About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 22 டிசம்பர், 2022

முக தரிசனம் தந்த சித்தர்!

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி, குன்னத்தூர் அய்யம்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ மஹாமாரியம்மன் கோயிலை ஒட்டியுள்ள வயல்கள் சூழ் கால்வாய் அருகேயுள்ள எங்கள் மூதாதையர் ஸ்ரீ மத்யார்ஜுனம் சுப்பாராவ் @ விபூதி சித்தரின் சமாதி பீடம் உள்ளது.

சமாதி பீடத்தில் பால் அபிஷேகம் செய்தபோது விபூதி சித்தர் தன் முகத்தைக் காட்டியுள்ளார். தரையிலிருந்து கீழே சமாதி குழிக்குள் எட்டிப் பார்த்தால் எப்படித் தெரியுமோ அவர் முகம் அப்படித் தெரிகிறது. அவர் சமாதி பிரவேசம் செய்த காலம் 1561 AD. அப்போது அவர்க்கு வயது 54.

ஜூலை 2022 ஆடி மாதம் குருபூர்ணிமா அன்று பீடம் ஸ்தாபிதம் ஆனது. அப்போது எடுத்த ஒரு காணொளியிலிருந்து இப்போதுதான் படம் பிடித்துப் பார்க்கிறேன். முதல் படத்தில் தலையில் தொங்கும் சடை, நீண்ட தாடி, காதில் ருத்ராட்ச குண்டலம், அகலமான நெற்றிக்கு மேலே தலையில் சூர்யசந்திர சிகை ஆபரணமும் தெரிகிறது. இப்போது 460 வருடங்கள் கடந்து போயுள்ளது. சமாதியில் அமர்ந்தது முதல் இன்றுவரை தன் இருவேறு காலகட்டத்தின் முகங்களை இதில் வெளிக்காட்டியுள்ளார். ஓம் நமசிவாய.🙏

அவர் பூசித்து வந்த ஸ்படிக லிங்கமானது தற்போது பங்காளிகள் வம்சத்தாரிடம் புதுவையில் உள்ளது.

-எஸ்.சந்திரசேகர்











ஞாயிறு, 18 டிசம்பர், 2022

மஞ்சள் கயிறு!

 மணமான பெண்களுக்கு மார்பகம் மற்றும் கருப்பையில் புற்றுநோய் வருவது இக்காலத்தில் அதிகரித்துவிட்டது. இராமாயணம் காலம் முதல் கடந்த நூற்றாண்டுவரை சுமங்கலிப்பெண்கள் அனைவரும் தாலி அணிந்து வந்துள்ளனர். மஞ்சள் கயிறு அணிவது என்பது நம் சம்பிரதாயம் என்றாலும் அது மருத்துவ ரீதியாக முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பதை இக்காலப் பெண்கள் அறிவதில்லை. 


திருமணத்தில் தாலிக்கயிறு கட்டுவதோடு சரி. அதன்பிறகு அடுத்த ஓராண்டுக்குள் அது கழட்டி வைக்கப்படுகிறது. தாலியில் தொங்கும் திருமாங்கலியத்தைச் சுமார் நான்கைந்து பவுன் எடையுள்ள தங்கச்சங்கிலியில் கோர்த்துப் போட்டுக்கொள்கின்றனர். தாலிக்கயிறு கழுத்தில் இருந்தால் “ஐயோ பாவம், பரம ஏழை போலிருக்கு” என்று நினைக்கும் காலமிது.

நான் அறிந்தவரை முன்பெல்லாம் தாலியைத் தொப்புள்வரை தொங்கவிடும் பழக்கம் இருந்தது. ஆனால் அது காலப்போக்கில் நீளம் குறைந்து முற்றிலும் காணாமலே போய்விட்டது.  மஞ்சள் தாலிக்கயிறு கட்டுவதே உபத்திரவம் என்றால் தாலம் பனையோலையைக் கட்டிகொண்ட அக்காலத்துப் பெண்களை என்ன சொல்வார்களோ? 

தாலிக்கயிற்றுக்கு வாரம் இருமுறையேனும் மஞ்சள் அரைத்துப்பூசியும், மேனிக்குத் தேய்த்துக் குளித்தும் வந்தனர். இது எதற்கு? மங்கலப் பொருள் மட்டுமல்ல, புற்றுநோய் மற்றும் சருமநோய் வராமல் தடுக்கத்தான். தடியான மஞ்சள் சரடு மார்பகங்கள் மேல் எப்போதும் உராய்ந்துகொண்டே இருப்பதால் புற்றுநோய் என்பது கேள்விப்படாத ஒன்றாகும். அதுபோக அக்காலத்தில் குறைந்தது ஐந்து முதல் எட்டு குழந்தைகள் பெற்றும், பால் கொடுக்கும் காலம் நீடித்திருந்ததாலும் புற்றுநோய் என்பது வரவேயில்லை. கருப்பையும் பிரச்சனைகளின்றி இருந்தது என்பது உண்மை. மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை ஆனபின் தாலிக்கயிறு மீண்டும் கழுத்தில் ஏற நீண்ட காலமாகும், கீமோ சிகிச்சையின் பின்விளைவால் தலைமுடி கொட்டி மொட்டையாகிறது. ஆக ஒரு கைம்பெண்ணாகவே தோற்றத்தை ஆக்கிவிடுகிறது.

நான் அறிந்த ஒரு வயதான பாட்டி அக்காலத்தில் பதினாறு வயதில் திருமணமாகிப் பன்னிரண்டு குழந்தைகள் பெற்றாள் என்றும், அதில் மூன்று குழந்தைகள் இறந்தன என்றும் கேள்விப்பட்டுள்ளேன். ஆக அந்தப் பாட்டி பன்னிரண்டு வருடங்கள் வயிற்றிலும், பன்னிரண்டு வருடங்கள் இடுப்பிலும் சுமந்தே சர்வீஸ் போட்டுவிட்டாள்’ என்று கிண்டல் அடிப்பேன். நான் பார்த்துள்ள அக்கிழவி மூப்பு காரணமாக இறந்தாளே தவிர பெரிய வியாதி எதுவுமில்லை.   

ஆனால் இக்காலத்தில் பிரத்யேகமாகக் கயிறு இல்லாததால் திருடனுக்குச் சங்கிலியுடன் திருமாங்கலியமும் போனஸ் வேட்டையாக அமைந்துவிடுவது அவனுடைய அதிர்ஷ்டம். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் அவ்வீட்டுப்பெண் கணவனுடன் வெளிநாட்டுக்குப் போகவேண்டி இருப்பதால் தன் மாமியாரின் அனுமதியுடன் கல்யாணமான சில மாதங்களிலேயே நாகரிகம் கருதி தாலியைக் கழட்டி குங்குமத்தையும் எடுத்துவிட்டாள். சந்தோஷம்!  அவள் காலில் மெட்டியாவது இருந்ததாவொனப் பார்க்கத் தவறிவிட்டேன்.

அப்படிப்பார்த்தால் மஞ்சள் தாலிக்கயிறு அணியும் பழக்கமில்லாத மற்ற மதத்தினர்களுக்கு வரணுமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆம் உண்மைதான்! அவர்களுக்கும் வருகிறது. மருத்துவ பரிசோதனையில் அவர்களுக்கும் invasive carcinoma பரவலாக உள்ளது தெரிகிறது. கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு உலகெங்கும் நோய் தாக்கம் என்பது அதிகரித்துள்ளது கண்கூடு. 



மஞ்சள் பூசிய கயிற்றையும் தாண்டி எப்படியோ மரபணு வழியாகவும், ஹார்மோன் சமநிலை இல்லாமையாலும் புற்றுநோய் தாக்கம் வந்தால் அது கர்மா/ விதி என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அகத்தியர் கன்மகாண்டம் நூலில் இதைப்பற்றி விவரிக்கும்போது “வாரணமாய் நடத்துவித்த கன்மத்தாலே வந்ததடா கைக்கடங்கா நோய்களெல்லாம் மனிதர்க்காமே” என்கிறார்.

-எஸ்.சந்திரசேகர்

வெள்ளி, 9 டிசம்பர், 2022

நீர் உயர நெல் உயரும்!

குலோத்துங்க சோழனின் முடிசூட்டும் நாளன்று அவனை ஔவை பிராட்டி வாழ்த்திப் பாடினாள். அப்பாடலை நாம் சிறுவயதிலேயே படித்துள்ளோம். 

"வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்"

வரப்பு உயர்ந்தால் நீர் உயரும். நீர் உயரத் தேங்கினால் நெல் உற்பத்தி எப்படி உயரும்? பயிர்கள் நீரில் நின்று அழுகிப் போய்விடுமே என்று பலர் நினைக்கலாம். வரப்பு என்பதை ஏரி/ குளம்/ வயல் கரைகள் என விளங்கும். நீர் தேக்கங்களில் நீர் மட்டம் உயர்ந்தால் விவசாய பாசனம் சிறப்புறப் பயிர் சாகுபடியும் உயரும் என்பது பொருளாம்.

அக்காலத்தில் வரப்பில் நீர் மட்டம் உயரவுயர நெற்பயிர்கள் மூழ்காமல் உயர வளரும் தன்மையைக் கொண்டிருந்தன. புயலைத் தாங்கியும் மணிகள் கொத்துக்கொத்தாய்த் தலை வணங்கி நிற்கச் சாகுபடியும் உயர்வாய் இருந்தது. பஞ்சம் பட்டினி இல்லாமல் குடிகளும் உயர்வாக வாழ்ந்தனர்.

காட்டுயானம், கருங்குறுவை, தூயமல்லி, தேங்காய்ப்பூ சம்பா ஆகியவை பாரம்பரிய நெல் ரகங்கள். நாம் கேள்விப்படாத பல ரகங்களின் நெல் விதைகளை ஆங்காங்கே விநியோகம் செய்யும் மையங்கள் இன்று உள்ளன. காலஞ்சென்ற நெல் ஜெயராமனே சுமார் 170 வகை நெல் ரகங்களை மீட்டெடுத்தார்.

இக்காலத்தில் பயிரிடும் குட்டை ரக நெற்பயிர் பற்றி ஔவை தன் பாடலில் சொல்லவில்லை. அன்று மாதம் மும்மாரி பொழிந்தது, வருடம் முப்போகம் நடந்தது. ஆனால் இன்று அறுவடை என்றால் தை மாதம் மட்டும்தான் என்று நினைக்கும் அளவில் ஒரு போகமாகி விட்டது. இன்று வரப்பில் ஒரு பருவ மழைக்கே அதிக நீர் தங்கினால் பயிர் அழுகிப்போகும் நிலை இருப்பதுபோல் அன்று எதுவுமில்லை. யானையை மறைக்கும் அளவில் எட்டடி பத்தடி வரை உயரம் வளரும் ரகங்களாகும். பாடல் மூலம் ஔவை நமக்கு விவசாயப் பாடம் நடத்திவிட்டாள்! 👍


-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

கற்பகம்!

கண்டேனே தசநாதம் கேட்கக்கண்டேனே

கண்ணாக லலாடம் திறக்கக் கண்டேனே

விண்டேனே பரமன் ஆட்டம் விண்டேனே

விளையாட்டை வாய் பிளக்க விண்டேனே

உண்டேனே கபால அமுதமே உண்டேனே

உள்நாவால் பாலும் சிந்தவே உண்டேனே

கொண்டேனே சக்தி ஏற்றிக்கொண்டேனே

காயமும் கல்லாய் ஆக்கிக்கொண்டேனே!

-எஸ்.சந்திரசேகர்



ஓம் நமசிவாய 🌿

குடையாட குழலாட சாமரம் அசைந்தாட

குவித்த பல விழிகளும் கரங்களுமாட

விடையாட மதியாட மனமகிழ் உமையாட

வாதித்த சித்தர்களும் தவரிஷிகளுமாட

சடையாட புவியாட ஈரேழு புவனமுமாட

சேவித்த உன் அடியார்கள் வினையுமோட

நடையாட நயமாக ஓதும் நான்மறையாட

நாதாந்த பரவெளியில் நான் ஆடினேனே!


-எஸ்.சந்திரசேகர்



சனி, 26 நவம்பர், 2022

சிவப்பேறு!

சித்தர் பாடல்களை ஆழம் வாசிக்கச்

    சித்தம் தெளிந்திட உயர்த்தும் பாரு

அத்தர் பூசியும் மணக்காத மனமதில்

    அத்தன் சூட்சுமம் காட்டுவார் பாரு

பத்தர் போகர் எனையாளும் குருநாதர்

    பித்தம் தீர்த்துப்புடம் போடுவார் பாரு

புத்தர் ராமர் கிருஷ்ணர் வடிவத்தில்

    புதுயுகம் தோறும் தோன்றுவார் பாரு


கூத்தர் நடமிடும் தில்லை அம்பலத்தில்

    கனிவாய்த் திருமூலரின் சமாதி பாரு

பித்தர் பிறைசூடிய பெம்மான் மனங்கவர்

    பதியில் அமர்ந்த சிவகாமியைப் பாரு

முத்தர் முப்பத்தாறை ஏறி நிலைத்தோர்

    மாயை வினையறுத்துப் போவார் பாரு

நித்தர் யோகஞான வித்தையைப் பற்றி

    நித்திய சதாசிவத்தில் கலப்பார் பாரு!

-எஸ்.சந்திரசேகர்



"சித்தரின் பாதத்தில்..."

அது 2012. 'அதிசய சித்தர் போகர்' மற்றும் 'போகர் 7000: சப்தகாண்டம் ஒரு பார்வை' ஆகிய நூல்களை எழுதி முடித்த சமயம். பதிப்பாளர்களிடம் கையெழுத்துப் பிரதியைக் கொடுக்கும் முன் அகத்தியர் கோயிலுக்குச் சென்றேன். அங்கு அவர் பாதத்தில் அதை வைத்துக்கொடுக்கச் சொன்னேன். அர்ச்சகர் தீபாராதனை காட்டும்போது அகத்தியரின் சிரசின் மீதிருந்த ஒரு பெரிய ரோஜாப்பூ கீழே பிரதியின் மீது விழுந்தது பெரும்பேறு. 

குரு போகர் தான் இயற்றிய நூலை எப்படி அகத்தியரிடம் தந்து அனுமதி பெற்றாரோ அதுபோலவே என்னுடைய படைப்புக்கும் அமைந்தது என் பாக்கியம்.

முகநூல் நண்பரும் என் அத்யந்த அன்பு வாசகருமான ஆயுதப்படைப் பிரிவு காவலர் திரு.லோகநாதன் அவர்கள் அண்மையில் பொதிகை அகத்தியர் கூடம் சென்று வந்தார். அங்கே கும்பமுனி அகத்தியரின் பாதத்தில் என் புத்தகத்தை வைத்து வணங்கியுள்ளார். இவர் மூலம் மீண்டும் சித்தரின் மகத்துவமான கருணைக்குப் பாத்திரமானேன். எல்லாம் சிவசித்தம்! 🕉️

நன்றி லோகு! 🙏 வாழ்க வளமுடன்.


-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 20 நவம்பர், 2022

பேசாமல் பேசும் சித்திரம்!!

சுவரில் வரைந்திருந்த இப்படியொரு ஓவியத்தை நண்பரின் முகநூல் பக்கத்தில் பார்த்தேன். அது நிறைய விஷயங்களைச் சொல்கிறது.

குரு போகர் பழனியில் நவபாஷாண முருகனைத் தண்டபாணியாக வடித்து நிறுவுகிறார். அதன் சிரசில் குடுமியின் சுவடை ஆழப்பதித்து நீவுகிறார். சிகையானது செவ்வாயுடன் பரவெளித்தொடர்பைப் பெற அவர் தன் நடுவிரலால் ஆகாய முத்திரையைக் காட்டி உணர்த்துகிறார். அவரைச் சுற்றி கீழே புலிப்பாணி சித்தர்கள் கைகூப்பியும் கைகளில் மருந்துக்கலவையை ஏந்தியும் நிற்கிறார்கள். தம் நாயகனை எவ்விதம் போகர் வடிக்கிறார் என்பதை வள்ளியும் தெய்வானையும் ஆச்சரியத்தடன் எட்ட நின்று பார்க்கின்றனர். சிலை வார்ப்பு முடிந்ததும் நவபாஷாண விக்ரகத்திற்குப் போகர் உயிரூட்டும்போது முருகனின் வாசிக்கலைளாக இருவரும் அவனுள் இயங்க ஆயத்தமாக உள்ளனர். 

தலையில் குடுமியும், முப்புரி நூலணிந்த மார்பும், அரையில் கோவணத்துடனும், கையில் நெடிய தண்டத்துடனும் ஒரு பிரம்மச்சாரியாகக் காட்சியளிக்கிறான். கையில் தண்டத்தைப் பிடித்திருக்கும் விரல்கள்கூட சின்முத்திரையைக் காட்டும் விதமாகவும் உள்ளது. மிக எளிமையாய் வாழ்ந்து, ஆணவம் கர்வம் ஆசை என்கிற தீய எண்ணங்களை விடுத்து வாழ்ந்திடு என்பதே இவ்விக்ரஹ தோற்றம் நமக்கு விடுக்கும் செய்தி. அப்படி வாழ்ந்து வந்தால் மெய்ஞானம் தானே வந்திடும்.

இச்சிலைக்கு முறையான பூஜா விதிகளை நம் போகர் விரிவாகப் புலிப்பாணிக்கு எடுத்து இயம்புகிறார். பிறகு அதுவே புலிப்பாணி பூஜாவிதி 50, ஷண்முக பூஜை 30 என்ற நூல்களாக வந்தன.

-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

ஆட்டுக்கிடா வாகனம்!

கோவை, சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் அருள்மிகு தண்டபாணிக் கடவுள் திருக்கோயிலில் கந்தசஷ்டிப் பெருவிழா இன்று நடந்தது. மடாலயம் பதிவேற்றிய காணொளியைத் தற்சமயம் முகநூலில் பார்க்க நேர்ந்தது. 

உந்துதல் வர ஒரு படம் பிடித்தேன். அது மானோ என நினைக்கத் தோன்றியது. அதை உற்றுப்பார்த்தால் அது மானல்ல, உட்புறம் வளைந்த கொம்புகளுடன் உள்ள முருகனின் வாகனமான ஆட்டுக்கிடா என்பது தெரிந்தது. உங்களுக்குத் தெரிகிறதா?

இது ஆட்டுக்கிடாதான் என்கிறது கந்தர் கலி வெண்பா பாடல்.

"நெருப்பில் உதித்து அங்கண் புவனம் அழித்துலவும்

செங்கட் சிடா அதனை சென்று சென்று கொணர்ந்து

அதன் மீது இவர்ந்து எண்திக்கும் விளையாடும் நாதா!’’

அதாவது, வேள்விக் குண்டத்திலிருந்து  அஞ்சத்தக்கப் பெரிய ஆடு ஒன்று உலகையே அழிக்க உலவுவதுபோல் தோன்றியது. வீரபாகுதேவர் விரைந்து சென்று அந்தச் செங்கண் செம்மறிக்கடாவை அடக்கி இழுத்துக்கொண்டு வந்து முருகனிடன் ஒப்படைக்கிறார். முருகப் பெருமான் அதன்மீது ஏறி அமர்ந்து, அதை எட்டுத் திக்கிலும் செலுத்தி விளையாடினார். இதுவே அப்பாடலின் பொருள். நாமும் கண்டு தரிசித்தோம்.

ஓம் சரவணபவ 🕉️ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏

-எஸ்.சந்திரசேகர்




அசைந்தாடும் ஊஞ்சலில் மனம்!

ஆன்மிக முகநூல் பக்கத்தில் என்னுடைய கருத்துரைக்கு முன்பாக ஒரு அம்மையாரின் பதில் இருந்தது. அவருடைய பெயர் பரிச்சயமாய்த் தெரிந்ததால் அவருடைய ப்ரோஃபைல் பக்கத்தைச் சென்று பார்வையிட்டேன். என்ன ஆச்சரியம்! அவர் எனக்கு 10ஆம் வகுப்பு ஆசிரியை.

உடனே அவருக்கு, “மேடம், நான் படித்த பள்ளியில் நீங்கள்தான் எங்களுக்கு கிளாஸ் டீச்சர். உங்கள் கணவர் திரு.ராஜேந்திரபிரசாத் ஒரு மனநல மருத்துவர் என்று நீங்கள் ஒருமுறை சொன்னது நினைவுள்ளது. வேளச்சேரி விஜயநகரில் வசித்தீர்கள். பத்தாம் வகுப்பு தொடக்கம்வரை எங்களுக்குப் பாடம் நடத்திய திரு.மாணிக்கம் அச்சமயம் திருச்சி நேஷனல் காலேஜுக்கு வேலை கிடைத்துப் போனதால் நீங்கள் வந்தீர்கள். மெட்ரிகுலேஷன் வகுப்பிற்கு ஆங்கிலம் துணைப்பாடம் ‘டிரெஷர் ஐலன்ட்’ இருந்தது. உள்ளூர் திரையரங்கில் அப்பழைய படம் ஓடிக்கொண்டிருந்ததை அறிந்து மொத்த வகுப்பையும் உங்கள் செலவில் படம் பார்க்க அழைத்துச் சென்றது நினைவிருக்கிறதா? உங்களை இங்கே கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ இறையருள் புரியட்டும்” என்று பதிவிட்டேன்.

அதைப் பார்த்துவிட்டு அவர், “ஆமாம்ம்ம்... நன்றாக நினைவுள்ளது. இதைவிட எனக்குப் பெருமையான தருணம் இருக்க முடியுமா?  மிக நீண்ட... பல வருடங்கள் கழித்து என்னை என் பழைய மாணவர் நினைவு வைத்துக்கொண்டு பேசியுள்ளது மட்டற்ற மகிழ்ச்சி... ஆனந்தம்! ஃபிரென்ட் ரிக்வெஸ்ட் தருகிறேன் எற்றுக்கொள்ளவும்” என்று திருமதி ரமணி பிரசாத் போட்டிருந்தார். 

காலம்தான் எத்தனை வேகமாய்க் கடந்து போய்விட்டது! நம் உடல் மூப்படைந்து போனாலும் மனம் மட்டும் என்றுமே இளமைக்காலத்து நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை. தற்போது கோவை அருகே பாலக்காட்டில் கணவருடன் வசிக்கும் அவருக்கு வயது 74.

-எஸ்.சந்திரசேகர்