எனக்குத் தெரிந்த ஒரு கிழவி அண்மையில் தன் 95வது வயதில் மாண்டாள். அவள் இருந்தவரை தன் மகளுடன் கூட்டு சேர்ந்து தன் மருமகளுக்கு சொல்லொணா துயரங்கள் தந்தாள். அக்கிழவியின் குணத்தை அவள் மகனும் ஆதரித்ததுதான் கொடுமை. ஒரு கட்டத்தில் மருமகளை வீட்டை விட்டு துரத்தியும் விட்டாள். காலம் முழுக்க கிழவி பிரச்சனையாகவே இருந்தாள். அவள் எங்கே உள்ளாள் என்பதை அதிகாலை கனவில் பார்த்தேன்.
அவளை யாரோ புதைக்குழிக்குள் இழுப்பதும் அவள் வாய் மூக்கு காது எல்லாம் மண் அடைத்து, கீழே இழுக்கப்படுவதைக் கண்டேன். அவள் என்ன ஆனாள் என்று பார்க்க பாதாள உலகம்வரை பயணித்தேன். அங்கே ஒரு தடாகம் இருக்க சிறு சுறா ஒன்று என் முன்னே வந்து நின்றது. அது தன் வாயை எனக்குத் திறந்துகாட்ட, அங்கே மேல்/ கீழ்த்தாடை கூர் பற்களுக்கு இடையே இக்கிழவி சிக்கிக்கொண்டு திணறுகிறாள். என்னைப் பார்த்ததும் 'நானே விருப்பப்பட்டுத்தான் இங்கே வந்தேன்' என்றாள். உடனே சுறா மீன் போய்விட்டது.
கெத்துதான்! அக்கிழவி இப்படிச் சொன்னது எனக்கு நகைச்சுவையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால் நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்ன?
"பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான்
வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு"
கோபஞ் செய்தே யமன் கொண்டோடிப் போவான்
வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு"
பாவங்கள் செய்வதால் அல்லல்பட்டு இறக்க நேரிடும், அந்த ஊழ்வினைக்கேற்ப பிறவிகள் துரத்தும், யமன் துரத்துவான். இப்படியே இந்த ஓட்டம் தொடரும். கோபத்தையும் அதன் காரணிகளையும் விட்டொழித்தால் பிறப்பு-இறப்பு அறுபடும். வேதம் உரைத்த தர்மநெறிப்படி வாழ்ந்தால் மேன்மையான இடத்தை அடையலாம் என்ற கடுவெளி சித்தர் பாடல் என் நினைவுக்கு வந்தது. சொர்க்க/ நரக பதியில் என்ன நடக்கிறது என்பதை பார்த்த குருநாதர் போகரும் இதையேதான் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக