நாஸ்திகவாதி: 'கடவுளைக் காணமுடியாது. அதை எவராலும் நிரூபிக்க முடியாது. நீங்கெல்லாம் எதற்கு கோயிலுக்குப் போகிறீங்கனு தெரியலை'
ஆஸ்திகவாதி: 'கடவுள் இருக்காருன்னு நம்புறேன். கோயிலுக்குப் போறேன். வேணும்னா நீயும் நம்பு'
நாஸ்திகவாதி: 'இல்லாத ஒன்றை எப்படி நம்புவேன். பகுத்தறிவோட பேசு. ஆதாரம் காட்டு'
ஆஸ்திகவாதி: 'நீ மட்டும் கடவுளை நம்பலைன்னு எனக்கு எப்படி தெரியும்? மனசுக்குள்ளேயே ஜெபம் பண்ணலாம், மந்திரம் உரு ஏத்தலாம். கடவுள்னு ஒன்று உன் சிந்தையிலே இல்லைன்னு நிரூபி. கற்பூரம் ஏத்தி சத்தியம் செய்'
நாஸ்திகவாதி: 'இல்லைனு சொன்னா நம்பணும். நான் நம்பலை நீயும் நம்பாதே'
ஆஸ்திகவாதி: 'இருக்குனு சொன்னா நம்பணும். நான் நம்புறேன்.. வேணும்னா நீயும் நம்பிக்கோ.'
ஆக, இருவருக்குமே அரூபம் பொதுவாக உள்ளது. அரூபனான இறைவனை ரூபமாக காட்டு என்று அவர்களும், அவன் எங்கும் எந்த ரூபத்திலும் உள்ளான் என்கிற இவர்களும், ஒருவருக்கொருவர் விளக்கிக்கொண்டு இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கருமை இருந்தால்தான் வெண்மை தெரியும். அதனால் (பகுத்தறிவு) நாஸ்திகவாதிகள் இருக்கட்டும்.
பக்தி என்பது ஆன்மாவை சார்ந்த செயல், அறிவைச் சாராது. ராஜராஜசோழன் ஆடம்பரமாகக் கட்டிய பிரகதீஸ்வரமும் உண்டு, பூசலநாயனார் மனதிலே எளிமையாகக் கட்டிய ஹ்ருதயாலீஸ்வரமும் உண்டு. அவன் எங்கும் இருப்பான்.
அடுத்தவரை தெரியாமல் மிதித்தால் கன்னத்தில் போட்டுக்கொண்டு, மன்னிப்பு கேட்கிறோம். எதற்கு? அவருள்ளும் சதாசிவம் இருக்கிறார் என்பதால்! கோபம் வெறி வந்து அவரை அடிக்கும்போது இது புலப்படுவதில்லை.
வாசி கற்று, சக்கரங்கள் திறந்து, சுழுமுனை தொட்டு பரமஜோதி காணும்வரை கோயிலுக்குச் செல்வதும், இறைவழிபாடு செய்வதும் தேவையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக