About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

குழந்தை தொழிலாளர்கள்னா யாரு?

டீ கடைகளில், பட்டாசு தொழிற்சாலைகளில், சுமக்கும் கட்டுமான வேலைகளில், வயக்காட்டில், மெக்கானிக் கடைகளில் என்று பல இடங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணியாற்றுவதை பார்க்கிறோம். இது சட்டப்படி குற்றம். தினசரி இவர்கள் நூறு-இருநூறு ஈட்டுகிறார்கள். சிலர் அதைவிட குறைவு.
ஆனால் திரைப்படங்களில், டிவி மெகா சீரியல்களில் குழந்தைகளை நடிக்க வைத்து வருடக்கணக்கில் ஓட்டுகிறார்கள். இவர்களும் பணம் சம்பாதிக்கிறார்கள், Sec. 64 (1A) கீழ் வருமான வரியும் கட்டுகிறார்கள். இது குற்றம் இல்லையா? இவை நடிப்பாற்றலை, திறமையை வெளிக்கொண்டு வரும் வழிகள் என்பதால் குற்றம் இல்லையாம். என்ன கோமாளித்தனம்? வம்சம், தெய்வமகள், குலதெய்வம் போன்ற (சன் டிவி)  சீரியல்களில் கைக்குழந்தையாக வந்த அரை டிக்கெட்டுக்கள் இன்று வளர்ந்து விட்டார்கள். ஐயோ பாவம்! இதுங்க பள்ளிக்கூடம் போகிறதோ இல்லையோ? தினசரி இவர்கள் ஆயிரங்கள் பணம் ஈட்டுகிறார்கள். 
முழுநேரம் / பகுதிநேரம் என்று காலங்காலமாக நடித்த குழந்தை நட்சத்திரங்களே இன்று கிழமாகி விட்டனர். இவர்களை வேலை செய்ய வைத்த அதன் பெற்றோர்/ தயாரிப்பாளர் / இயக்குனர்/ எதிர்ப்பு காட்டாத சினிமா Censor board தணிக்கை துறை மீதும் என்றுமே தொழிலாளர் நலத்துறை வழக்கு போட்டதில்லை. சினிமாவுக்கு இது சரி என்றால் டீகடைக்கும் சரிதான். ஆனால் ஏன் இந்த பாகுபாடு? 
அருமையாக டீ போடுகிறான், பூட் பாலிஷ் செய்கிறான். அவர்களிடமும் கலைவாணி நல்ல வித்யை தந்துள்ளாள் ! அதுவும் திறமையை வெளிக்காட்டும் செயல்தானே? அவர்களுக்கும் தினசரி ஆயிரங்களில் சம்பளம் தந்தால் இது குற்றச்செயல் ஆகாதோ? சினிமாவில் கலைத்திறமை காட்டி நடிப்பதால் அது உழைப்பு அல்ல என்றால், வருமான வரி வரக்கூடாதே! வருமானம் என்ற சொல் வந்தாலே உழைப்பு தானே? ஆக மொத்தம் இரு பிரிவினருமே பெற்றோருக்கு பணம் சம்பாதித்து தருகிறார்கள்.
இதில் டீக்கடை என்ன, திரைப்படம் என்ன? சொகுசு என்ன, கஷ்டம் என்ன? இன்னும் 
சட்டத்தில் இதற்கு சரியான தெளிவு இல்லை.



சனி, 19 ஆகஸ்ட், 2017

ஸ்ரீ காயத்ரி யந்திரம்

"ஓம் பூர் புவ ஸுவஹ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத்" இதுதான் காயத்ரி மந்திரம். கீழே யந்திரத்தில் ஆறாதார சக்தி சக்கரங்கள் ஒன்றன்மீது ஒன்றாக இங்கே ஒருங்கிணைத்ததுபோல் உள்ளது. காயத்ரி யந்திரத்தின் உள்ளே குண்டலினி சக்தியாக மைய முக்கோணத்துள் பிந்துவாக இருகிறாள். அதை சுற்றி அறுகோணத்தில் சிவசக்தி சங்கமம். மூவுலத்திலும் எங்கும் வியாபித்துள்ளதன் பொருளாக அதைசசுற்றி வட்டம் உள்ளது. ஞானத் தாமரை இதழ்களில் காயத்ரியின் 24 பீஜ மந்திரங்கள் உள்ளது. நான்கு திசையிலும் விஸ்வபிரம்மத்தின் கட்டுக்குள் எல்லாமே உள்ளது என்பது பூபுர வாசல்கள் குறிக்கிறது. 'ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்' என்பது விஸ்வபிரம்மத்தின் பீஜ மந்திரம்.

No automatic alt text available.

காயத்ரியானவள், சூரியோதயத்தில் சிறுபெண்ணாக 'பாலாம்பா' (வாலை), மதியம் குமரியாக 'புவனேஸ்வரி', அஸ்தமனத்தில் முதுமையாக 'ராஜராஜேஸ்வரி' என்று அருள் பாலிக்கிறாள். விஸ்வபிரம்மம்-விஸ்வபிரம்மணியாக அந்த பரம்பொருளே இப்பிரபஞ்சத்தை நடத்துகிறார். மஹாவிஷ்ணுவே இந்த விஷயத்தை நாரதருக்கு எடுத்துக்கூறுவதாக தேவி பாகவதம் 'ஸ்ரீ காயத்ரி ஸ்தோத்ரம்' பகுதியில் உள்ளது.



அதனால்தான் பிராமணர்கள் 'த்ரிகால சந்தியாவந்தனம்' செய்ய வேண்டும். காயத்ரி மந்திரம் சொல்லி உருவேற்ற வேண்டும். செய்யாதுபோனால் நீங்கள் என்னதான் எடுப்பான வெள்ளைத்தோல் கொண்டிருந்தாலும் முகத்தில் களையும் தேஜசும் இருக்காது. பிராமணர்தான் என்று சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். ஏன் அப்படி? அகவொளி இருந்தால்தான் அது ஒருவர் முகத்தில் தேஜவோளியாக வெளிப்படும்.

சனி, 12 ஆகஸ்ட், 2017

தேசத்தில் வேறு மன்னர்களே இருக்கவில்லையோ?

நாடு என்றால் அது தமிழ்நாடு மட்டுமே! மன்னன் என்றால் ராஜராஜ சோழன் மட்டுதான் தெரியும்! நமக்கு வேறு யாரையுமே தெரியாது. தெரிந்தாலும் ஏற்கமாட்டோம்!
பாரத நாடு மீதும், தமிழ் அல்லாத மொழிகள் மீதும் வெறுப்பு உள்ளதால், வெளி மாநிலங்களிலுள்ள அம்சமான பல விஷயங்களை நம்மால் பாராட்ட முடிவதில்லை. சோழனுக்கு இணையாகவே மற்றவர்களும் கட்டிடவியலில் இருந்துள்ளனர் என்பதற்கு இந்த படமே சான்று. இதுபோல் இந்தியா முழுதும் பல கலைச்சின்னங்கள் உள்ளது. அரசன் கட்டினான் என்றால் ஒரு ஷத்ரியனாக கைப்பட கட்டினானா? கட்டுமானத்திற்கு செலவு செய்தது ஒன்றுதான் பங்களிப்பு. மற்றபடி தனிப்பட்ட பங்களிப்பு என்றால் ??? பூஜ்யம்தான்!
இதில் எல்லாமே ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவில் கணித, கட்டிட சாஸ்த்திரங்களோடு உள்ளது. ஒரு விஸ்வகர்மா ஸ்தபதியின் திட்டம்-துணை இல்லாமல் எந்த அரசனும் பெயர் வாங்க முடியாது. சோழன் கைப்பற்றிய இமயம், கங்கை, கடாரம், காம்போஜியம், இலங்கை எல்லாமே இன்று இவன் பெயரைத் தாங்கியா நிற்கிறது? அங்கெல்லாம் அவனைப்பற்றி தெரிந்திருக்க ஞாயமில்லை.
பல்லவர், மூவேந்தர்கள், சாளுக்கியர், ராயர், குப்தர், நாயக்கர், மராட்டியர், முகலாயர், சுல்தான், ஹோயசல, சிந்தியா என்று எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வந்தது போனது. அவனவன் சாதித்த புகழ் பெருமை வீழ்ச்சி என எல்லாமே, இன்று வரலாற்று பக்கங்களில் மட்டுமே தூங்குகிறது.
இவர்கள் காலத்தில் நிறுவப்பட்ட விசாலமான அரண்மனைகள், கோயில் கோபுரங்கள், குளங்கள், கல்வெட்டுகள், அச்சடித்த செப்பு-தங்க காசுகள் என்று அனைத்தும் ஒரு விஸ்வகர்மன் கைவண்ணத்தில் வந்தவைதானே? அவர்களே சூத்திரதாரிகள். இது இப்படியிருக்க சோழன் மட்டுமே சிறந்தவன் என்று எப்படி சொல்லமுடியும்? இதுபோக மன்னர்களைப்பற்றி இன்று பெருமைப்பட வேறென்ன இருக்கிறது?
அவர்களுடைய புகழ், படையெடுத்து அபகரித்த சொத்துக்கள், மனைவிகள், கஜானா, நிலபரப்பு என எல்லாம் இன்று உள்ளதா? அவையெல்லாம் ஆணவத்தோடு சேர்த்தவை. ஆனால் அரச காலத்தில் விஸ்வகர்மா மக்கள் (ஸ்தபதி, கன்னார், தச்சர், கொல்லர், தட்டார்) படைத்த பொக்கிஷங்கள் இன்றும் காலத்தை வென்று நிற்கிறது. இதில் படைப்பு மட்டுமே ஆத்மார்த்தமாக ஆக்கபூர்வமாக இருந்ததால் அழிவு ஏற்படவில்லை. அதில் தெய்வீகம் உள்ளது.
விஸ்வகர்ம ஆச்சாரி ஈடுபடாத ஏதேனுமொரு தடயத்தைக் காட்டுங்கள். இதை நடுநிலை கண்ணோட்டத்தோடு சொல்லுங்கள், சோழன் மட்டும்தான் உயர்ந்து நிற்பவனா? இவனைப்போன்ற ஷத்ரிய மன்னர்கள் சுயமாக விட்டுச்சென்றது என்ன? என்ன? ஒன்றுமில்லை! ஒன்றுமேயில்லை.
இந்த நெருடல் ராஜராஜ சோழனுக்கு இருந்ததுபோலும். அதனால்தான் 'வீரசோழ குஞ்சர மாமல்லன், நித்தவினோத ராஜராஜ பெருந்தச்சன், குணவான் மதுராந்தகன் மூவரும் ஸ்தாபித்த பிரகதீஸ்வரம்' என்று அங்கே பெருமைமிகு கல்வெட்டு பொறிக்கபட்டுள்ளது. அதை தான் உருவாக்கி கட்டவில்லை என்று சொன்ன ராஜராஜனை பாராட்டவேண்டும்.


சனி, 5 ஆகஸ்ட், 2017

முற்போக்கு பிற்போக்கு, சித்தம் போக்கு சிவன் போக்கு

மறுஜென்மத்தில் நம்பிக்கை இல்லாத பலபேர் தங்கள் கூற்றை நிரூபிக்க சிவவாக்கியத்திலிருந்து பாடலை மேற்கோள் காட்டுவது வழக்கமே. அந்த வரிகள் 'கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணெய் மோர்புகா ... இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை இல்லையே' (பா.166). ஆஹா, நமக்கு மறுபிறப்பில்லை என்று சித்தரே சொல்லிவிட்டார், அதனால் இஷ்டம்போல் வாழ்வோம் என்று தம் போக்கில் அதர்மவழியில் ஈடுபடுவோரே அதிகம். சிவசித்தர்கள் எல்லோருமே மறைப்பு பாஷை கைகொண்டு பாடலியற்றினார்கள். போகர் சொன்னதுபோல் அதை நாம்தான் தவறாக புரிந்துகொண்டு களங்கமான புதியபொருள் கற்பிக்கிறோம். எப்படிபட்டவருக்கு பிறப்பு இறப்பு இல்லை? முற்றுபெற்ற நிலையை அடைந்தவருக்கு! பின் ஏன் கறந்த பால், வெண்ணெய், பூத்த மலர், சங்கு, என்று உவமை தந்தார்? இவை எல்லாம் உருமாற்றம் பெற்ற உச்சநிலையை காட்டுகிறது. ஒன்றிலிருந்து இன்னொன்று கடைந்து எடுத்து தெளிவாக்கியபின் அது ஏன் மீண்டும் இளநிலையை அடைய வேண்டும்? மலர்ந்த பூ ஏன் மொட்டாக வேண்டும்? பால் ஏன் மீண்டும் அதே மடியில் நுழைய வேண்டும்? கடைந்தபின் வெண்ணெய் ஏன் மோருக்குள் கரையவேண்டும்? ஆக, இவர் மேலே சொன்னது நமக்குப் பொருந்தாது. அவரே, 'நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடு போய், எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பது இல்லையே' என்று தெளிவாகச் சொல்கிறார் ( பா.110). அப்படி என்றால் என்ன? எவன் ஒருவன் தன் சுழுமுனை (அ) துரியம் அறிந்து பிரம்மரந்திர (துளையை) ஞான வாசலைத் திறந்து ஆன்ம தரிசனம் செய்வானோ, அந்த (ஆகாச) சிதம்பரத்தின் வாயிலை திறந்துகொண்டு உள்ளே சென்றவன் மீண்டும் பிறக்கமாட்டான். இப்போது சொல்லுங்கள், நாம் அந்த நிலையை எட்டிவிட்டோமா? கபாலத்தில் புருவ மத்தியிலிருந்து சகஸ்ரார சக்கரம் வரை இந்த வாசல் நீண்டு இருக்கும். பிறந்த சிசுவுக்கு தலைமேல் விரல் வைத்து அழுத்தக் கூடாது என்பார்கள். ஏன்? கபாலத்தின் அடியில் இந்த வாசல் மூடாமலே இருக்கும்.வளர்ந்த பின்தான் மூடும். அது சிற்றம்பலனை ஜோதியாக எந்நேரமும் பார்த்துக் கொண்டே இருக்கிறது, சிரிக்கிறது. ஆனால் மக்கள் தங்கள் கொள்கைக்கு ஏற்றபடி சித்தர் பாடல்களை வளைத்து ஒடித்து பொருள் திரித்து வருவது இயல்பான ஒன்றுதான். நான் பார்த்த வரை, இப்படி எல்லாம் மறைப்பு பரிபாசை அறியாமல் பொருள் கொள்வார்கள் என்ர்பதால் மூத்த சித்தர்கள் அதே வாக்கியங்களை தங்கள் பாடல்களில் நுழைத்து செய்தியை திறந்து போடுவார்கள். யார் எப்படி நூல் எழுதினார்கள் என்பது அநேகமாக எல்லா சித்தர்களும் அறிந்துள்ளனர். இந்த ஐயத்தை போக்கும் வகையில் போகர் விளக்குகிறார். வாசியோகம் சித்தித்தவர்களுக்கு பிறப்பு இறப்பு இனி இல்லை. ஆனால், யாரொருவன் பழித்து நிந்தனை செய்து, கோபம், பொறாமை, வெறி , பாவங்கள் என்று புரிவானோ அவன் மீண்டும் பல ஜெனனங்கள் எடுக்கிறான். மலத்தில் கிருமிகள் நெளிவதுபோல் இந்த பாவ நரகத்தில் கிடந்தது அல்லல் படுகிறான். பிறவியோட்டம் எப்போது முடியும்? சொர்கத்தின் ஞானவாசல் வழியை அறிந்து முன்னேறும்வரை இந்த சுழற்சி ஓட்டம் இருக்கும் என்கிறார்.

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

தேவையில்லாத ஆதிமொழி குழப்பம்

'வடமொழி @ சமஸ்கிருதம் என்பது தமிழுக்கு பின்னமே வந்திருக்கும்' என்று ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக திராவிட ஆய்வாளர்களின் வாதம் இருந்து வருகிறது . ஆனால் சித்தவியல் நூல் எழுத்தாளர் என்ற முறையில் சில தகவல்களை இங்கே அளிக்கிறேன்.
1. சமஸ்கிருதம் என்பது பூமியில் பேசப்பட்ட மொழியல்ல. அது தேவ மொழி. மூத்தகுடியின் மக்கள் பயன்பாட்டில் வரவில்லை.
2.தமிழ் சித்தர்கள் எல்லோருமே இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றிருந்தனர். சிவசித்தர்கள் என்றால் சிவனின் அம்சம் வந்து விடுகிறது!
3. சிவனின் ஆக்ஞேயத்தில் முருகபெருமான் தோன்ற அவன் பொதிகையில் அகத்தியருக்கு தமிழ் வடிக்க அருள் புரிந்தான். அதன்படி பார்த்தால் முருகன் வந்தபிறகுதான் தமிழ் வந்தது, குறிஞ்சி நிலமும், தமிழ் சித்த மரபும் வந்தது.
4. அகத்தியர் முதலில் பல வடமொழி நூல்களை இயற்றினார். அதன்பிறகு தமிழில் பெருநூல்கள் இயற்றினார். ஈசன் அளித்த தேனான வடமொழி நூலை பிரித்துப்பார்த்து ஆராய்ந்த பிறகு அவர் 'சௌமிய சாகரம்' இயற்றினேன் என்று சொல்லியுள்ளார்.
5. 'வடமொழிதான் தமிழ், சமஸ்கிருதம் வரவேயில்லை' என்று திராவிட ஆய்வாளர்கள் தங்கள் திருப்திக்கு சொல்கிறார்கள். வடமொழிதான் தமிழ் என்றால், அகத்தியர் அதை ஏன் மீண்டும் தமிழில் மொழிபெயர்த்து எழுத வேண்டும்?
6. சரி. அகத்தியர்தான் அப்படி என்றால், போகரும் 'ஈசருடைய மொழி' என்று தன் சப்தகாண்ட காவியமாம் போகர் ஏழாயிரத்தில் தெளிவாகச் சொல்லியுள்ளாரே!
7. தமிழின் தொன்மையையும் வடமொழியின் அடித்தளத்தையும் ஆராய ஆன்மிகம் இல்லாமல் வெறும் பகுத்தறிவு மட்டும் போதாது. நம் மொழி ஆய்வாளர்கள் திரித்து சொல்வார்கள் என்பதால்தான், மூத்த சித்தர்களே அதன் ரகசியத்தை தங்கள் பாடல்களில் சொல்லிவிட்டனர். அதனால் தான் நிறைய சித்த நூல்களை படிக்க வேண்டும். இல்லாவிட்டால் 'கண்டதே ஆய்வு, கொண்டதே கொள்கை' என்று இருப்போம்.
8.கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் முன்தோன்றிய குறிஞ்சி நில மூத்தகுடி நம்முடையதே, பேசியது தமிழே, வணங்கியது சேயோன் @முருகக் கடவுளே.
9. தொல்காப்பியரும் அதனால்தான் தன்னுடைய நூலில் வடமொழி இலக்கணம் பற்றியும் கோடிட்டார்.
10.மூத்த சித்தர்களில் யாருமே பார்ப்பனர்கள் இல்லை. வடமொழியை உயர்த்திபேச அவர்களுக்கு என்ன அவசியம்? முதலில் வந்தது ஈசருடைய வடமொழியாம் (சமஸ்கிருதம்), பிறகு முருகப் பெருமானை சிருஷ்டித்து அவர் அருளியதே தமிழ் என்கிறார்கள்.
11. 'மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்' என்பதால் மூத்த சித்தர் திருமூலர் இந்த திருமந்திர மாலையை வடமொழியில் இயற்றாமல் தமிழில் இயற்றினார் என்று அறியப்படுகிறது. அதனால் வடமொழியில் இந்த திருவாசக மூலநூல் இல்லை.
'மொழியை நிந்தித்தால் ஈசனையே நிந்தித்ததற்கு சமம்'. சித்தர்கள் என்றும் பொய் உரைத்ததில்லை என்பதை யாரும் உணர்வதில்லை. விஸ்வகர்மா சிருஷ்டித்த பஞ்ச வேதங்கள் சமஸ்கிருதம்தான், தமிழல்ல.
Image may contain: text

முருகனின் வயது என்ன?

விஸ்வகர்மா இந்த பிரபஞ்சத்தை படைத்து, பல உயிர்களையும் சிருஷ்டித்தார். அவருடைய பஞ்சபிரம்ம புத்திரர்கள்தான் மனு, மயன், துவஷ்டா, சில்பி, விஸ்வஞர். இதில் யுக சுற்று என்பது மனு (பிரம்மனின்) கல்ப காலத்தைப் பொறுத்தே நிர்ணயமாகிறது.

பிரம்மனின் 1 நாள் என்பது 'கல்ப' காலமாகும், அது 14 மன்வந்திரம்  (மனு+அந்தரம்) கொண்டது. இந்த ஒவ்வொரு மன்வந்திரதிற்கும் பெயர் உண்டு. ஒவ்வொரு மனுகாலத்திலும் பல சதுர் யுகங்கள் உண்டு. மத்ஸய புராணம்படி ஒரு மனு முடிய 71 சதுர்யுகங்கள் நடக்கவேண்டும். ஒவ்வொரு சதுர்யுக (அ) மகாயுகம் என்பது கிருத, த்ரேதா, துவாபர, கலி யுகங்கள் கொண்டது. ஆக, ஒரு சதுர்யுகம் (4320000 வருடங்கள்) என்பது :

கிருத  யுகம்- 1728000 வருடங்கள், த்ரேதா யுகம் - 1296000, துவாபர யுகம் - 864000, கலியுகம் - 432000.

இப்போது  7வது  (வைவஸ்வத) மன்வந்திரத்தில் 28வது சதுர்யுகம்  நடக்கிறது. அதாவது பிரம்மனின் ஒரு நாளில் பகல் பொழுதுதான் முடிந்துள்ளது. ஒவ்வொரு மனு முடிவில் மீண்டும் பிரம்மா சிருஷ்டி பணியைத் தொடங்குவார். சிவனும் விஷ்ணுவும் அவரவர் பணிகளை செய்வார்கள். இது கூட்டுப்பணி.. பிரளயம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம், நித்திய பிரளயம், யுகப் பிரளயம், அவாந்தர பிரளயம், மஹா பிரளயம் என்று பல வகையுண்டு.

இன்றைக்கு கலியுகம் பிறந்து 5018 ஆண்டுகள் ஓடியுள்ளது. இதற்குமுன் த்ரேதாயுகம் (கிருஷ்ணர் இருந்த காலம்) முடிந்துள்ளது. அதாவது, எட்டு லட்சம் சொச்ச ஆண்டுகள் முடிந்தது. அதற்குமுன் இராமர் அவதரித்தது இதே மன்வந்தரத்தின் 24வது மகாயுக ஒட்டத்தில் என்று புராணங்கள் சொல்கிறது. அப்படி என்றால் அதற்கு முந்தைய அவதாரங்கள் பற்றி சற்று பின்நோக்கிப் பார்த்தால் நமக்கு தலை சுற்றும்.

ஈசன் தன்னுடைய நெற்றிகண்ணின் மூலம் கந்தனை சிருஷ்டித்தார் என்பது நாம் அறிந்ததே.  மனுவின்  முதல் காலமான 'சுயம்பு மன்வந்திரம்' போதே கந்தன் ஸ்ருஷ்டியாகியிருக்கலாம்(?) அந்த தொகைக் கணக்கை நம்மால் போடமுடியுமா?

போகர் ஏழாயிரம் நூலில், ஈசருடைய வட மொழி பற்றி அண்மைப் பதிவில் கண்டோம். அதன்பின் கார்த்திகேயனை படைத்து, பொதிகையில் தமிழ் படைத்து,  முன்தோன்றிய மலைவாழ் மக்களும் அவனை கடவுளாக வணங்கியதையும் நாம் பார்த்தோம். இதன்படி, ஈசனின் மொழி வந்தபின், தமிழும் வந்தது. இது ஏறக்குறைய சமகாலமாகவும் இருக்கலாம். மனுபிரம்மன் கணக்கில் இது பெரிய இடைவெளி என்பது இல்லை. சம்ஸ்கிருதமும் தமிழும் அடுத்தடுத்து சிருஷ்டியானது என்று கொள்ளலாம். முன்தோன்றிய மூத்தகுடி பேசியது தமிழ்தான், வடமொழி இல்லை. பூமியில் மனிதன் பேசியது தமிழ்தான். பிற்பாடுதான் தேவமொழி மெல்ல மக்கள் மத்தியில் வந்தது. அது எப்போது என்பது அறியோம்!

இதனடிப்படையில் தமிழ்க் கடவுள் முருகன் தோன்றி எத்தனை காலம், தமிழ் எத்தனை தொன்மை, தமிழன் தோன்றி எத்தனை காலம்,  ஆகிறது என்பதை கணக்குபோட இயலாது.

Image may contain: text

போகர் தன்னுடைய ஜனன சாகரத்தில் ஆதியில் தானே நந்தி, பிரம்மன், திருமால், இந்திரன், முருகன், ராமன், கிருஷ்ணர் என பல அவதாரங்கள் எடுத்தார். அப்படி இருக்க  தான் முருகனாக இருந்த காலம் பற்றி போகருக்கே தெரியாதா என்ன? ஆனால் ஒரு சித்தராக ஜெனித்த போகர் மற்ற சித்தர்களைப்போல்  சுப்பிரமணியனின் வயது தெரியவில்லை, எந்த நூலிலும் மூத்த சித்தர்கள் சொல்லவில்லை என்கிறார்.

புதன், 2 ஆகஸ்ட், 2017

ஈசனின் மொழி - சமஸ்கிருதம்

போகர் பல வடமொழி நூல்களை ஆராய்ந்து அதன் சாரத்தை தன் ஏழுகாண்ட நூலில் சொல்லியுள்ளார் என்பதை அவரே கூறுகிறார். 'ஈசருடைய வடமொழி' என்று போற்றுவதால், அது யாரால் சிருஷ்டியானது என்பதையும் தெளிவாக்குகிறார். அவரிடம் மொழி துவேஷம் இருக்கவில்லை என்று தெரிகிறது. ஒரு தமிழ்ச் சித்தர் இதுபோல் உரைப்பது நமக்கெல்லாம் மெத்த ஆச்சரியத்தைத் தரும். அதை எல்லாம் ஆராய வேண்டுமெனில் வடமொழியில் போகர் எப்படிப்பட்ட பாண்டித்தியமும் புலமையும் பெற்றிருக்க வேண்டும்? அசாத்தியம்!
அதன் அடிப்படையில் தான் வடித்த மாபெரும் சப்தகாண்ட நூலில் பொய்யுரைக்கவில்லை என்றும், இதை சரியாக படித்துப்புரிந்து கொள்ளாதவர்களுக்கு மறைப்பாகவே தோன்றும் என்கிறார். உலகத்தாரின் நன்மைக்காக ரகசியm எல்லாவற்றையும் ஏழு காண்டங்களில் வெட்ட வெளிச்சமாக்கிப் போட்டார். வடமொழி நூல்களை ஆராயும்போது எங்கெல்லாம் தனக்கு ஐயம் வருமோ அதை உமையாளிடம் போகர் கேட்டுத் தெளிவடைந்துள்ளார். (அவ்வப்போது இவர் எனக்கு தன்னுடைய பாடலில் வரும் சந்தேகத்தை தீர்த்துவைத்து வழிகாட்டுவதைப் போல!). ஆயுர்வேதம் இலக்கணம் சாத்திரங்கள் பெருநூல் காவியங்கள் எல்லாம் மேருமலையில் கண்டுள்ளார். மலை போல் குவிந்திருந்த அத்தனை வடமொழி நூல்களையும் படித்துப் பார்த்து ஆராய அவகாசம் போதவில்லை என்று வருத்தப்பட்டு கூறியுள்ளார். இவர் குறிப்பிட்டுள்ள மேரு மலை, சீனத்தின் தக்ஷணத்தில் -இமயமலைத்தொடர். ஒரு வேளை குமரிகண்டம் (எ) தென்னாடு இருந்தபோது அங்குள்ள உயர்ந்த மலைமீதும் வைத்திருக்கலாம். பேரிடர் ஊழிக் காலத்தின்போது நூல்களை வடக்கே போய் மேருவில் ஈசனின் பொறுப்பில் வைப்பதை சித்தரிஷிகள் வழக்கமாகவே கொண்டிருந்தனர். சித்த பரம்பரையில் வரும் சீடரானவர், தமிழையும் வடமொழியையும் பிரித்து ஆராய்ந்திட புலமை பெற்றிருக்க வேண்டும் என்கிறார். சித்தனானவன் பத்தராய் இருந்தாலும் (பொற்கொல்லரான தன்னையே சுட்டிக்காட்டி), முத்தமிழ் என்னும் பரிமீது தன் எண்ணங்களைச் செலுத்தத் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார். அப்படிப்பட்டவரே அகத்தியர் மெச்சும் 'விருதுபெற்ற' சீடராவார் என்று அதன் பின்வரும் பாடல்களில் சொல்கிறார்.
பின் குறிப்பு:- இதுவே ஈசனுடைய மொழி என்கிறார் போகர். அப்படி எனில் தமிழ் மொழி என்னவாம்? இப்படி ஒரு கேள்வி எழும். ஈசன் தன் நெற்றிக்கண்ணிலிருந்து குமரக் கடவுளை படைத்ததுமே, அவர் அருளால் பொதிகை மலையில் அகத்தியர் மூலம் தமிழ் பிறக்கும் என்று ஈசன் சொன்னதை பழைய பதிவில் பார்த்தோம். ஆக, முன்தோன்றிய மூத்த குடியான குறிஞ்சி மலை நிலத்து மக்கள் முதன்முதலில் பேசியதே தமிழ்தான்! ஐந்நிலங்களில் 'குறிஞ்சி' மலையும் மலை சார்ந்த இதுதான் தொன்மையானது, குடிகளும் நாகரிகமும், மொழியும் தோன்றியது. அப்படி என்றால் அகத்தியரும் மற்ற ரிஷிகளும் மனிதர்கள்தானே, அவர்கள் மட்டும் தமிழல்லாமல் வடமொழி பேசியது ஏன்? விஸ்வகர்மா இப்பிரபஞ்சத்தில் பஞ்ச கிருத்தியங்கள் செய்யும்போதே, சில ரிஷிகளையும் படைத்தார். அவர்கள் மூலம் ஏனைய செயல்கள் நடந்தேறின. இதெல்லாம் நம்பும்படி இல்லையே என்று யாரேனும் சொன்னால், அவன் தமிழை ஆராயும் தகுதி அற்றவன் என்பது பொருள். ஆன்மிக அடித்தளம் சற்றும் இல்லாமல் பகுத்தறிவு மட்டுமே கொண்டு தமிழ் மொழியின் அடிமுடி தேட முற்படுவது நடவாது. ஆகவே இங்கிருந்துதான் வடமொழியா? தமிழா? என்ற பிரச்சனை தொடங்கியது. தமிழே தெய்வம் என்றால் அங்கு நாத்திகம் வருமோ? அதெப்படி சுயம்புவாகவே ஈசன், தெய்வங்கள், ரிஷிகள், மொழி, வேதங்கள், கல், புல், பூண்டு எல்லாமே வரும்? என்று கேட்டால் அவர்களுக்கு விஸ்வபிரம்ம தாற்பரியத்தை விளக்கவேண்டிய கட்டாயமில்லை. அவர்கள் தெரிந்துகொண்டு ஒன்றும் ஆகப்போவது இல்லை. இதன்படி பார்த்தால் விஸ்வகர்மாவினர் ஈசருடைய மொழியாம் சமஸ்கிருதத்தை கற்றுத் தெரிந்திருக்க வேண்டும். பஞ்சபிரம்ம முகத்திலிருந்து வந்த வேதங்கள் எல்லாமே சமஸ்கிருதத்தில் இருப்பதே சான்று. நெற்றிக்கண்ணிலிருந்து ஈசன் படைத்த முருகன் வந்த பிறகுதான் தமிழே வந்தது. சுமார் ஒரு நூற்றாண்டிற்கு மேலாக நாத்திகம், பகுத்தறிவு, ஜாதிப்பிரிவினை இயல்பை விட பூதாகாரமாக காட்டப்பட்டதால், விஸ்வகர்மா குலத்தினருக்கு இம்மொழி தெரியாமலே போனது. மொழி ஆர்வம் இல்லாததாலும், அதை வெறுத்து எதிர்த்துப்பேசும் திராவிட சமூகத்தில் வாழ்வதால், அம்மொழி தெரிந்து கொள்ளாமல் போனது இன்று நமக்கு கோபத்தை உண்டாக்கும். 'சம்யக்-கிருதம்' என்றால் 'நன்கு அமைக்கப்பட்டது' Complete form என்று பொருள். ஆகவே, ஈசன் --> முருகன் --> தமிழ்... இப்படிப் பார்த்தால் உலகத்தில் மக்கள் பயன்பாட்டில் மூத்த மொழி தமிழ்தானே! சித்தர்கள் முத்தமிழ் வல்லவர்களாக இருந்தால்தான் அகத்தியர் ஏற்றுக் கொள்வார் என்றும் போகர் சொல்கிறார். ஈசனின் மொழி இன்று நம் நாட்டில் அநேகமாக பயன்பாட்டில் இல்லாமல் அழியும் நிலையில் உள்ளது. விஸ்வபிரம்ம புராணம் தெரியாமல் போனதால் எது ஆதிமொழி என்று நம்மவர்கள் அறியவில்லை. துவிஜ பிராமணர்களும் இதைத்தான் சொல்லிவந்தனர். ஆனால் ஜாதிரீதியாக இவர்கள் தமிழை அடக்கி வைத்துள்ளனர் என்று சொல்லி தடைபோட்டனர். ஈசனின் மொழி அழியக்கூடாது என்பதால் தில்லை ஆதிதீட்சிதர்கள் பஞ்சாட்சரப்படி கருவறையில் சமஸ்கிருதம்தான் பேணவேண்டும் என்று கடைபிடித்த முறையை அறநிலையத் துறையும் சில முற்போக்கு அமைப்புகளும் குறை கூறின. அங்கு முதல் மரியாதை சமஸ்கிருதத்திற்கும், அதன் பிற்பாடு தமிழுக்கும் கொடுங்கள் என்று வாதாடினர். தில்லையில் நால்வர் பாடிய திருமுறைகள் தமிழ்தான்.என்பதை அவர்கள் இகழவில்லை. ஆனால் வடமொழியை காக்க வேண்டும் என்றனர். இதில் நாம் வேடிக்கைதான் பார்க்க இயலும்! வேறென்ன செய்ய? ஆகவே, திராவி கட்சிகளோடு சேர்ந்து நாம் என்றுமே மொழி நிந்தனை செய்யக்கூடாது. அது ஈசனை பழித்த பாவத்திற்கு சமம்! உங்களுக்கு ஆர்வமிருந்து, வயதும் ஞாபக சக்தியும் வேலை நேரமும் ஒத்துழைத்தால், சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளலாம். இதன் அடிப்படையில்தான் (தேவ லிபி) தேவநாகரி (Devanaagari script) எழுத்துகளிலிருந்து ஏனைய ஹிந்தி மராத்தி நேபாள மொழிகள் பிறந்து வளரந்தது. காலபோக்கில் எழுத்துரு மாறி இன்று இருக்கும் நிலைக்கு வந்துள்ளது. மொழிகளின் மூலம் ஈசன் தானே? தொல்காப்பியர் 'சேயோன் மேவ மைவரை உலகமும்' என்கிறார். குறிஞ்சி நிலமக்கள் சிவந்த நிறமான மலைக்கடவுள் முருகப்பெருமானை வணங்கினார்கள். இதுநாள் வரை எந்த மொழி பழையது என்றால் பயன்பாட்டு மொழியான 'தமிழ்' மொழிதான் என்று தெரிகிறது. இது புரியாமல் இன்று வரை தர்க்கமும் நிந்தனையும் நடந்து வருகிறது. பெரிய சந்தேகத்தை போகர் தீர்த்துவைத்தார்.

நிலத்தடி நீர் குறையாமல் இருக்க...

படத்தில் உள்ளபடி 4 x 6 அடி ஆழத்தில்பள்ளம் தோண்டி அதில் காய்ந்த தேங்காய் மட்டைகளை குப்பற போட்டு அடிக்கி, பிறகு மண்ணை போட்டு மூடி விடவும். அதில் மழை நீர் வந்து விழுவது போல் அமைத்தால் நிறைய நீரை உறிஞ்சி குடிக்கும். ஆழமில்லாத குழி பயனில்லை. இதனால் உங்கள் நிலத்தடி நீர் உயரும். இதை கொல்லைப்புற கிணற்றடியில் நிறுவினால் மிக்க பயன்தரும். தனிவீடு வைத்திருப்போர் கொஞ்சம் இடம் இருந்தாலும் இதை தாராளமாகச் செய்யலாம். பராமரிப்பு செலவு எதும் இல்லை.
மேஜை அலங்கார Flower bouquet கூடையில் வைத்து விற்கிறார்களே, அந்த பூங்கொத்துக்களை காம்போடு அடியில் coir pith block ல் சொருகிவைத்து நீர்தெளித்து வைப்பார்கள். அந்த நார்பொருள் 2-3 நாள் வரை ஈரம் காக்கும், பூக்களை வாடாமல் வைத்திருக்கும். அதே முறைதான் நாம் கிணற்றடியில் செய்கிறோம்.
குளக்கரையைச் சுற்றி பனைமரங்களை நட்டு வைத்தால் அதுவும் இதே வேலையைத்தான் செய்யும். ஆனால் மெள்ள வளர்ந்து வேரூன்றிய பிறகுதான் பலன் தரும். அதை சமுதாய நோக்கில் செய்யலாம். ஆனால் வீட்டிற்கு தேங்காய் நார் முறையை எளிதாகச்செய்து பயனடையலாமே.
Image result for coir pith for gardening