தமிழ் வளர்க்கிறேன், அதற்கு நிதிவேண்டும் என்று யாரேனும் சொன்னாலே, பரவசித்துப்போய் ஜோபியில் இருக்கும் அத்தனையும் எடுத்துக் கொடுக்கும் அளவில் தமிழ் மக்கள் உள்ளனர். தமிழை காசு கொடுத்து வளர்க்க நாம் பாடுபட தேவையில்லை.
ஒரு குடும்பத்தில் 2-3 மொழிகள் பேசுபவர்கள் இருந்தால், அந்தக் குடும்பத்லுள்ள குழந்தை எல்லாமே பேசக் கற்றுக்கொள்ளும். ஆனால் வளர்ந்தபின் அதற்கு எந்த மொழி மனதிற்கு விருப்பமோ அதில்தான் திறமையை வளர்த்துக்கொள்ளும். காசு கொடுத்து அதன் மனதை மாற்ற இயலுமா?
தமிழர்கள் அல்லாதோர் வேட்டி கட்டினாலோ, நெற்றிக்கு விபூதி பூசினாலோ, வாய் நிறைய தமிழ் பேசினாலோ, நாம் மயங்கிப் போகிறோம். ஏன்? நம் மக்கள் பழகாத ஒன்றை, எதிர்க்கும் கலாசாரத்தை வெளிநாட்டினர்கள் செய்வதால் அதை பெரிதும் ரசிக்கிறோம். அதோடு நின்றுவிட்டால் தவறில்லை. அத்தேசத்தில் தமிழ் வளர்க்க அவர்கள் கோரும் அனைத்தையும் நாம் கண்களை மூடிக்கொண்டு தர சம்மதிப்பதுதான் குற்றம். காசு கொடுத்து செய்ய இது மதமாற்றமா?
'Delivery தந்துட்டு Nightக்கு lodgeல தங்கிட்டு bus ticket எடுக்க ATM ல காசு எடுத்துகினு tiffin சாப்டு return வந்துட்டேன்' என்று சராசரி ஆள்கூட சர்வ சாதாரணமாக பேசும் காலம் இது. நம்மூரில் ஆங்கிலம் வளர்க்க கேம்ப்ரிட்ஜ், ஹார்வர்ட், ஆக்ஸ்போர்ட், மற்றும் பிரிட்டிஷ்/அமெரிக்கன் கவுன்சில்கள் கணிசமாக நிதி திரட்டி நம் பல்கலைக் கழகங்களுக்கு கொடுக்கிறதா என்ன?
அயல்நாட்டில் தமிழ் வளர்க்கவும், அரிய தமிழ் சுவடிகளை கொடுத்துதவும் நேசர்களை என்னவென்பது? பல்கலைக்கழகங்கள் பிற தேவைகளுக்கு முதலீடுகள் செய்ய எப்படியாவது நிதி திரட்ட தமிழ் ஏமாளிகளை வலைவீச்ப் பிடிப்பது வழக்கமாகி விட்டது. அந்த பல்கலைகழகம்தான் செய்கிறதோ, அதன் பெயரில் எந்த அமைப்பு செய்கிறதோ தெரியாது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை உருவாக்க திரட்டிய $6 மில்லயன் நிதி என்ன ஆனது? தமிழ்நாட்டில் திரட்டிகொடுக்க எத்தனைப்பேர் பாடுபட்டார்கள் என்பது நாம் அறிவோம். இன்றைய நிலையில், பல அரசுப்பள்ளிகளை மூடும் எண்ணத்தில் அரசு உள்ளது. அந்த நிதியை இதற்கு பயன்படுத்தி இருக்கலாம்.
நான் பள்ளியில் படிக்கும்போது 'ஈழப்போராளி இயக்கங்களுக்கு தாராளமாக நிதி தாருங்கள்' என்று நகரம் முழுக்க ஆங்காங்கே பதாகைகள் காட்டி உண்டியல் வசூல் ஜோராக நடந்ததை பார்த்துள்ளேன். ஒரு கட்டத்தில், இயக்கத்தின் நோக்கம் மாறுகிறதை உணர்ந்த எம்ஜிஆர் அதை எல்லாம் தமிழ்நாட்டில் உடனே தடை செய்தார். இத்தனைக்கும் அவர் ஈழத்தில் பிறந்தவர்தான், அவருடைய தந்தை அங்கே மாவட்ட மாஜிஸ்ட்ரேட்!