பல வருடங்களுக்குப்பிறகு இன்றுதான் ஒரு லென்டிங் நூலகத்திற்குச் சென்றேன். ‘விக்னேஸ்வரா லென்டிங் லைப்ரரி, வளசரவாக்கம்.' பழுப்பாகிப்போன பல புத்தகங்கள் அங்கே புத்தக அடுக்குகளில் சோம்பிக் கிடந்தது. சாண்டில்யன், லட்சுமி, தீபம் பார்த்தசாரதி, சிவசங்கரி முதல் இக்கால எழுத்தாளர்கள் வரை பலதும் அடுக்கி வைத்திருந்தார். இன்னொருபுறம் ஹேட்லி சேஸ், அகதா கிறிஸ்டி, டின்டின், முதல் ஹாரி பாட்டர் வரை இருந்தன. எங்களை யாரேனும் வந்து புரட்டிப் பாருங்கள் என்று கூவாத குறையாக அங்கே ரசகற்பூரம் மணக்க புத்தகங்கள் ஏங்கிக்கொண்டு இருந்தன.
“சார், இப்பல்லாம் மின்னமாதிரி அதிகமா யாரும் படிக்க வருவதில்லை. சித்தர்கள், அமானுஷ்யம், சுயமுன்னேற்றம், இதை மாதிரி படிக்கும் சிறு கூட்டம் உண்டு. மத்தவங்க எல்லாம் கல்கண்டு, ராணி, குரு பெயர்ச்சி பலன்கள் போன்றதை தேடுகிறார்கள். இன்னும் சில பசங்க வந்து காதல் கவிதைகள் புக்ஸ் இருக்கானு கேக்குறாங்க” என்று கூறினார் அதன் உரிமையாளர் திரு.சுப்பிரமணியன்.
“வரும் சந்தா பணமும், சர்குலேஷனில் வரும் லென்டிங் பணமும் போதவில்லை. கடை வாடகைக்கே வரும் தொகை போய்விடுகிறது. சிலர் படித்துவிட்டு அப்படியே அபேஸ் செய்வார்கள், வீடு மாற்றிக்கொண்டு கொடுக்காமல் போய் விடுவார்கள், தொலைந்து போச்சு என்பார்கள், இப்படியே முக்கால்வாசி புத்தகங்கள் போய்விடுவதுண்டு. அத்தனையும் என்னுடைய 50 வருட சேகரிப்பு சார் என்றார். 1990ல் சுமார் இரண்டாயிரம் சந்தாதாரர்கள் இருந்தார்கள். இப்போது முன்னூறு பேர் இருந்தால் அதிகம். இப்போதெல்லாம் எந்த புதிய புத்தகத்தையும் நான் லாமினேட் செய்வதில்லை. போன மழையில் கடையில் தண்ணீர் ஒழுகி மெஷின் கெட்டுப்போச்சு. ரிபேர் செய்ய செலவு ஆவதால் அப்படியே விட்டுட்டேன்.
இங்கே ஆண்டு சந்தா ரூ.400, அதுபோக வாசிக்க எடுத்துப்போகும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் குறைந்தது ரூ.25 - 35 வரை ரீடிங் சார்ஜஸ் வாங்குவேன். அந்த புக்ஸ் நம் கடைக்கு திரும்பி வரும்வரை நிச்சயமில்லை. குறித்த தேதியில் வராவிட்டால் அதைத்தேடி நான் அவங்க வீட்டைத்தேடிக் கண்டு பிடித்து சிரமப்படுவதும் உண்டு. இந்த காலத்துல எந்த பசங்களும் நோட்ஸ் எடுப்பதில்லை. ஸ்கூல் பசங்க இன்டர்நெட்டில் காப்பி அடித்து ஹோம்வர்க் செய்யறாங்க. இன்டர்நெட்டில் டவுன்லோட் செய்துகிற e-books ஐ நிறையபேர் முழுதும் படிப்பதில்லை. வாசிப்பு சுத்தமா மாறிப்போச்சு சார். நூலகத்தை என் ஆத்ம திருப்திக்காக நடத்துறேன்” என்று ஆதங்கத்துடன் பேசினார்.
அப்போது காரில் வந்து இறங்கிய மெத்தப் படித்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர் ஐந்து தமிழ் புத்தகங்களை திருப்பிக் கொடுக்க வந்தார். மேசையில் வைக்கும்போது அவை என்னவென்று பார்த்தேன். அத்தனையும் அக்கால எழுத்தாளர்களின் நாவல்கள் மற்றும் ஆன்மிக புத்தகங்கள். ஆக, இதுபோன்ற தலைப்புகள்தான் இவர் கடைக்கு சுவாசம் ஊட்டிக் கொண்டிருக்கிறது. புத்தகத் திருட்டை ஒழிக்க முடியாது. வாசிப்பு உலகில் இதெல்லாம் சகஜம்! ஆனால் சற்று காது கேளாத இவருக்கு வாசகர்களின் செயல் நஷ்டப்படுத்தும்.
அவருக்கு நான் எழுதிய சில சித்தவியல், சமூகவியல், தன்னம்பிக்கை புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு வந்தேன். ‘சார், ரொம்ப தேங்க்ஸ். இன்னைக்கே அதை கேட்டலாக் போட்டு ஷெல்ஃப்ல வெச்சிடுறேன் சார்” என்றார். மனிதர் மிகவும் நெகிழ்ந்து போனார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக