About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

ஆசிகள் தரும் தென்புலத்தார்

ஆவணி, புரட்டாசியில் வரும் கிருஷ்ண பட்சத்திற்கு 'மஹாளய பட்சம்' என்று பெயர். மஹாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். இது ஒரு பட்சம் (பதினைந்து நாள்) அனுஷ்டிக்கபடுகிறது. மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் அவரவர் இல்லத்தில் கூடி ஆசி வழங்கும் நேரமே மஹாளயம். (Sep 6- 19).
அவர்கள் பிறப்பெடுத்திருந்தால் இங்கே எப்படி வருவார்கள்? ஆன்மா வருகிறது என்பது ஐதீகம். அவரவர் திதியில் நீங்கள் படைக்கும் உணவு, எங்கோ பிறப்பெடுத்திருக்கும் அந்த ஆன்மாவுக்கு எந்த ரூபத்திலாவது போய் சேரும். இதை ஹிரன்யரூபம் என்பார்கள். மூன்று தலைமுறையை ஒரு வம்ச சுற்று என்கிறார்கள். ஒரு தலைமுறை சுமார் 33 வருடங்கள். ஆடி அமாவாசையில் தர்ப்பணம் செய்யாமல் விட்டவர்கள் இந்த 15 நாளில் அவரவர் திதியில் செய்வது உத்தமம் என்கிறது சாஸ்திரம்.
எனக்கும் உங்களுக்கும் நம் பூர்வ ஜென்மங்களில் பிறந்த குடும்பத்தில் இடும் உணவானது இங்கே சரியான நேரத்தில் நமக்கு பசிக்கும் போதோ, தாகம் எடுக்கும் போதோ இலவசமாகக் கிட்டும். அதெப்படி கிட்டும்? என்று பகுத்தறிவு பேசக்கூடாது.
டீ/காபி/ஜூஸ் /நொறுக்ஸ்/சாப்பாடு என்று ஏதேனும் உண்டபின் நண்பர் பிடிவாதமாக பில் கட்டியிருப்பார். அல்லது கோயிலில் பிரசாதம் நமக்கு கைமேல் கிடைக்கும். அல்லது கடைகாரர் குறைந்த விலையில் நிறைய பழங்களையோ, உணவு பொருளையோ கொடுக்கலாம்.இப்படி ஏதோ அங்கு கூரியர் அனுப்பியது இங்கு நம்மிடம் டெலிவரி ஆனது. இப்படித்தான் அவை நம்மை வந்து சேருகிறது... நீங்கள் தருவது அவர்களைப் போய் அடைகிறது. நாமே சென்று காசு கொடுத்து வாங்கிய உணவுக்கு ஓட்டல்காரரை வாழ்த்துவோமா என்ன? தக்க நேரத்தில் தவித்த வாய்க்கு நீரும் உணவும் வந்து சேரும் போதுதான் நமக்குக் கொடுத்தவரை மனதார வாழ்த்துகிறோம். இதுவே தாற்பரியம். இந்த வாழ்த்து நமக்கு கொடுத்தவரையும், எங்கோ அனுப்பியவரையும் சென்று சேரும்.
ஈசனை, 'தென்னாடுடையவன்' என்கிறார்கள். அதாவது தென்னாடுதான் நம் மூதாதையர் பூமி (குமரிகண்டம்). அதனால்தான் தென்திசையில் வாழ்ந்து இறந்த மூதாதையர்களை 'தென்புலத்தார்' என்கிறார்கள்.
சித்தர் திருவள்ளுவர் இதற்கு முக்கியத்துவம் தந்து,
'தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை' என்று (குறள்.43) சொல்லியுள்ளார்.
இதன் பொருள்: - தென்புலத்தார், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான், என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய விருந்தோம்பலை தவறாமல் செய்வது சிறப்பு. ஆக, நம்முள்ளும் அவர்கள் மரபணுவாக, பாவ புண்ணியமாக வசிக்கிறார்கள் என்பது புரிகிறது அல்லவா?
அதுபோல் இல்லம்தேடி வந்தவர் யார் என்றும் நமக்குத் தெரியாது. அதனால்தான் 'அதிதி தேவோ பவ' என்றனர். அவருக்கு உபசரித்து விருந்தோம்பல் செய்யவேண்டும் என்றனர். இந்த நோக்கில்தான் 'ஐயமிட்டு உண்' என்று ஔவையார் சொன்னார். அதாவது, வீடுதேடி வந்தவருக்கு உணவளித்துவிட்டு பிறகு நீ உண் என்றார். 'Show hospitality to strangers, for they are angels in disguise' என்கிறது பைபிள்.
மேலை நாட்டினர் மூதாதையர்களை நினைவு படுத்தும் தினமாக Thanksgiving Day (அ) Day of the Dead (அ) All Souls' Day என்று பல பெயர்களில் கொண்டாடுவார்கள்.
Image may contain: one or more people and food

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக