சித்தர் பாடல்களை நிதானமாய் வாசித்துப் பொருளறிந்தால், அதன் நுட்பத்தை அகத்தே (பிண்டத்தில்) யோக மார்க்கத்திலும், புறத்தே (அண்டத்தில்) பிரபஞ்சத்திலும் உணர முடியும். அநேகர் இதில் ஒன்றை மட்டுமே புரிந்து வைத்துக்கொண்டு, அப்பாடல் உரைப்பது இப்படியல்ல, அப்படியல்ல என்று தர்க்கத்தில் ஈடுபடுவார்கள். இறுதியில் சித்தரையே கிண்டல் செய்வதோடு, “சும்மா எதையோ பாடலில் அடித்து விட்டுள்ளார். அப்படி இல்லையென்றால் ஒருவேளை இது ஆரிய, ஓரிய சதியால் மாறியிருக்கும்” என்ற நிலைப்பாட்டைக் கொள்வார்கள். மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றால் அதை மெய்யா/பொய்யா எனக் கண்டுணர்ந்துத் தெளிய மனத்திட்பம் வேண்டும்.
நான் இந்த ஏழாண்டுகளில் சுமார் பத்து சித்த நூல்களை ஓரளவுக்குப் படித்து உள்வாங்கி இருப்பேன். முழுவதும் வாசித்துக் கிரகிக்க நம்மால் ஆகாது. அதுபோக சிறிதும் பெரிதுமாய் அவ்வப்போது ஆதாரத் தேவைக்காகச் சிலவற்றைப் படித்திருப்பேன். ஆனால் பெருநூலை முழுவதும் படிக்காமல் அதில் எனக்கு வேண்டிய பாடலை எப்படி எடுப்பது? அது சிரமமான வேலைதான்!
அதனால்தான் கண்கள் ஸ்கேன் செய்யும்போது எனக்கு என்ன தெரியவேண்டுமோ அப்பாடலை மட்டும் சித்தர்பிரான் காட்டுவார். அப்பாடலின் முன்/பின் பாடல்களையும் சேர்த்து வாசித்து அறிந்தாலே எனக்கு வேண்டிய தகவல் கிடைத்துவிடும். இல்லாவிட்டால் நான் எங்கே இத்துணை நூல்களை அலசிப்பார்த்துக் கரை ஏறுவது? எல்லா சித்த நூல்களையும் படித்து அதிலுள்ள எண்ணற்ற விஷயங்களை அறிய வேண்டுமானால் இப்பிறவியே போதாது. இதற்காக இன்னொரு பிறவியா எடுக்கமுடியும்? நான் என்றுமே ஈசனிடம் அதைக் கோரியதில்லை. நான் நிறை மதிஞராக இல்லாமல் போனாலும் கவலையில்லை, நாதன் தாள் பணிந்துப் பிறவாமல் இருக்கவே விரும்புகிறேன்.
ஒரு சித்தர் பாடலை முன்னும் பின்னும் படித்துப் பொருளறிந்தும், அதே சமயம் தனிப்பாடலாய் அதைப் படித்துப் பொருள் தேடவேண்டும். எடுத்த எடுப்பிலேயே, அதற்கு இதுதான் பொருள் என்று முடிவுக்கு வந்துவிட முடியாது. இங்கே உதாரணத்துக்கு ஒன்றைத் தருகிறேன்.
பரமகுரு காலாங்கி @ கமலமுனி @ கஞ்சமலை சித்தரைப் பற்றியது. “சோதி திகுதிகு நடமிடும் பெருமாளே” என்று அருணகிரியார் பாடியதுபோல், மூலத்திலிருந்து எழுந்த வாசிக்கால் ஓடித்திரிந்து, எண்ணிக்கையுடன் அஜபை நடனமாடி, மலைமேலே சங்கமித்துச் சுடரொளி ஜோதியாய் ஒளிப்பிழம்பாய் நிலைத்தால் அதுவே சித்-ஆகாசம் என்கிற சகஸ்ரார கடுவெளி. நம்முள்ளே ரசவாதம் சமைக்கும்போது ஒளிரும் மேருகிரியே கஞ்சமலை!
இங்கே மலைமேல் நடப்பதுதான் புறத்தே கயிலாய மேருவிலும் நடக்கிறது. அதிகாலை இருளில் மேருமலைச் சாரல் பழுக்கக் காய்ச்சிய தங்கமாய் ஒளிரும். வாசியில் அமர்ந்த சித்தரிஷிகள் யாவரும், ஒருங்கே பச்சிலைப்பூசி துருத்திக் கொண்டு ஊதும்போது ரசவாதம் நிகழ ஒரு சாமம்வரை அது ஜொலிக்கிறது. ஆகவே அண்டத்தில் பிண்டத்தில் நடப்பது என்னவோ ஒன்றுதான். வாசிக்கால் என்னும் துருத்தியால் தீர்க்கமாய் ஒருநிலைப்படுத்தி சுழுத்தீயில் சங்கமிக்கச் செய்தால் அதுவே கோடி சூரிய ஒளியுடன் பிரகாசிக்கும் மலை. இதை உங்களுக்காக எளிமைப்படுத்தினேன். யோகிகள் இதையே இன்னும் ஆழமாய் விளக்குவார்கள்.
பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழிக்கிணங்க, கஞ்சமலையரின் கால் பற்றி அத்தடத்தில் வந்தோரே அகோரர், மாளிகைத்தேவர், நாதாந்தர், பரமானந்தர் மற்றும் போகர். ஆக கஞ்சமலை என்பது நம் சிகரத்தில் இருப்பதுவா, சேலம் அருகே இருப்பதுவா என்று வாதித்துக் குழம்பக்கூடாது. அறம் பொருள் இன்பம் சங்கமித்தால் அதுவே நமக்கு வீடு தரும் ஜோதிமலை, சொர்ணமலை, பொன்மலை, கஞ்சமலை! ஸ்ரீ சித்தேஸ்வரர் அருள் புரியும் கஞ்சமலைக்கு நாமும் போய் தரிசிப்போம். கோயில் அலுவலக பேசி: 4272491389.
- எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக