இராமனுக்குப் பிறகு மகன்கள் அரசாட்சி செய்தனர். மகன் குசா அரசாட்சி செய்த காலத்தில் நம் தேசத்தை ஒட்டியபடி இருந்தவொரு மஹா துவீபத்தை இரு பிரிவாக பிரித்து ஆண்டான். அவை, சிவதான் மற்றும் குஷ் த்வீப். துவாபர யுகத்தில் இருந்த இவ்விரண்டும் இன்றைக்கு சூடான் மற்றும் அபிரிக்காவாக உள்ளது. குசாவுக்குப் பிறகு சுமார் 28 தலைமுறைகள் கழிந்தபின் பிருகத்பாலனோடு ரகுவம்சம் வாரிசில்லாமல் முடிவுக்கு வந்து நின்றது என்று பாகவத புராணம் கூறுகிறது. இந்த பிருஹத்பாலன் பின்னாளில் குருக்ஷேத்திர போரில் கௌரவர்களுக்கு ஆதரவாக போரிட்டான். அவன் அபிமன்யுவால் சக்ரவியூகத்தில் கொல்லப்பட்டான்.
அதெல்லாம் சரி. புராணங்களில் சொல்லப்பட்டதை நாம் பார்த்தோமா? எப்படி நம்புவது? ஒவ்வொரு துவாபர யுகத்திலும் வியாசர் என்பவர் அவதரித்து அனைத்து சுருதி-ஸ்மிருதி நூல்களை செப்பனிடுவார் என்பதை கடந்த பதிவில் பார்த்தோம். இதெல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டது. துவாபர யுகத்தில் ஒவ்வொருவரும் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தனர் என்று போகர் சொல்கிறார். அப்படிப் பார்த்தால் இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் இரண்டிற்கும் சுமார் 20,000 வருடங்கள் இருக்கவேண்டும். என் ஆய்வுப்படி இராவணன் இராமனைவிட பல்லாயிரம் வருடங்கள் மூத்தவர். ஆகவே மனிதனால் இத்தனை புராணங்களையும் எழுதி நிர்மாணித்து, இன்று நாம் படித்துத் தெரிந்து கொள்ளும்வரை அதை காப்பது என்பது கடவுள் செயல்.
வேத காலம் என்பதே சுமார் 3000 வருடங்கள்தான் ஆகிறது. நீங்கள் சொல்வதற்கு தக்க தொல்லியல் ஆதாரங்கள் உண்டா? அதெப்படி காக்கப்படும்? என்று இன்றைக்கும் நம்மவர்கள் கேட்பதால் மேல்நாட்டு பாதிரிகளும் இஸ்லாமியர்களும் குதர்க்கமாக கேட்கத்தான் செய்வார்கள். குகையில் நபி நாதருக்கு ஜிப்ரேல் அசரீரியாக குரான் அளித்தார் என்று சொன்னால் மட்டும் நாம் ஏன் ஏற்கவேண்டும்? நேரில் பார்த்தோமா? இயேசு விஸ்வகர்ம ஆச்சாரி என்று நாம் சொன்னால் மேல்நாட்டினர் எற்பார்களோ? நாம் இன்றைக்குப் படிக்கும் வால்மீகி/ கம்பன் இராமகாதைகளில் பல வேற்றுமைகள் உள்ளதால் அவற்றை கற்பனை என்கிறோம். ஆனால் புராணங்கள் அப்படியல்ல.
இலங்கையில் பிரம்மாஸ்திரம் எய்தும்போது இராமனுக்கு முருகன் நின்று அருள் புரிந்தான். இராமன் வெற்றிபெற அகத்தியர் மந்திர உபதேசம் செய்தார். முருகன் இருந்தால் தமிழ் இருக்கும். அப்போது இராமன்/இராவணன் ஆகியோர் தமிழையும் அறிந்திருப்பார்கள். அப்படி என்றால் இன்றைக்கு இந்தியாவுக்கு மேற்கே/வடக்கே ஆரிய பகுதிகள் என்று நாம் சொல்லும் தேசங்களில் எல்லாம் தமிழே இருந்தது. அதெப்படி திடீரென்று ஆரியர்கள் என்ற சொல் பிரயோகத்தில் வரும்? பொதுவாக ஆரிய என்றால் மேன்மை, உயர்வு, முதன்மை என்று பல பொருள்படும். கடந்த யுகங்களில் எல்லாம் ஒன்றுபட்ட பூமியாகவே பெரிய துவீபமாக திகழ்ந்தது. எல்லாவற்றுக்கும் குமரிக்கண்டம்தான் அஸ்திவாரம். அதன் எஞ்சிய பகுதியே இன்றைய குமரி. அங்குதான் சுயம்பு மனு மனித குலத்தை சிருஷ்டித்தான். ஆக, ஏன் நம்மை பிறர் எதிர்கிறார்கள்? நாம் நம்முடைய தெய்வாம்ச புராணங்களை மட்டமாக பேசுவதாலும், நம்ப மறுப்பதாலும் மற்றவர்கள் கையோங்கிவிட்டது. ருஷியா அப்கானிஸ்தான் எகிப்து சுமேரியா தென்னமரிகா முதலான பிராந்தியங்களில் வேதம் மந்திர கோஷமாகவும், தமிழ் சமூக மொழியாகவும் நிலைத்து இருந்தது. அங்கு எடுக்கப்பட்ட பானைகள் கல்வெட்டுகள் எல்லாமே நம் தென்கோடி கீழடி வரை பேதமின்றி ஒத்துப்போகிறது. சமஸ்கிருதம்/ தமிழ் மொழிகளிருந்து பிற்பாடு பரந்துபட்ட ஆரிய தேசங்களில் பல மொழிகள் பிறந்தன.
ஈசனின் வேதத்தை வியாசர் தொகுத்தார். ஆனால் ஏன் இத்தனைப் புராணங்களை அளிக்கவேண்டும்? கடந்துவந்த பாதையையும் நடந்த நிகழ்வுகளையும் கலியுக மக்கள் அறியவேண்டும் என்பதற்காக ஈசனே பணித்த தொகுப்புப் பணிதான் இவை. ஒரு பேச்சுக்கு அச்சு/மின்னூல்/ஒலி/ஒளி முறைகளிலுள்ள வேதங்களையும் புராணங்களையும் எப்பாடுபட்டாவது அழித்துவிடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் என்னவாகும்? அரூபமாக ஈசனின் கட்டுப்பாட்டில் உள்ள அத்தனையும் மீண்டும் சிருஷ்டியாகும். மேருவுக்கு உத்தரத்தில் (வடக்கே/வட மேற்கே) எல்லாமே ஆரிய பகுதி என்றும், கீழே தென்னாடு அனைத்தும் தக்ஷிணபாதம் என்று கொள்ளப்பட்டது. எல்லாமே வேதமறை போற்றிய மனுமொழி தமிழ் சமூகமே! முற்போக்கு நாத்திகர்கள் மற்றும் அயல் மதத்தினர்கள் இங்கே சர்ச்சை கிளப்பி நம் தொல் தத்துவத்தை புறம் தள்ளுகிறார்கள். வடக்கே நம் சகோதர்களுக்குத் தெரியாத பல ரகசியங்களை நாம் தெரிந்து வைத்துள்ளோம்.
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் எத்தனைப்பேர் மாண்டார்கள் என்பதை காலாங்கி பார்த்துள்ளார். அதுபற்றி போகர் கூறுகிறார். கிருத யுகத்தில் கோடி சங்கம், திரேதா யுகத்தில் லட்சத்து நூறு சங்கம், த்வாபர யுகத்தில் லட்சமது எண்பத்திரண்டு சங்கம். கலி யுகத்தில் அவர் சமாதிக்குப் போகும் வரை பார்த்தது லட்சமது நாற்பத்திரண்டு சங்கம் என்று விவரிக்கிறார். (சங்கம் =1015, quadrillion) இத்தனை ஜனத்தொகை அப்போதிருந்ததா என்ற ஐயம் சிலருக்கு எழும். இதில் மறு ஜென்ம பிறப்பு/ இறப்பு அடங்கும் என்று அனுமானித்துக் கொள்ளவேண்டும். கலியுக முடிவில் மனிதனின் ஆயுள் நூறு மட்டுமே என்கிறார் போகர்.
(கற்பகம் புத்தகாலயம் வெளியீட்டில் அடுத்து வரவுள்ள என்னுடைய புத்தகத்தில் ஒரு சிறு பகுதியை கருத்துப் பதிவாக இட்டேன்.)