ராஜராஜ சோழனின் பல்வேறு செயல்பாட்டிற்கு உறுதுணையாய் இருந்தது நாராக்கன் மாராயன் ஜனநாதன் (எ) ராஜேந்திர சோழ பிரம்மராயன். மன்னனின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் இருந்தவர். இவர் ஒலைநாயகன்/ முக்கிய மந்திரி/ கர்மாதிகாரி என்று பதவிகளை வகித்தவர். தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கோபுரம் இவருடைய ஆணையின் கீழ் கட்டப்பட்டது. மன்னனின் கட்டளைகளையும் யோசனைகளையும் செயல் வடிவமாகப் பரிமளிக்கச் செய்தவர். விக்ஞாபதியாக எல்லா சாசனத்திலும் கட்டளைகளிலும் கீழே இவர் பெயரும் உண்டு.
வெண்ணாடு கோட்டம் கேரளாந்தக சதுர்வேதி மங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமன் கிருஷ்ணன் என்பவரின் மகனே இந்த பிரம்மராயன். பிரம்மதேயத்தில் வேதியர்களை குடிவைத்ததோடு அவர்களுடைய பணியை தன் அரசாங்க அலுவல்களிலும் பயன்படுத்திக் கொண்டான் ராஜராஜன். எது செய்தாலும் பிரம்மராயனையே கேட்டுச் செய்யும் பழக்கம் பெற்றிருந்ததால், இவர் சொல்லே மன்னனின் வேதவாக்கு என்ற அளவில் அவர் செல்வாக்குடன் இருந்தார். அதனால் மன்னன் இவருக்கு 'மும்முடி சோழ பிரம்மராயன்' என்ற சிறப்புப் பட்டத்தையும் தந்தான். இவர் பிற்பாடு ராஜேந்திர சோழனின் ஆட்சியிலும் பணி புரிந்தார்.
திருவாலங்காடு (திருவள்ளூர்), ஈசாலம் (விழுப்புரம்), கரந்தை (திருவண்ணாமலை) ஆகிய ஊர்களில் கொடுக்கப்பட்ட மானியங்கள் எல்லாமே பிரம்மராயனின் ஆணைப்படி நடந்தவையே. இவர் ஏறக்குறைய 17 ஆண்டுகள் பணி செய்தார். சோழன் காலத்தில் கட்டிய அனைத்து கஜபிருஷ்ட வடிவ விமானங்கள் கொண்ட சிவன் கோயில்களுக்கும் நித்திய பூசைகள் செய்ய இங்கிருந்துதான் வேதியர்களை அனுப்பினான்.
அவர் காலத்தில் ஈசானசிவ பண்டிதர் என்பவர் ராஜகுருவாக நியமிக்கப்பட்டார். 'உடையார் ராஜராஜதேவர் குருக்கள் ஈசானசிவ பண்டிதர்' என்றுதான் செப்பேடுகளிலும் கல்வெட்டிலும் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் இவர்களுக்கு கொடுத்த நெல் தானியங்களை 'ஆச்சார்ய போகம்' என்று கணக்கில் வைத்தான். ஆண்டுக்கு 2000 கலம் நெல் என்று ராஜகுரு குடும்பத்திற்கு அளித்தான். பிற்பாடு வெவ்வேறு ராஜகுருக்கள் வந்து போயினர். பிற்பாடு சர்வசிவ பண்டிதர் நியமிக்கபட்டார். இந்த ராஜராஜ சதுர்வேதிமங்கலம் என்பது விழுப்புரம்-திண்டிவனம்-செஞ்சி என முக்கோணமாக இணைத்து அமைத்தான் என்கிறது.கல்வெட்டுகள்.
வியவஸ்தை / பரிகாரம் என்று செப்பேடுகள் இருவகையாகப் பிரிக்கப்பட்டது. ஆணைகள், தடைகள் எல்லாம் முன்னதும்; வரி விலக்கு மானியம் எல்லாமே இரண்டாம் ரகத்திலும் வடிக்கப்பட்டது என்று திரு.நாகசாமி தெரிவித்தார்.
அதுபோக சம்ஸ்கிருத செப்பேடும் உள்ளது, 'ராஜத் ராஜன்ய மகுட ஸ்ரேனி ரத்னேசு சாசனம், இதத் ராஜேந்திர சோழஸ்ய பரகேசரி வர்மனஹ' என்று ஈசாலம் பட்டயத்தில் உள்ளது.
ராஜராஜ சோழனைப் பற்றி எல்லாமே இதுவரை உயர்வாய்தான் பேசிவந்துள்ளோம். அல்லவா? ஆனால் அவனுடைய ஆட்சியிலும் மகன் ராஜேந்திரனின் காலத்திலும் நிறைய வேண்டத் தகாத நிகழ்வுகளும் இருந்தன என்பது கருப்பு பக்கங்களாக உள்ளது. நான் படித்தவரை அப்படித்தான் எனக்குப் பட்டது.
என்னதான் ஆலோசனைகள் கூற அமைச்சர்கள், ராஜகுரு இருந்தாலும் இறுதியான முடிவை இவனேதான் எடுத்தான். அப்படிப் பார்க்கும்போது கல்வி முறை, சமூகக் கட்டமைப்பு, பெண்களுக்கு கட்டுப்பாடு, வர்ணாஸ்ரம கெடுபிடிகள், பணியாளர்களுக்கு ஒடுக்குமுறை என்பவையும் இருந்துள்ளது.. பல சிவாலயங்கள் கட்டுவித்தாலும், திருமுறைகள் தொகுத்து வெளியிட்டாலும், வடக்கிலும் தூர கிழக்கிலும் பல தேசங்களை வலியப்போய் படையெடுத்து கைப்பற்றுவதை அவன் நிறுத்தவில்லை. இவன் கடாரம் வரையும், இவன் மகன் கங்கை தாண்டி இமயம்வரை சென்று வந்து என்ன பயன் ஏற்பட்டது என்று தெரியவில்லை. பௌத்தம் /சமணம் எதிர்க்க மட்டும் சைவ சமயமும் திருமுறை பாடல்களும் பயன்பட்டதா? எப்போதுமே தேசாந்திரத்திலேயே இருந்ததால் சோழன் சார்பில் எல்லாவற்றையும் பிரம்மராயனே முடிவு செய்ய முடியாது. பட்டத்தரசியும் இளவரசனும் பெரிய அளவுக்கு நிர்வாகத்தில் பங்களிப்பும் செய்ய முடியாது. இதுபோன்ற குறைபாடுகள் பகிரங்கமாக இருந்தது என்பது ஆச்சரியத்தைத் தரும்! அதைப்பற்றி இன்னொரு பதிவில் உரையாடுவோம்.