குலதெய்வ ஆசிகள்...
ஈரோடு மாவட்டத்தில் எங்கள் சொந்த ஊரான கொடுமுடியிலிருந்து சுமார் 10கிமீ தொலைவில்தான் குலதெய்வம் கோயில் உள்ளது. இன்று குலதெய்வம் அய்யம்பாளையம் மகா மாரியம்மன் கோயிலில் அபிஷேகம், வஸ்திரம் சாற்று, மற்றும் வழிபாடு நடந்தது. திருப்பாண்டிக் கொடுமுடியில் மகுடேஸ்வரர் - வீரநாராயணப் பெருமாள்-பிரம்மன் தரிசனமும் கிட்டியது. கடுமையான வெயில் இருந்த போதும் தரிசனம் குளிர்ச்சியாகவே இருந்தது.
அகண்ட காவிரியில் இன்று முதன்முறையாக சிற்றுந்தில் பயணம் செய்தது புதிய அனுபவம். இதுவரை பரிசல் ஓடி பார்த்துள்ளேன், ஆனால் காவேரியின் மையப் பகுதியில் பாறைகளும் சில சிலைகளும் கண்ணில் பட்டன. 'வட்டவாசிகை கொண்டடி தொழுதேத்தும் பாண்டிக் கொடுமுடி' என்று சுந்தரர் பாடிய திருப்பதிகமே (பா-7:2) அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது. அவர் பாடிய பெருமைகள் எதையும் நதி வெளிக்காட்டவில்லை. தெற்கிலிருந்து வரும் காவிரி இங்குதான் கிழக்குமுகமாகத் திரும்புகிறாள்.
அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து நதியை வழிந்தோடச் செய்த விநாயகப் பெருமான் அங்கே வறண்ட காவேரியின் சாட்சியாக அமர்ந்துள்ளார். வினோதம்!
ஏனுங்க... இந்தப் படங்களப் பார்த்தா, இது விளையாட்டு மைதானமோ, தரிசு நிலமோ, பொட்டல் வெளியோனு சிந்தனை ஓடுதுங்களா? அது எதுவும் இல்லீங்க. இதுதான் காவேரி.
எங்கள் ஊரான கொடுமுடியில் (ஈரோடு மாவட்டம்) 'அகண்ட' காவிரி இப்போது 'வறண்ட' காவிரியாக உள்ளது. நான் நேற்று இந்த இடத்தில் நின்று படம் எடுத்த மையப்பகுதிதான், நதியின் ஆழமான பகுதி. ஊர் மட்டத்திலிருந்து சுமார் 20அடி ஆழமிருக்கும். இப்போதைக்கு சிறுவர்கள் விளையாடுவதற்கும், பரிகார சுற்றுலா வருவோர் பந்தல் போட்டு ஓய்வு எடுக்கவும், விறகு-புல்லுக்கட்டு அடுக்கி வைக்கும் களமாகவும் பயன்படுகிறது. கண்ணெதிரே படகு-பரிசல் தலைகுப்புற போடப்பட்டுள்ளது.
தெற்கிலிருந்து வரும் நதி இங்குதான் திசை மாறி கிழக்கே பாய்கிறது. ஏன்? காவிரி நதியின் மொத்த நீளம் 765 கிமீ. அதில் சரி பாதியாக 382 வது கிமீ இடத்தில் இங்கு திசை மாறும். விநாயகர் இங்குதான் காக்கை வடிவில் வந்து அகத்தியரின் கமண்டலத்தை உருட்டிக் கவிழ்த்து விட, அடைப்பட்டிருந்த காவிரி திசை மாறிப் பாய்ந்தது. சுமார் முக்கால் கிலோமீட்டர் தூரம் அகண்டு விரிந்த காவிரி முழுவதும் படித்துறையைத் தாண்டி பொங்கி வழிந்து ஓடுவதே அழகுதான். இப்போது வறண்ட பூமிதான்... ஹூம்ம்..! நதிக்குள்ளே சாலை வசதி என்பது வரக்கூடிய விபரீதத்தையே என்ற மனசுல உணர்த்துதுங்க. ஈசன் விட்ட வழி!
வாங்க சுற்றிப் பார்க்கலாம்!
1. கொடுமுடியில் எங்கள் பூர்வீக வீடு இருந்த கிழக்கு அக்ரகார வீதி.
2. நூற்றாண்டு கண்ட மேல்நிலைப்பள்ளி. (நி:1912)
3. மகுடேஸ்வரர் கோயில் பிரசாதம் கடை.
4. கோயில் பின்பக்கத்திலிருந்து எடுத்த படம்.
5. நான் பிறந்த வீடு... இன்று பயணியர் சத்திரம்... No.23, கிழக்கு அக்ரகார வீதி,
1. கொடுமுடியில் எங்கள் பூர்வீக வீடு இருந்த கிழக்கு அக்ரகார வீதி.
2. நூற்றாண்டு கண்ட மேல்நிலைப்பள்ளி. (நி:1912)
3. மகுடேஸ்வரர் கோயில் பிரசாதம் கடை.
4. கோயில் பின்பக்கத்திலிருந்து எடுத்த படம்.
5. நான் பிறந்த வீடு... இன்று பயணியர் சத்திரம்... No.23, கிழக்கு அக்ரகார வீதி,
இறைவன் சிவ பெருமானுக்கு: மகுடேஸ்வரர், கொடுமுடி நாதர், மலைகொழுந்தீசர், போன்ற பெயர்கள் உண்டு. இறைவிக்கு வடிவுடையநாயகி, திரிபுரசுந்தரி, சிவகாமசுந்தரி, மதுரபாஷினி என்ற பெயர்களும் உண்டு. சயன கோலத்தில் மகா விஷ்ணு இங்கே 'வீரநாராயண பெருமாள்' என்ற நாமத்தொடும், மகாலட்சுமி இங்கே திருமங்கை நாச்சியார் என்றும் அருள் பாலிகிறார்கள். இங்கு தலவிருட்சம் வன்னி. இதன் கீழ் பிரம்மா அமர்ந்து அருள் பொழிகிறார். இம்மரம் சமார் 3000 ஆண்டுகள் பழையது. சற்றுத் தொலைவில் ஊர் கிராம தேவதை மலையம்மனுக்கு கோயில் உண்டு.
சுமார் ஒரு நூற்றாண்டாக பராமரிக்கப்பட்டு வரும் பிராமண அன்னதான சத்திரம். நலிந்த ஏழை பிராமண சமூகத்தினர் தங்கி உணவு உண்டு யாத்திரை செய்ய ஏதுவாய் வகை செய்யப்பட்டது. இது கிழக்கு அக்ரகார வீதியில் உள்ளது.
இன்று அநேகமாக எல்லா வீடுகளுக்கும் குழாய் தண்ணீர் விநியோகம் நடக்கிறது. சாலை அகலமின்றி அன்று பார்த்ததுபோல்தான் உள்ளது.. கடும் வெயில் நிலவும்.. அன்றைய பொலிவு இல்லை. எங்கள் தாத்தா -பாட்டி (Pitchu Someswaran @ Mamaadu - Nagammaal) வாழ்ந்த வீடு... No.18, கிழக்கு அக்ரகார வீதி. கொடுமுடி - 638151.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக