About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 25 பிப்ரவரி, 2017

பேய்பிசாசுகளும் மந்திரங்களும்

இன்றளவும் பேய்பிசாசுகள் உள்ளதா? செய்வினை சூனியம் போன்றவைகள் ஜோராக நடக்கிறதா? பலர் இதை நம்புகின்றனர்.. சிலர் நம்பமாட்டார்கள். ஆ..ஊ.. என்றால் மன அழுத்தம், உளவியல் பிரச்சனை என்று இக்கால மருத்துவர்கள் அடித்துச் சொல்லிடுவார்கள். அவையெல்லாம் உளவியல் சோதனையில் சரியாகுமா?
மனநோய்க்கும் பேய் பிடித்ததற்கும் பல தெளிவான வேறுபாடுகள் உள்ளன. அக்காலத்தில் 'மணி-மந்திரம்- மருத்துவம்' என்று வைத்தியர்கள் இதற்காக பிரயோகம் செய்தார்கள். இன்று மனநல மருத்துவர்கள் என்ன செய்வார்களோ? இதோடு பகுத்தறிவு வைத்தியமும் உண்டு.
அப்படிப்பார்த்தால் அகஸ்தியர், போகர், கோரக்கர், ஔவையார், அருணகிரிநாதர், பாம்பன் ஸ்வாமிகள்... அனைவரும் பேய் பிசாசுகள் அண்டாமல் இருக்க, செய்வினைகள் ஓடிட, பல உபாயங்களைப் பாடலில் சொல்லியுள்ளனர். இக்கால மருத்துவர்கள் இவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பார்கள்? இவர்களுக்கு mental disorders, obsessions, irrational moods, mystic behaviour, என்று காரணம் சொல்லிககாட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. ஆண்டவா!

படத்தில் நான் போட்டுள்ள பாடல்களின் சுருக்கமான பொருள்.
“மாடனின் மந்திரத்தை ஓதினால் எப்பேர்பட்ட பேய், பிசாசுகளையும் விரட்டிடும். பிரணவத்தின் ஒலிகேட்டால் அவை ஓடும்.” - போகர்.
“ஒலியுடன் சப்தம் எழுப்பி துரத்தும் பேய் பிசாசு கணங்கள், என்னை அண்டாது இருக்க, கெட்டவர்கள் ஏவும் வலிமையான சூனியம் மந்திர தந்திரம் எல்லாம் என்னை வருத்திடாமல் இருக்க உன் வேல் காக்கட்டும்.” – பாம்பன் சுவாமிகள்.
மண்டபத்தில் படுத்திருந்த ஔவையாரைப் அச்சமூட்ட வந்த பெண் பேயைப் பார்த்து, “பெண் பேயே! வெண்பாவை இரண்டுமுறை கற்றாலும் அறியாத மூடன், ஓலையில் எழுதமுடியாத பேதையை எல்லோரும் நகைக்கும்படி பெற்றாளே அவளைப் போய் எற்றி உதை “ –ஔவையார்
பூத வேதாளங்களும் வணங்கி சாப விமோசனம் பெற்ற வேலனான, கூதள மாலையை அணிந்து வேடர்குல வள்ளியை மணந்த சேயூர் கந்தசாமியே, மிகவும் தீய குணமுடைய அடியேனை ஆட்கொண்டு அருளிய நின் கருணையே கருணை. - அருணகிரியார். 

(இங்கு அருணகிரிக்கு சேய் வடிவில் முருகன் காட்சி தந்தான். இங்கு  வணங்கினால், கிரக தோஷங்கள் நீங்கி. பேய் பிசாசம்  தீவினைகள் அண்டாது ஓடிவிடும். வரும் பங்குனி மாதம் இங்கு தேரோட்டம் நடக்கும்.தலத்திற்கு சென்று வணங்கி தீவினை அகலப் பெறுங்கள். கிழக்கு கடற்கரை சாலை மார்க்கத்தில் கல்பாக்கத்தை தாண்டி உள்ளது. அதுபோல், மேல்மருவத்தூரிலிருந்தும் சேயூர்  செல்லலாம்.)
“பஞ்சாக்ஷர் மந்திரம் சொல்லி, கோழி பன்றி ஆடு காவு கொடுத்த பின், அஇஅரிஓம் மந்திரத்தை நூறு முறை உருபோட்டு, காரிஈயம்-செப்பு-தங்கம் இதில் எதிலாவது இந்த மந்திரத்தை கீறி எழுதி, அதை தாயத்தாக கழுத்தில் அணிய, எப்பேர்பட்ட பிசாசு பிரம்மராட்சசனும் அணுகாது.” - அகஸ்தியர்
"ஓம் உம் லம்.... ஹரிங்கே’ என்ற மந்திரத்தை ஜெபித்து (படத்தில் சிவப்பு குறியீடுக்குள் காட்டியுள்ளேன்) உருவேற்றி, ஒரு செப்பு தகட்டில் முக்கோணம் வரைந்து, ஓங்காரத்தை முக்கோணத்தின் சுற்றுபுறமும் எழுதி, அதன் மையத்தில் வட்டம் போட்டு அதில் ‘அஉஇ’ என்று நாட்டி, மந்திரம் ஜெபிக்க, பேய் பில்லி சூனியங்கள் அண்டாது." - கோரக்கர்.
(இங்கு சொல்லப்பட்ட தகுடு தாயத்து தக்க உபாசகர் மூலமே செய்து அணிய வேண்டும்..இப்பதிவை கருத்து பரிமாற்றம் அளவில்தான் சொன்னேன்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக