About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

Diary: Tamil poetry collection

காற்றோடுதான்...

நீ பிறந்தது எப்படி
அசைவது எப்படி
உன் எளிமையிலும் ஒரு நுணுக்கம்.
அது விளங்காத விஞ்ஞானம்.
வெற்றிடம் உனக்கு சொந்தம்தான்..
அனுமதியின்றி ஆக்ரமிக்கின்றாயே!

காற்றோடு பேசுவது
மலர்கள் மட்டும் அல்ல..
வண்டுகள் மட்டும் அல்ல..
காதலர்கள் மட்டும் அல்ல..
ஊமையின் மனக்குமுறலும்
எண்ணங்களும்தான்!
 

விண்மீன்கள்
இரவு நேரத்து வானில்தான்
எத்தனை விதமான விண்மீன்கள்!
வான் பரப்பில் நீந்தி விளையாடி
களிப்புத்தீர மின்னிடும்போது,  
வெண்பஞ்சு மேகம் ஊர்ந்து வந்து
இடையிடையே மறைத்து நகர,
கோபம் கொண்ட மீன்கள் சில
எரிகற்களாய் விழுவதும் உண்டு...
விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவிய தூரம்
எண்ணிப்பார்த்தால் கண்சிமிட்டும் நேரம்.

பாராட்டு 
என் நாவல் 'தீக்காற்று'க்கு விருது.
மார்கழியில் ஒரு மாலை நேரம்...
அரங்கின் உள்ளே விழா.
பாராட்டு மழையில் நனைந்ததால்
புகழ்ச்சியின் குளிர் வாட்டியது.

சொல்வதறியாது நடுங்கியபோது
யாரோ வந்து பொன்னாடை போர்த்த..
மீண்டும் எனக்கு உயிர் வந்தது.
தீக்காற்றுக்கும் குளிருமோ..? 

கல்லறை தேசம்
காலங்காலமாய் கடல்வழி மார்க்கம்
கடல்வாணிபத்தின் கலங்கரைவிளக்கம்.
பண்டைய காலத்து பாய்மரங்கள்
புயலுக்கே சவால்விட்ட கம்பீரங்கள்.
பயணிகளோடு பயணம் தொடங்கியவை
பாதியிலே முடிந்து போனதுமுண்டு.
கன இரும்பில்  பிற்கால கப்பல்கள்
காகித கப்பலாய் மிதந்து வந்தது.
டைடானிக் ஆண்ட்ரியா டோரியா
ஜூலி மூழ்கியதெல்லாம் இரவில்தான்.
நீரை கோடாய்  கிழித்து ஓடிய வேகம்
நீரையே பருகவைத்தது தாகம்.
தாகம் தீர்ந்தது சோகம் வந்தது
கண்ணுக்குள் நின்றது பரிதாபம்!
பாறையில் மோதி பிளந்தது கப்பல்
பனியில் உறைந்து போனது கதறல்.
செல்வச் சீமான்களும் சீமாட்டிகளும்  
வெள்ளோட்டத்தில் பயணித்தது அதிகம்.
பிரம்மாண்டமான மனிதனின் ஆக்கம்
பயணிகளோடு மெள்ள மூழ்கியது.
ஆண்டுகள் பல நூறு  கழிந்தாலும்
அன்றைய  சம்பவம் அழியாது.
விதி கொண்டது தன்வசம்
கடலுக்குள் கல்லறை தேசம்.
அஞ்சாது மரணத்தை அணைத்தவர்கள்
ஆழத்தின் அமைதியில் உறங்கட்டும்.

டிரங்கு பெட்டி
அம்மா தரும் பத்து காசை
பத்திரமாய் பொத்தி வைப்பாள்
நிறைய நிறைய சேர்க்க எண்ணி
நினைத்துக்கொண்ட சிறுமி ஒருத்தி.

ஒற்றை பின்னல் எலிவாலுடன்  
கால்பாவாடையின் மங்கிய ஒளியும்,
காது மூக்கு குத்திய இடத்தில்
வேப்பங்குச்சி தோடாய் மின்னி,
ரப்பர் வளையல் மெல்லிய விரல்கள்
சேற்றுப்புண் கால்களோடு..
கண்கள் மட்டும் பளிச்சென மிளிரும்
சிறுமியின் நிலை பாவம்தான்!

அவளையே தூக்கும் சுமையொன்றை
இடுப்பில் ஏற்றி வைத்திருக்க
சற்றே தடுமாறி நடக்கும்போது
கனத்த பாவாடை எழுப்பும் ஓசை...
அவள் இதயத்துடிப்பின் எதிரொலி.

கோடிவீட்டு பாப்பாவுக்கு
அவள் இருந்தாள் ஆயாவாக.
ஒரு ரூபாய் சம்பளத்தை பார்த்ததும்
வாயெல்லாம் பல்...
மங்கிப்போன காகித நோட்டை
பத்திரமாய் மடித்து வைத்தாள்.
தீப்பெட்டிதான் டிரன்குபெட்டி!

சேர்த்துவைத்த காசுகளை அங்கே
பெட்டியில் வைத்து காப்பதை
குடிகாரதந்தையின் கண்ணில்   
போதையை கொஞ்சம் காட்டியது.
முண்டாசுக்குள் பெட்டி நுழைந்தது
வயிற்றுக்குள் சரக்கு இறங்கியது.
பற்றவைத்து பீடியை இழுக்க
பெட்டியே நெருப்பையும் தந்தது.

முண்டாசு வியர்வையில் நனைந்தும்
நமுத்துப் போகாத ஒரு தீப்பெட்டி..
இவன் செயல் கண்டு சகிக்காமல்
பெட்டிக்கே வயிற்றெரிச்சல்!

போதையில் அவன் பாதையில் உருள
நசுங்கி போனது டிரங்கு பெட்டி..   
தள்ளாடிப் போனவன் மீண்டும்
பொந்துக்குள் பெட்டியை வைத்தான்.

காலையில் விழித்த  சிறுமி
பெட்டி காணாது அதிர்ந்தாள்.
பெட்டியை கடித்த பெருச்சாளி
எந்த பொந்தில் வைத்ததோ..
குடைந்து பார்த்து சோர்ந்துபோய்
குடிசைக்குள்  மெள்ள நுழைந்தாள்.

வீரம் பொங்க வைத்திருந்தாள்
புதிய 'சீட்டாபைட்' டிரங்கு பெட்டி!



சுமை
குழந்தை பிறந்ததும், பறந்துபோனது
தாயிடம் இருந்த சுமை.
               குழந்தையை பள்ளியில் சேர்த்ததுமே
                தந்தைக்கு வந்தது சுமை.
பள்ளி செல்லும் குழந்தைக்கு
புத்தகமூட்டை ஒரு சுமை.
                இப்போதே அறிவாளியாய் ஆக்கிட
                சிருமூளைக்குள் திணிப்பார்கள் சுமை.  
படிப்பை முடித்து பொருளீட்டும் வரை
மகனும் தான் ஒரு சுமை.
                மணம் காணாது நிற்கும் மகள்
                பெற்றோருக்கு ஒரு சுமை.
பாரம் இழுக்கும் தொழிலாளிக்கு
வருவாய் தருவதே சுமை.
                வயதான நல்ல பெற்றோர்களை
                மகன்களே நினைப்பது சுமை.
                நிச்சயம் முதியோர் இல்லம்
                ஒரு சுமைதாங்கி தானே!
ஒவ்வொரு கட்டத்திலும், வயதுகள் மாறி
சுமைகள் கைமாறி  வாழ்க்கை சுழல, 
பிறப்பு முதல் இறப்பு வரையில்  
மனித வாழ்கையே சுமை தான். 

அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது
அதனினும் அரிது சுமையின்றி  இருப்பது. 


அரும்புகள்
சூரியனில் வெப்பம் குறைந்ததாம்.
காலை சூரியனுக்கு வணக்கம் 
சொல்லாத தாமரையே... 
உன் முகத்தில் நீர் தெளிக்க 
விழித்திக்கொள்ளாயோ? 

மாலை நேரத்து முல்லை மொட்டு
இரவுக்குப்பின் இதழ் திறக்குமாம்,
யார் வைத்தது  ஷிப்ட் முறையை? 
மகாமகப்பூக்களே !

மலை அரசிக்கு பெயர் தந்த குறிஞ்சியே..
இத்தனை ஆண்டுகள் பூக்கமறந்து 
இப்போது சரியாய் பூத்துள்ளாயே..
எனக்கு வேண்டும் உன் கடிகாரம்.

மணம் வீசுகின்றது ரோஜா.
இன்று மலர்ந்தது அல்ல அல்ல,
விழித்த நிலையில்  
பல மாதங்களாய் உறங்குகிறது..
காய்ந்தும் மணக்குது... புத்தகத்தினுள்.

மழை மேகங்கள்

கார்மேகம் சூழ்ந்து காற்றும் வீச
பருவமழையின் வருகையை சொல்ல
வந்தது மண் வாசனை.

           இங்கொன்று அங்கொன்று 
           திவிளைகளாய் விழ,
           இரவு முழுவதும் அடித்து ஓய,
           பிறகுதான் தெரிந்தது....
          அமைதியாய் ஓடிய நீரோடு 
          ஓடிப்போனது தார் ரோடு!     
          மழைகாலத்து  காதலர்களோ?


மார்கழியில் நீளமான ராத்திரி,
ஆனியில் நீளமான பகல்
நேரம் தவறி மழை பெய்தால்...
நன்றி இல்லாமல் திட்டுகிறார்கள்.

         குட்டை முழுதும் நேர் தேங்கி
         சாக்கடை கலக்க கொசுவும் கடிக்க
         இரவெல்லாம் கத்தித் தீர்த்தது 
         தூக்கம் கெட்ட தவளைகள்.. 

மிதந்து வந்த காகித கப்பலை
ஆவலாய் பிரித்துப்பார்க்க அதில்
அச்சாகியிருந்தது வானிலை!

            நேற்றைய காற்றில் பரந்த குடிசை
            இன்று மாலையில் வந்து சேர்ந்தது..
            அது மேற்கொண்டது என்னவோ
            சூறாவளிப்பயணம்...

சென்ற முறை புயலுக்கு
விடுமுறை விட்டது அரசு,
அன்று அடித்தது கடும் வெயில்.
இந்த முறை எச்சரித்தும்
துணிந்து சென்றனர்... மீனவர்கள்.

            வானிலை அறிக்கை, மருத்துவ அறிக்கை
            ஏறக்குறைய ஒன்றே!
            எதையும் சொல்ல இவர்களுக்கு தேவை  
            24 மணி முதல் 48  மணி வரை.


அன்னை
(Tribute to Mother Teresa)
i)   வெண்பனி சேலையில் நீலம் கோடிட
     பழுத்த வயதிலும் காட்டிய நேசம்
     அன்பை தேடிய உள்ளங்களுக்கு
     அன்னையாய் நின்று அரவணைத்தாயே.
 ii) அரவணைத்த நெஞ்சங்கள் எத்தனை!
     சிறு குழந்தை முதல் தொண்டு கிழம்வரை
     ஆதரவு தந்தும்  துயரங்கள் தாங்கியும்  
     சுமையுடன்  நடந்த  ஏசுபிரான் நீ 
iii) நீ சுமந்த சுமையால் கூன் விழ 
     துடிப்புடன் முதுமையிலும் செயல்பட 
     பாரினில்  உனக்கு புகழும் வந்தது
     ஓய்வெடுக்க  காலனும் அழைத்தது 
iv) அழைப்பு வந்தது பலமுறை உனக்கு
      உழைக்க வேண்டும் வரமாட்டேன் என்றய்
      உழைத்தது போதும் புறப்பட்டு என்று
      வலுக்கட்டாயமாய் கொண்டே சென்றது
v)  சென்றபின் நாட்களும் போனது
      நாடோ ஆழ்துக்கத்தில்  அழுதது 
      புண்ணியம்  ஈட்டிய  செல்வமகளே  
      மறுபிறப்பின்றி மோட்சம் அடைவாய்
vi) அடைப்பட்ட உயிர்கள் உனை நாடும்
      அங்கும் நீ பணிசெய்ய நேரும்
      இவ்வையகம் நிலைத்து இருக்கும்வரை
      உன்தன் பெயரும் நிலைத்திருக்கும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக