“காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு பலமாதங்களாக ஊதியம் தரப்படவில்லை” என்ற ஒரு செய்தியை அண்மையில் படித்தேன்.
கோயில் அர்ச்சகர்களுக்கு மூவாயிரத்துக்கும் குறைவாக அடிமாட்டு சம்பளமும் அதேசமயம் அறநிலயத்துறையில் கடைநிலை ஊழியருக்கு இருபதாயிரமும் உள்ளது. கோயில் பெயர் பலகையில் ‘அருள்மிகு’ என்ற சொல் பொறித்த அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்கள் நீங்கலாக சில கோயில்களில் மட்டும்தான் கவுரதையான ஊதியத்தை அர்ச்சகர்களுக்கு வழங்குகிறார்கள். கோயிலில் உண்டியில் விழும் பணம் அர்ச்சகர்களுக்குப் போய்ச்சேராது. தட்டில் விழுந்தால் மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
எல்லா கோயில்களிலும் சேரும் நிதி என்னவாகிறது? அர்ச்சகர்கள் மற்ற நாட்களில் மண்டபத்தில்/ வீடுகளில் வேறு விசேஷங்களுக்கு போயாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். இல்லாவிட்டால் எப்படி ஜீவனம் செய்வது? அதனால் தங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறையை வேறு தொழில் கல்விக்கு போகும்படி பணிக்கிறார்கள். இதுபோக நம் அரசு இந்து அறநிலையத்துறைமூலம் சேரும் நிதியைக்கொண்டுதான் மற்ற மதங்களின் பள்ளிவாசல்/தேவாலய தேவைக்கு கொடை செய்கிறது என்பது நாம் அறிந்ததுவே.
ஒருபுறம் அர்ச்சகர்களின் நிலை இழிவாக உள்ளது. இன்னொருபுறம், கலியுகத்தின் பிரதம பாதத்தில் கலி 5000 ஆண்டுகளுக்குப்பிறகு வேதியர்களின் நிலை சீர்கெடும் என்று அன்றே காலக்ஞானத்தில் தீர்க்கதரிசனம் உள்ளது. இது அவர்களுடைய ஊழ்வினைப் பயனே! இல்லாவிட்டால் வேறு ஜாதியில் பிறந்து வேறு தொழில் செய்யாமல் இக்குலத்தில் வந்து பிறப்பானேன்? இனி ‘எல்லா ஜாதியினரும் கோயில் அர்ச்சராகலாம்’ என்ற நிலை வந்தால் அவர்களும் ஆளாளுக்கு கோயில் தூணில் சாய்ந்து கொண்டு அட்டதிக் பாலகர்கலாக அமரவேண்டியதுதான். இறைத்தொண்டு புரிந்து வேதம் ஓதி பூசிக்கும் ஆதிசைவர்களைப்போல் எளிமையாக பொறுமையாக வாழ மற்றவர்களால் இருக்க முடியுமா? ஏதோ, சமூக கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்காக கழக ஆட்சியில் இதெல்லாம் வீம்புக்காக செய்யப்பட்டது. கேரளத்தில் இது சாத்தியப்பட்டாலும் இங்கு இது வேலைக்கு ஆகுமா? இதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆன்மிகத்தை ஆகமங்களை வேதத்தை வேதியனை, எதிர்த்து ஒரு நூற்றாண்டுக்கு முன் ஆரம்பித்த விடுதலை வேட்கையில் கழக தீவட்டிகளே எரிந்துபோகும் அபயாமே உள்ளது. இதுவும் பஞ்சபூதத்தானின் சீற்றத்தை அதிகரிக்கச் செய்யும். ஆரியர் / திராவிடர் என சொல்ல ஆரம்பித்து இறை நிந்தனை செய்து, மறையை எதிர்த்து, எல்லாமே தமிழ்தான் என்று சொல்லிக்கொண்டு பாதகங்களை விளைவித்து விட்டனர். இறை மொழியைக் கொண்டே இறைவனை எதிர்க்கும் தத்துவம் நம் தென்னகத்தில்தான் நடக்கும். நாம் எல்லோரும் இதிலிருந்து தப்பிக்கும் உபாயத்தை அறிந்துள்ளோம்.
என்னதான் ஈசனைத் தொட்டு பூசித்தாலும், மிகஅரிதாக எங்கேனும் தவறு இழைக்கும் அர்ச்சகர் இருக்கத்தான் செய்வார். அது அவருடைய கோள்சார கர்மவிதியாக இருப்பது. நிர்வாகமோ அதன் முக்கியஸ்தரோ இவர்களை மிரட்டிப் பணியவைத்து காரியம் சாதித்தால்தான் உண்டு. அதைத்தாண்டி தனி நபராக எந்தவொரு பெரிய துணிகர கொள்ளையோ, கடத்தலோ செய்துள்ளதாக எனக்குத் தெரிந்து இல்லை. வறுமையின் காரணமாக இவர்கள் வேதம் ஓதுதலை நிறுத்தினாலோ, தங்கள் பணியை செய்யாது போனாலோ குந்தகம் யாருக்கு? இதைப்பற்றி திருமூலர் முதல் திருவள்ளுவர் வரை விரிவாகச் சொல்லியுள்ளனர். அது நாட்டின் இறையாண்மையையும் மக்களையும் பாதிக்கும், வளத்தை சீர்குலைக்கும் என்கிறார்கள்.
‘யானைப்பாகன் பணக்காரன் ஆகிவிட்டான். ஆனால் யானை இன்னும் யாசித்துக்கொண்டு இருக்கிறது’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக