'போகர் ஏழாயிரம்' நூல் இயற்றியதற்கு அருள்புரிந்த அத்தனை சித்த ரிஷிகளுக்கும் சித்தர் போகர் சரணம் சொல்கிறார். அவர்கள்:
அகஸ்தியர், வரரிஷி, சிவவாக்கியர், நந்தீசர், ரோமரிஷி, மச்சமுனி, தன்வந்திரி, ராமரிஷி, கௌபாலர், சுந்தரானந்தர், தேரையர், பூதனானந்தா, புண்ணாக்கீசர், இடைக்காடர், டமரகானந்தர், தட்சணாயர், அகப்பேய் சித்தர், யாக்கோபு, குறும்பர், ஜோதிமுனி, ஊர்வசியாள், வியாசமுனி, கௌதமர், திருமூலர், காலாங்கி, பாம்பாட்டி, கடுவெளியார், கமலர், கைலாசமுனி, நவகண்டரிஷி, ஜமதக்னி, திரணாக்கியர், அசுவினி தேவர், புஜண்டமகரிஷி, சுகபிரம்மர், கும்பீசர், கருவூரார், கொங்கணர், ஜெயகண்டி, வாலையானந்தர், புலஸ்தியர், சுப்ரமணியர், காலதூதர், இப்படி நவகோடி ரிஷிகளுக்கும் , பதினெண் சித்தருக்கும், நாற்பத்தெட்டு முனிவருக்கும், சரணம் சொல்லியுள்ளார்.
"அத்துணை ரிஷியார்கள் முன்னே பாடிவைத்த நூல் சப்த காண்டமானது பசுங்கிளி முன்னே காக்கை கரையும் சத்தம் போல் இருந்தாலும், புன்னகையுடன் அனேகரும் இந்நூலை படித்து அதில் சினமேதும் கொள்ளாமல், எந்நூலை குற்றம் குறை சொல்லாமல் என்மீது அன்பு கூர்ந்து ஆசிர்வதித்ததற்கு நன்றி. அதனால், என் உடல்-பொருள்-ஆவி எல்லாம் ஒப்பிவித்து கலியுக மக்கள் பிழைக்கவேண்டி நான் சொன்ன பல ரகசியங்கள் வெட்ட வெளிச்சமாச்சு. காலாங்கி கடாட்சத்தினால் பாடிய என் நூலுக்கு சாபமில்லை" என்று சொல்கிறார்.
சாகரத்திற்கு இணையான ஒரு நூலை முதலில் ஏழு லட்சம் பாடல்களோடு எழுதி, அதன் பிறகு அதன் பிரம்மாண்டம் கருதி ஒரு பங்காக சுருக்கி 7000 பாடல்களை ஏழு காண்டகளாக இயற்றினார். இத்தனை மாபெரும் பிரம்மிக்கவைக்கும் பணியை செய்துமுடித்த குருநாதர் போகர், மிகவும் சாதாரண நபராக தன்னை வெளிக்காட்டிய விதம் தெய்வீகமானது... திருமூலர், காலாங்கி மெச்சும் உன்னத பவ்யமான மாணாக்கராகவே இங்கு பரிமளிக்கிறார். அவருக்கு வாய்த்த சீடர் புலிப்பாணியும் ஆசான் மெச்சும் மாணவராகவே திகழ்ந்தார் என்பது பாடல்களில் புலப்படுகிறது.
சீன தத்துவஞானி கன்பூசியஸின் சீடராக லாவோசு என்ற பெயரோடு கிமு4 ல் அவர் இயற்றிய 'தவோதேசிங் 81' Tao te ching பற்றி இன்னொரு பதிவில் காண்போம். இங்கு படத்தில் பார்க்கும் சீன முதியவர் போல் உள்ளார். அரைதூக்கக் கண்களோடு நிர்விகல்ப சமாதி நிலை எப்படி இருக்கும் என்று காண்பித்தார். அவரைப் பார்த்து தரிசித்த அதே முகத்தை இங்கே ஓரளவுக்கு வரைந்துள்ளேன்.
எந்நேரமும் சிந்தையில் வைத்து அவர் பாதங்களை வணங்கி. சித்தர் போகருக்கு சரணம் சொல்லி அமைகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக