நவபாஷாண முருகனுக்கு விளாபூஜை, உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை நேரத்தில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கும் சமயம் அங்கே செவ்வாய் கிரகத்தில் காந்தபுல அலைகள் அடர்த்தியாய் எழுப்பப்படுகின்றன. இங்கே இராக்கால பூஜையில் சந்தனம் சாற்றிக் குளிரூட்டிய பிறகு செவ்வாயில் காந்தப்புல அலைகள் எழுவதில்லை. ஆக செவ்வாயில் உயிர்கள் வாழவேண்டும் என்ற நோக்கில் போகர் பிரயத்தனப்பட்டது தெரிகிறது!

"தரணீ கர்ப்ப ஸம்பூதம், வித்யுத்காந்தி ஸமப்ரபம், குமாரம் சக்திஹஸ்தம் ச, மங்களம் ப்ரணமாம்யஹம்" 

என்பது செவ்வாய் கிரகத்திற்கான ஸ்லோகம். அதாவது பூமித்தாயின் கர்ப்பத்திலிருந்து உதித்த செவ்வாய் கிரகமே, செவ்வேளின் அறிவொளி காந்தம் சக்தியூட்டப் பிரகாசிக்கும் உன்னை வணங்குகிறேன் என்பதே பொருள். 

ஆக இங்கே பூமியில் செவ்வாய் ஆதிக்கம் பெற்ற பழனியில் உள்ள நவபாஷாண முருகன் சிலைக்கு அபிஷேகம் பூஜை நடக்கும்போது அங்கே செவ்வாயில் அதிர்வலைகள் திடீரென தன்னிச்சையாக எழுகிறது. இதற்கான காரணத்தை நாம் அறிவோம் ஆனால் வடஇந்திய / நாஸா விஞ்ஞானிகளால் புரிந்துகொள்வது கடினம். என் முதுகலை இயற்பியல் பாடத்தில் இதுபோன்று நடக்கும் கோட்பாட்டை  A disturbance of a self-reinforcing wave packet (soliton) with nonlinear dispersive effect என்று படித்த நினைவு உள்ளது.

அதாவது செவ்வாயில் ஒரு காந்தப்புலம் நிரந்தரமாக இருந்து அது உண்டாக்கும் காந்தவிசை அதிர்வலைகளின் விளைவு எப்படி இருக்குமோ அப்படித்தான் திடீரென மூன்று வேளையும் சாலிட்டரி வேவ்ஸ் அந்நேரம் மட்டும் விநோதமாய் எழும்பி மறைகிறது.

இங்கே விக்ரஹத்திற்கு மந்திர கோஷம் முழங்க அபிஷேகம் பூஜைகள் நடைபெறும்போது அங்கே இதன் தாக்கம் தெரிகிறது என்பதே நிஜம். சுருக்கமாய்ச் சொன்னால் இங்கே பூமியில் த்ரிகாலமும் மந்திரங்கள் நவபாஷாண சிலை முன் ஒலிக்கும்போது அங்கே மாற்றங்கள் பதிவாகிறது. ஓம் சரவணபவ 🕉️🙏

-எஸ்.சந்திரசேகர்


ஞாயிறு, 15 ஜனவரி, 2023

சமையல் மகத்துவம்!

பொங்கும் அரிசியிலேயே சமத்துவம் இல்லை. ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு பக்குவத்தில் சமைக்க வேண்டும். எல்லா ரகங்களையும் உலையில் சேர்த்துப் போட்டால் அதில் பாதி குழைந்தும், சமைந்தும், அடிபிடித்தும், நறுக்கரிசியாய் தங்குவதே இயல்பு. வெந்த அரிசியில் குற்றமில்லை, சமைக்கும் பாங்கு அறியாமல் ஒன்றாய்க் கலந்து சோறு சமைத்தவன் செயலில்தான் குற்றம்!

சமுதாயத்தில் வேற்று மதத்தாருடன் தோழமையுடன் பழகுவது தவறல்ல. அவர்களுடைய பழக்கவழக்கங்கள் நம் நெறிக்கு ஏற்புடையதன்று என்பதைச் சிந்தியாமல் அச்சமூகத்தில் கலந்து உறவாடி ஒட்ட முடியாமல் தவித்து இணக்கமாய் இருப்பதுபோல் நடிப்பது என்பதா சமத்துவம்? 🤔

சமையல்/ சமயம், இரண்டிற்கும் அதிக வேறுபாடு இல்லை. ஒரே நெறியில் ஒரே பக்குவத்தில் பிசகில்லாமல் கலந்து ஒரே குறிக்கோளைப் பிழையின்றி அடைவதே இதன் சிறப்பு.

அரிசியின் பரிணாம நிலைகளான நெற்பொரி, அவல், புழுக்கல், களி, அடிசில், கஞ்சி, இட்லி என நாம் உண்ணும் சோறுக்கே வெவ்வேறு நிலைக்கேற்ப சமைக்கும் பக்குவம் மாறுபடுகிறது. நம் சமயங்களும் அப்படித்தான்! உணவில் அறுசுவை இருக்கலாம் ஆனால் பஞ்சபக்ஷ பரிமான்னம் என்னும்போது சமைத்து இலையில் பரிமாறிய உணவின் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கிறது. 👍

-எஸ்.சந்திரசேகர்



சனி, 14 ஜனவரி, 2023

சிவகதிக்கு உழைப்போம்!

சடை விரித்தாடும் அம்பலவாணன்

   சிருஷ்டியில் விடுத்த ஆன்மாவை

அடை காத்துப் பத்திரமாய்ப்பேண

   அழகுற அளித்த பெருங்காயத்தை      

இடை வழியிலேயே களங்கப்படுத்தி

   இச்சைகள் துர்குணங்கள் ஊட்டி

விடை காணாமலே பிறந்திறந்தோடி

   வீணாய்ப் போனோம் நமச்சிவாய  

   

ஆசை அதிகரித்து அகத்தை மாசாக்கி 

   ஆணவம் ஆத்திகம் கோலோச்சியாட  

மீசை முறுக்கியே மும்மலமும் சேர்த்திட

   மீண்டும் யமனின் தண்டனையேற்று

பூசை செய்யாமல் புண்ணியம் தேடாமல் 

   பாவியாய்ச் சிவநிந்தனைகள் புரிந்து

ஓசை கொடுத்த நாயகியை மதிக்காமல்  

   ஓதுவதைத் துறந்தோம் நமச்சிவாய


தடமிடும் ஆன்மா வினையறுக்கவே 

   தருமநெறி காக்கப் பிறவியெடுத்துப்

புடமிடும் குணங்கள் பெருங்கடல்தாவிப்

   பாவம் ஈட்டாமல் நற்பேறடைய 

நடமிடும் பொற்பதம் அசையவொரு

   நளினமிகு குஞ்சித பாதந்தொட்டு

வடமிடும் காலன் மிரட்டும்போது

   வாயாரச் சொல்வோம் நமச்சிவாய 


மறை நான்கும் கைதொழும் கூத்தனை 

   மாசற்ற தேவாரத்தால் பாடித்தொழ

பறை அளக்கும் பரமன் பெம்மானைப் 

   பண்ணிசை சாமத்தால் நனைத்துக்

கறை படிந்த ஆன்மாவை வெளுக்கக்

   கரங்குவிய வண்ணானைப் பணிந்து 

முறை தோறும் பிணியில் சிக்காதோட

   மந்திரம் சொல்வோம் நமச்சிவாய


புக்தி தசைகள் கிரகங்கள் பீடித்தாலும் 

   பண்புடனே கோளறு பதிகம் பாடியே 

பக்தி நெறியில் பஞ்சாட்சரம் ஜெபித்து    

   பிரதோஷ காலம் சிவதலம் தொழுது 

சக்தி பெற்றுச் சிவயோகமும் கைக்கூட

   சித்தம் முழுக்க தசநாதங்கள் ஒலித்து 

முக்தி சாலோக சாயுச்சியமும் அடைய 

   மறவாமல் சொல்வோம் நமச்சிவாய     


-எஸ்.சந்திரசேகர்




புதன், 11 ஜனவரி, 2023

'விபூதி சித்தர்' ஸ்ரீ சுப்பாராவ்!

ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனுடைய இளைய மகள் இளவரசி அம்மங்கதேவியை சாளுக்கிய பேரரசின் வேங்கிநாடு ராஜநரேந்திர மன்னனுக்கு மணம் செய்து கொடுத்தான். அப்போது தஞ்சையின் பல சதுர்வேதிமங்கலம் பகுதிகளிலிருந்து 18 அக்னிஹோத்ரம் பிராமணர்களைத் தேர்ந்தெடுத்து இளவரசியுடன் சீதனமாக 1025ஆம் ஆண்டு அனுப்பினான். இவ்விதமாக மத்யார்ஜுனம் @ திருவிடைமருதூர் கிராமத்திலிருந்து போனவர்தான் இவருடைய மூதாதையர்.

ஸ்ருங்கேரி ஸ்ரீ வித்யாரண்ய சுவாமிகள் 1336ஆம் ஆண்டில் தோற்றுவித்த விஜயநகர பேரரசானது ஹம்பியைத் தலைநகராகக்கொண்டு இயங்கியது.  கிருஷ்ணதேவராயரிடம் ஆலோசகர் மற்றும் நிதி வசூல் பொறுப்பில் பணிபுரிந்தார் நம் விபூதி சித்தர் தாத்தா, மத்தியார்ஜுனம் ஸ்ரீ சுப்பாராவ். இவருடைய வேதசாஸ்திர திறமைக்கும் புலமைக்கும் வெகுமதியாக ஒரு ஸ்படிக லிங்கம் மற்றும் 9 சாளக்கிராமங்களும் மன்னர் தந்தார். 1529ஆம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ணதேவராயர் காலமான பிறகு தென்னிந்திய பேரரசு சரியத் தொடங்கியது. சுல்தான்கள் படை எடுப்பினால் சாம்ராஜ்ஜியம் 1646இல் மொத்தமாக வீழ்ந்தது.  ஸ்ரீகிருஷ்ண தேவராயர் மறைந்ததும் அங்கே வாழப்பிடிக்காமல் புலம் பெயர்ந்து இங்கே காவிரிக்கரையில் குன்னத்தூர் அய்யம்பாளையம் அடைந்தார். இங்கேயே வாழ்ந்து 1561இல் சமாதி முகம் சென்றார். இவர் வம்சாவளியில் 13ஆவது தலைமுறையாக வருகிறேன்.

-எஸ்.சந்திரசேகர்





பூவழலை எங்கே பூக்கும்?

 டமரானந்தர் அருளிய சிவநூல் சூத்திரம் பதினேழு என்ற நூலிலுள்ள பாடலைப் பார்க்கலாம். முப்பூ சரக்கை ‘சூட்சுமப்பூ’ ‘பூவழலை’ என்று சித்த பரிபாசையில் சொல்வார்கள். நமக்குத் தெரிந்து வழலை என்றால் கபம், சவுக்காரம் சோப்பு மட்டும்தான் நினைவுக்கு வரும். இந்த வழலை எனும் முப்பூவைச் சேகரிக்கும் முறை, அதன் மேன்மை, காயாதி கற்பத்தில் சிறிது சேர்த்தால் அதன் செயல்பாடு என்ன ஆகியவற்றைச் சொல்லியுள்ளார்கள். 

பூநீறு, கற்சுண்ணம், கல்லுப்பு ஆகியவற்றின் கலவை என்றும் சொல்வதுண்டு. முப்பூ என்பது நாம் சேகரித்துச் சமைக்க வேண்டிய வஸ்து இல்லை. அது இறைவனின் சிருஷ்டியில், அதீத வெப்பத்துடன் மின்னல் வெட்டும்போது கற்பாறைகள் உருகிட உற்பத்தியாகி மண்மீது தயாராகவே இருக்கும் பொருள் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். அகத்தியரும் தன் அமுத கலைஞானத்தில் இதையே சொல்லியுள்ளார். 

ஆக, இந்த அண்டம் என்ற பிரணவத்திலுள்ள நாதவிந்து பொருள்களை எல்லாம் யோகமார்க்கத்தில் ஒன்று சேர்த்துச் சமைத்தால், நம் பிண்டத்தில் இடகலை பிங்கலை சுழுமுனையில் சங்கமிக்க நம்முள் முப்பூ சுண்ணம் முடிவாகும் என்பது சித்தர்களின் மறைப்பு. சரக்கலை ரகசியம்! 

முப்பூவிலும் ஆண் பெண் அலி தன்மைகள் உண்டு. ஆனால் இக்கால வைத்தியர்களோ, அப்படி எந்தப்பொருளும் உண்மையில் இல்லை, அது மறைப்பாகச் சொல்லப்பட்ட ஏதோவொன்று என்று சொல்வார்கள். வளர்பிறையில் வழலை சேகரிக்க உகந்த இடங்கள் எவையவை என்று போகர் தன்னுடைய பெருநூலில் சொல்லிக் காட்டியுள்ளார். 

கலியுகத்தில் பேராசைக் கொண்ட மனிதர்களின் கைக்குப் போகக்கூடாது என்பதால் அதற்கு நிறைய மறைப்புப் பெயர்களைச் சித்தர்கள் சொல்லி வைத்தனர். சல்லிவேர், சிப்பி, அமுரி, பழச்சார், குருவண்டு, இந்திரகோபம், கருங்கோழி, வழலை, சுரோணிதம், பனிக்குடம், பேரண்டம், விந்து, தலைபிண்டம், கல்லுப்பு, சவுட்டுப்பு, வெள்ளைக்கல், அண்டக்கல், அம்மம்மா என்று எண்ணிலடங்கா பெயர்களை உள்ளன. தனித்தனியே பிரித்துப் படித்தால் ஒவ்வொன்றும் விபரீத அர்த்தத்தைத் தரும். 

சூரியன் சந்திரன் அக்னி மூன்றும் சேர்ந்து இயற்கையில் நடத்தும் வேதியல் மாற்றங்களால் முப்பு கிடைக்கும் என்கிறது டமரானந்தர் பாடல். இயற்கைப் பாஷாணங்கள் எல்லாமே ஆயுள் விருத்தி காரணிகளாகும். ரகசியமாய்க் காக்கப்படும் இம்மூலக்கூறுகளின் உற்பத்தி ரகசியங்கள் சாமானியனுக்கு தண்டோரா போட்டு வெளியிடலாகாது என்பது சித்தர்கள் பின்பற்றும் நெறி. மீறி ரகசியத்தைச் சொன்னால் தலை சிதறி வெடிக்குமாம். 

-எஸ்.சந்திரசேகர்