About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 23 செப்டம்பர், 2017

இன்னும் வேகவில்லை!

இறையருள், சித்தர்கள் அருள் பெற்றவர்களிடம் ஒரு விதமான பொறாமை குணம் நிலவுகிறதே. அது ஏன்? என்று ஒரு நண்பர் கேட்டார்.

அது சமூகச் சூழல் கருதியோ, தன் ஆழமான வெளிப்பாtடினாலோ அப்படி இருக்க வாய்ப்புண்டு என்று சொன்னேன். அருள் பெற்றவர்கள் என்றாலே அவர்களிடம் உயர்ந்த பண்புதானே குடிகொள்ள வேண்டும், பின் ஏனிந்த வஞ்சம், அசூயை, பொறாமை, கோபம்? நானும் இதை சிலரிடம்  கவனித்துள்ளேன்.

தன்னை யாரேனும் ஓரங்கட்டிவிடுவார்களோ, புகழ் போய்விடுமோ, இருட்டடிப்பு செய்து விடுவார்களோ, நமக்கு போட்டியாக வந்திடுவாங்களோ, என்ற அச்சம் குடிகொண்டு விடுவதே காரணம். இந்த நினைப்பே சிரிப்பாக உள்ளது.. அவர்களிடம் இந்த குணம் இருக்கக் கூடாதே.. அல்லவா?

ஆனால் நான் பார்த்தவரை, பலரிடம் இந்த ஆபத்தான குணம் உள்ளது. 'உன்னைவிட நான் அனைத்தும் அறிவேன், நானே கடவுளின் அஜென்ட், என்னிடம் என்ன தவறு கண்டாய்,  குறைகூற உனக்கு என்ன விஷயம் தெரியும்?' இப்படியான மனோபாவமே உள்ளது.

இப்படி இருந்தா அவருக்கு அருள் இருந்து என்ன பிரயோஜனம்? தன்னுணர்ச்சி எப்போதுமே தலைதூக்கிக்கொண்டு இருந்தால் ஆபத்துதான். 'அவர் சித்து வேலை செய்பவர், நான் அப்படி இல்லை. நான் அழைத்தால் அந்த இறைவன் வருவார்' என்ற ரீதியில் பேசிய ஒருவரை பார்த்ததும், எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. பகவான் ரமணரை பொறுத்தவரை 'நான்' என்பது முக்கியமான சொல். அதுதான் தேடலைத் தரும். அந்த நான் என்பதை உணராதவரை அது ஆணவமா, கோவணமா என்று அறியாமலே இருக்கும் மனிதர்களே அதிகம்.

என் பார்வையில் எல்லோருமே சதாசிவ ரூபம்தான். 'நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை' போல, ஒருவருக்கு கிட்டிய இறை தரிசனமும் அருளும்,  மற்றவர்களுக்கும் கிடைக்கும் வகையில் சிந்தித்து செயல்பட்டாலே போதுமானது. எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் புலபட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதற்கு அவசியமுமில்லை. கற்றது விரல் நுனி அளவுதான் அதற்கே இந்த அமர்க்களம். இன்னும் கைமண் அளவு கற்றால் என்ன ஆகுமோ? அந்த ஔவையாரே என் மாணவிதான் என்று சொல்லும் காலமாகிவிடும்.

இறையருள் என்பது ஓடும் நதி. எல்லோருக்கும் பொது. அதிலிருந்து நீங்களும் முகந்து எடுக்கலாம், உங்களிடம் அதுவாகவும் கசிந்து வரலாம். இதில் உரிமை கொண்டாட என்ன இருக்கு? நதியின் தண்ணீர் தடையின்றி கிடைக்கிறதா என்பதே முக்கியம். குயவன் பூரணமாக வடிவம் தந்தும்கூட சரியாக சுடப்படாத மண்பானைகள் ஏராளம் உண்டு!

No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக