முகநூலில் இந்த ஓவியம் என் கண்ணில் பட்டது. அது பல விஷயங்களைப் போதித்தது. மழையில் வீட்டின் கூரை ஒழுகுகிறது. பெரிய கட்டில் ஒரு பக்கம் காலில்லாமல் செங்கற்கள் மீது நிற்கிறது. அதன்மீது ஒட்டுமொத்த குடும்பமும் ஆனந்தமாய்த் தூங்குகிறது. ஒவ்வொருவரின் முகத்திலும் நிறைவே இருக்கிறது. அசதியோ வேதனையோ கஷ்டமோ சற்றும் தெரியவில்லை. இருக்கும் ஒரு போர்வையே அனைவருக்கும் போதுமானதாக இருக்கிறது. பூனையும் நாயும் இவர்களுடன் படுத்துத் தூங்குகிறது. அதுபோக உள்ளே சேவலும் ஜன்னலில் குருவிகளும் அந்த அறைக்குள் இடம் பெற்றுள்ளன.
பார்த்த மாத்திரத்தில் இது சாதாரண படம் போல்தான் எண்ணத் தோன்றும். ஆனால் ஆழ்ந்து உற்றுப் பார்க்கப்பார்க்க அது உங்கள் ஆன்மாவுடன் பேசுவதைக் கவனிப்பீர்கள். மனம் பெரிதாக இருக்கும்போது, வசிக்கும் சிறிய இடமும் விசாலமாகவே தெரியும். அதற்கேற்ப வாழ்ந்திட மனப்பக்குவம் வந்துவிடும். ஆனால் குறுகிய மனத்துடன் வாழ்ந்தால் ஒய்யார அரண்மனையும் போதாது.
சிறுவயதில் நாங்கள் எல்லோரும் கோடையில் கிராமத்திற்குச் செல்லும்போது, எங்களைப் பரவசப்படுத்தியவை ஓட்டுவீடு, வயல், காவேரி, கோயில், புகைவண்டி ரயில். அதைத்தாண்டி வேறு எதுவும் இருந்ததில்லை. இரவு நேரம் அண்டை வீடுகளின் வாசல் திண்ணையில் பெரியவர்கள் பனையோலை விசிறியுடனும், குடிக்க ஒரு சொம்பு நீரையும் வைத்துக்கொண்டு அரட்டைக் கச்சேரி நடத்துவார்கள். கே.பி.எஸ் திரையரங்கில் இரவு நேர சினிமா காட்சி தொடங்கும் அடையாளமாக ‘பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா’ பாடல் ஒலிபெருக்கியில் கேட்கும்.
ஒரு பெரிய உருளியில் சோறு போட்டு, செக்கில் ஆட்டிய கடலெண்ணெய்யில் வதக்கிய சுங்கங்காய்/ சுண்டைக்காய் வத்தக்குழம்பு ஊற்றிப் பிசைந்து அதை அத்தைப்பாட்டி எங்களுக்குக் கதைகள் சொல்லியபடி உள்ளங்கையில் ஒவ்வொருவருக்கும் வைப்பாள். நாங்கள் பசியாறும்வரை உணவுச்சுற்று நீடிக்கும். வெய்யிலுக்கு மோர் சாதமும் உலர்ந்த உப்பு நாரத்தையும் ஈடிணையற்றது.
பெரிய ஊஞ்சலில் அகலமான பலகையின் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சங்கிலியைப் பிடித்துக்கொள்ள இடம்பிடித்து நங்கள் சந்தோஷமாய் ஆடுவோம். இரவு எட்டுமணி ரயில் வண்டி எழுப்பும் ஒலி கேட்டதும், தரையில் பாய்களை விரித்துபோட்டுப் படுத்திடுவோம். எல்லோருக்கும் போதுமான தலையணைகளும் போர்வைகளும் இருக்காது. பாட்டி தன்னுடைய பழைய புடவையை எடுத்து எங்களுக்குப் போர்த்திட, உத்தரத்தில் சுற்றும் மின்விசிறியைப் பார்த்தபடி அதன் ஓசையிலேயே உறங்கிப்போனோம்.
சிறுவயதில் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பருவத்தில், சூடு தகிக்கும் ஓட்டு வீட்டில் கொள்ளுப்பாட்டி, தாத்தா, பாட்டி, வந்துபோகும் அக்கம்பக்கத்து உறவுகள் என சொந்தங்கள் நிறைய இருந்ததால் அந்த வீடே எங்கள் உல்லாச விருப்பத்தலமானது. ஆனால் காலவோட்டத்தில் அவர்கள் மறைய, நம் சிறுவயது நினைவுகள் இப்போது வந்து போகும்போது, மனத்தில் ஏக்கமும் வெறுமையும் வருவது உண்மைதான். அத்தகைய ஒரு நினைவூட்டல் தாக்கத்தை இந்த ஓவியம் ஏற்படுத்தியது.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக