"மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்று உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தப்படுவதாகும்" என்று மஹாத்மா காந்தி தன்னுடைய 'சத்திய சோதனை'யில் சொல்லியுள்ளார்.
இன்றைக்கு இதையெல்லாம் சிறு குழந்தையும் நம்பாது. பெரிய கொலைகளை செய்துவிட்டு இந்த மாதிரி பாவமன்னிப்பு கேட்டு விட்டால் சிறை தண்டனை கிடைக்காதா? அல்லது சிறையில் சொகுசாக வாழ வசதி செய்து கொடுக்க மாட்டார்களா? இனிமேல் பாதகம் செய்யமாட்டேன் என்று நீதிபதிமுன் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டால் சிறையில் இருந்துகொண்டே வெளியே வந்து பலபேர்களை தீர்த்துக் கட்டிவிட்டு அமுக்கமாக போய் சிறையில் மீண்டும் உட்கார்ந்து கொள்ள முடியாதா?
காலக்ஞானம் தீர்க்கதரிசன நூலில் போதுலூரி ஸ்ரீ வீரப்ரம்மேந்திர சுவாமி இவ்வாறு கூறினார், "கலி 5000 ஆண்டுகளுக்குப்பிறகு வைசியர் குலத்தில் காந்தி என்ற ஒரு சத்தியவான் வருவான், தேசத்தின் போக்கை நல்வழிப்படுத்துவான்."
அக்காலத்து தர்மநெறிக்கு அவர் பேச்சு எடுபட்டது. நாடு சுதந்திரம் பெற்ற ஓராண்டுக்குள்ளேயே அவரை அனுப்பி வைத்தோம். மஹாத்மாவின் போதனைகள் ஐம்பது ஆண்டுகளிலேயே பயனில்லாமல் போய்விட்டதும், கிண்டல் கேலிக்கு உட்படுவதும் நாம் கண்கூடாகக் காண்கிறோம். அதர்மம் மேலோங்கும் இக்காலத்துக்கு அவருடைய போதனைகள் சற்றும் ஏற்புடையதல்ல. இத்தனை ஆண்டுகள் தண்டனை அனுபவித்தாகி விட்டது இனியும் சிறையில் இருக்க வேண்டியது அவசியமில்லை. ஜனாதிபதியும் ஆளுநரும் கொலைக் கைதிகளை விடுவித்தே ஆகவேண்டும் என சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் இயற்றும் அளவில் இருக்கிறோம். அவரவர் மனதிற்கு சரி எனப்பட்டத்தை எல்லா கட்சியினரும் செய்கிறார்கள். நாம் வேடிக்கைப் பார்க்கிறோம்.
மஹாத்மாவை இனியும் நாம் கிண்டல் செய்வதும் பக்தி பூர்வமாக பாசாங்கு செய்வதும் கடவுளுக்கே அடுக்காது! நான் யதார்த்தமாக சொல்வது சரியா தவறா என்பதை அவரவர் மனம்தான் முடிவு செய்யவேண்டும். என்னடா இவன் இப்படிப் பேசுகிறான் என்று நினைக்க வேண்டாம். நான் மாணவனாக இருந்தபோது கல்லூரிகளுக்கிடையேயான 'Gandhian Studies' தலைப்பில் வைத்த தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவன். இன்றும் 'சத்திய சோதனை' புத்தகத்தை படித்துப் பாதுகாக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக