About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 17 பிப்ரவரி, 2018

வீடுபேறு தரும் செட்டியார்

"வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே..."

இந்த சிலேடைப் பாடல் மருத்துவம் மற்றும் தத்துவத்தை உணர்த்துகிறது.

1) உடலில் முக்குண தோஷங்கள் சமன்பெற மருத்துவ சரக்குகளான  வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் இவற்றை சமையலில் அன்றாடம் பயன்படுத்துகிறோம்.

2) இந்த உடல் என்னும் வெறும் காயமானது உபவாசம் விரதம் மூலம் சுக்காக சுருங்கிப் போகும்போது, இரும்பைப்போன்ற (வெந்த அயம்) வலிமையான ஊழ்வினை/ நோய்கள் என்னை தாக்காமல் இருக்க, அகத்தை சீர் செய்யும் உன் திருவடிகளைப் பற்றிடக் கொடுத்திடு. மீண்டும் சுமக்கவேண்டிய பெரும் காயத்தை (மறுபிறவியை) எடுக்காமல் எனக்கு வீடுபேறு தந்திடு ஏரகத்து (வள்ளியூர் -கன்னியாகுமரி மாவட்டம்) செட்டியாரே.

இப்பாடலில் ஏரகம் என்றதும் நான்காம்  படைவீடு உள்ள சுவாமிமலை (கும்பகோணம்) என்று நினைத்திடுவோம். 'சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியத்துக்கு மிஞ்சிய தெய்வமில்லை' என்பது பழமொழி. மேற்கண்ட மருந்து சரக்குகளை வைத்திருப்பவர் வணிக செட்டியார். ஆனால் முருகனை செட்டி என்று அழைக்க அவன் என்ன சரக்கு விற்றான்? வளையல் விற்கும் செட்டியாராக வந்து அகத்தியருக்கு திருக்காட்சி தந்தான் முருகன். (செட்டி குளம் - பெரம்பலூர்). அதனால் முருகனை செட்டி என்று சொல்வதுண்டு.


எனது குருநாதர் ஸ்ரீ பாம்பன் சுவாமிகளும் முருகனை அப்படித்தான் அழைத்தார். ஷண்முக கவசத்தின் இறுதிப் பாடலில் 'இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க...' என்று பாடுகிறார். அதாவது 'எம் தொண்டர்கள் சூழ நான் இருக்கும்போதும் என்னைக் காத்திடு செட்டியாரே' என்கிறார்.

மேற்கண்ட சிலேடை பாடலுக்குப் பொருளுரைத் தருவோர், வெந்தயத்தை காயகற்ப அயச் செந்தூரம் என்று நினைத்துக் கொள்கின்றனர். அந்த அயத்தை உண்டுங்கூட ஆவதொன்றுமில்லை என்று சொல்கின்றனர். அது அப்படி அல்ல. தினப்படி சமையலில் சேர்க்கும் சரக்குகளில் செந்தூரம் வருமா? அதனால் அப்பாடலின் பொருளை அப்படிப் பார்க்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக