"சீனபதி விட்டு பறக்கும்போது கடலின் மத்தியில் ஒரு தீவைக்கண்டு இறங்கினேன். அருகில் சென்று பார்த்தால் அது பச்சை போர்த்திய மலை.. பாசியோ என்று நினைத்தேன்.. ஆனால் மலையே பச்சை. அதன்மேல் கதிரொளி பட்டு நீர், வானம், பட்சி, மிருகம் என சுற்றியுள்ள அனைத்துமே பச்சையாய் ஜொலித்தது. வெகுகோடி காலம் வரை பச்சைமலையில் தங்கி ரிஷியார்களிடம் ஞானோபதேசம் பெற்றேன். இந்த மலைகளுக்குள் அக்னியும் நவதாதுவும் உள்ளது என்று அறிந்து கொண்டேன். அவை எரிமலைகள்."
இதைப்பற்றி போகர் எழாயிரம் நூலில், ஐந்தாம் காண்டத்தில் சொல்லியுள்ளார். சித்தர் போகர் சுட்டிக் காட்டிய இவ்விடம் தைவானிலுள்ள பச்சை, ஆர்கிட், குய்ஷன் தீவுகளிலுள்ள எரிமலை என்பது என் ஆய்வில் தெரிந்துகொண்டேன். அவர் பெரும்பாலும் இறங்கிய இடங்கள் தைவான், ஸ்ரீவிஜயம் சுமத்ரா மற்றும் அந்தமான் பகுதிகள் என்றும் அறிந்தேன். இதைத்தான் பொதிகைக்கு தென்கிழக்காக சுட்டிக்காட்டியுள்ளார். இன்று அவர் சொன்ன எரிமலைகள் வெடிக்காமல் தூங்கிக் கொண்டோ அல்லது செயலிழந்தும் இருக்கலாம்.
விஸ்வகர்மா வகுத்த வாஸ்து சாஸ்த்திரம்படி தென் கிழக்கு மூலையில்தான் அக்னி (சமையற்கட்டு) அமைய வேண்டும். அதன்படி பார்த்தால் பாரதத்திற்கு தென் கிழக்கில்தான் எப்போதுமே அக்னி தகித்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சம்பந்தமேயில்லாமல் பாரதத்திற்கும் இந்த எரிமலைகளுக்கும் பல்லாயிரம் கிமீ தூரம் உள்ளது.. அன்று குமரிக் கண்டம் நம் தேச பூகோளத்தில் இருந்தது. அப்படியொரு பரப்பளவை மனதில் நினைத்துக் கொண்டு சுமத்ரா அந்தமான் (தென்கிழக்கு) பகுதியை கற்பனை செய்து பாருங்கள். புரியும்!
ஒரு வாரமாக இப்பகுதியில் எரிமலைகள் சீற்றமாகி வெடிக்கத் தொடங்கியுள்ளதால், இந்த பதிவை இட்டேன். "போகர் ஏழாயிரம் : சப்தகாண்டம் ஒரு பார்வை" (Leo Book Publishers) என்ற என் விளக்கவுரை நூலிலிருந்து சிறு பகுதியைத்தான் மேலே படித்தீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக