எங்கள் தெருவில் ஒரு Play school உள்ளது. காலையில் 8 மணிக்கெல்லாம் குழந்தைகளை வீட்டிலிருந்து அள்ளிக்கொண்டுவந்து பெற்றோர்கள் இறக்கி விடுவார்கள். காலையில் தவறாமல் 8.30க்கு ஒரு குழந்தை வீரிட்டு அழுவது தெரு முழுக்க ஒலிக்கும்.
அதுபோல் இரவு 8 மணிவரைக்கூட சில குழந்தைகள் வாசல் கதவை பிடித்துக் கொண்டு அழுதுகொண்டு வேடிக்கைப் பார்க்கும். பணிக்கு செல்லவேண்டிய கட்டாயத்திலுள்ள பெற்றோர்கள் வந்து கூட்டிச் செல்லும்வரை நிலை இதுதான். எனக்குத் தெரிந்து அது பெரிய வீடுதான், வராண்டா பகுதியில் பொம்மைகள் விளையாட்டு சாமான்கள் உள்ளது. நாள் முழுக்க அவை என்னதான் விளையாடும்? அலுத்துப்போகும். அங்கே மண்டசோரி ஆசிரியைகள் இருவர், மேய்க்க ஒரு ஆயா உள்ளாள், வாசலில் ஒரு செக்யுரிட்டி. ஆசிரியைகள் போனபின் அடைந்து கிடக்கும் குழந்தைகள் என்னதான் செய்யும்?
கேட்டைத் திறந்துக்கொண்டு சாலையில் இறங்கி விளையாடவும் முடியாது. வாசலில் நின்றால் கொசு கடிக்கும். அவை மிருககாட்சிசாலை கூண்டில் அடைபட்ட பிராணிகளைப்போல் சோர்ந்துபோன முகத்தோடு அங்கேயே திரிந்துகொண்டு இருக்கிறது. இந்த அவஸ்தைகளை குழந்தைகள் அனுபவிக்க வருடத்திற்கு ரூபாய் 1 லட்சம் பீஸ் கட்டுகிறார்கள். இக்குழந்தைகள் ஞாயிறு மட்டும் வீட்டில் தாய் தந்தையோடு விளையாடினால் அதிகம். அதற்குள் தொலைகாட்சி/ வீடியோ கேம்ஸ் போட்டு அதற்கு வெளியுலகம் அறியாமல் செய்து விடுகிறார்கள். கணவன்-மனைவி பொருளீட்ட வேண்டும், குழந்தை பெறவேண்டும், பொருளாதார அந்தஸ்த்து அடைய வேண்டும் என்றால் எப்படி? ஓய்வுபெற்ற நிலையில் எத்தனை பாட்டி தாத்தா இதுபோல் பேரக் குழந்தைகளோடு சரிசமமாக விளையாட முடியும்? அவர்களுக்கே ஒரு காப்பாளர் வேண்டிய நிலைதான் உள்ளது.
இப்போது தெருவில் வரும்போது அக்குழந்தைகள் என் கணில்பட்டனர். குழந்தைப் பருவம் என்னவென்பதை அறியாமலே வளர்ந்து விடுவார்கள். ஐயோ பாவம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக