About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 28 செப்டம்பர், 2017

நீல நிற ஊற்று எங்கே?

துபாயில் இருக்கும் என் முகநூல் நண்பர் திரு. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட்-6 சதுரகிரிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கே போகும்முன் தனக்கு அங்கே சித்த தரிசனங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படுமா என்று என்னிடம் கேட்டார். அது அவர்கள் சித்தம். எதிர்பார்ப்பு இல்லாமல் போய்வாருங்கள் என்றேன்.
சதுரகிரியில் நாவல் ஊற்று இடத்தில் நீர் ஏதும் இல்லாமல் காய்ந்த தரையாகத்தான் இருந்தது. இறங்கி closeup படங்கள் எடுத்துள்ளார்.
ஊருக்கு வந்த பிறகு படங்களை பார்க்கும்போது, அங்கே ஊற்றுப் பகுதியில் காய்ந்த இடத்தில் ஊதா-நீலம் நிறத்தில் நீர் மட்டும் தேங்கியபடி இருந்துள்ளது. "இது எப்படி எங்கள் வெறும் கண்ணுக்கு சற்றும் தென்படவில்லை? அங்குதானே நின்றிருந்தேன்" என்று ஆச்சரியபட்டார். சதுரகிரியில் பல விஷயங்கள் நம் கண்களுக்கு புலப்படாமல் சித்தர்கள் மறைத்திடுவார்கள். சித்த பூமியில் எதுவும் நடக்கும். 
முன்பெல்லாம் வந்த DSLR கேமிராவில் லென்ஸ் அட்ஜஸ்ட்மென்ட் சரியில்லாமல் போனால், சூரிய வெளிச்சத்தின் ஊடுருவலால் (color fringing) சில வண்ணங்களைக் காட்டும். ஆனால் இப்போது எல்லோரும் அதிநவீன மொபைல் கேமிராவில் எடுப்பதால் இதெல்லாம் வர வாய்ப்பில்லை படத்தில் மரங்கள், காய்ந்த குச்சிகள், பச்சை இலைகள் எல்லாம் அதனதன் நிறத்தில் இருக்க, அங்கே இல்லாத நீர் ஊற்று சுனை தோன்றியது எப்படி? வெளிச்சத்தால்தான் இந்த நீல நிறம் பட்டையாக தெரிகிறது என்று வைத்துக் கொண்டாலும், சரியாக அந்த இடத்தில் இப்படி அமைந்தது அமானுஷ்யமே! 

புதன், 27 செப்டம்பர், 2017

எந்த உருவில் வருவார்கள்?

சித்தர்களின் தரிசனம் வேண்டி பலபேர் சதுரகிரிக்கு சென்று வருவார்கள். அப்படித்தான் அண்மையில் பெரம்பலூரைச் சேர்ந்த என்னுடைய வாசகர் திரு.சிவகுமார் தன் நண்பரோடு போய்வந்தார்.
அங்கே தாணிப்பாறை பூங்கா முன்பு நின்று திரு.சிவகுமாரை அவர் நண்பர் தன் மொபைலில் படம் பிடித்தார். நின்று நிலைத்து எடுத்தும் முதல் முறை எடுத்ததில் தெளிவில்லை. இரண்டாம் முறை தன் கை அசைக்காமல் எடுத்தும் தெளிவாக விழவில்லை. அதில் புகையோட்டமும் மின்னல் கீற்றுபோல் குறுக்கீடு ஏதோ உள்ளது என்றார். அதற்கு என் நண்பர் 'என்னத்த எடுக்குற? இப்போதாவது சரியாக எடு' என்று கோபித்து கொண்டாராம். மூன்றாவது முறை எடுத்தது சரியாக வந்தது.
அந்தப் படங்களை எனக்கு அனுப்பி கருத்து கேட்டார். சூறாவளி சுழல்காற்று வீசாத, தெரு விளக்கு எரியாத அந்தப் பொழுதில் இப்படியொரு விசித்திர படம் வர சாத்தியமில்லை. முதல் இரண்டிலும் சிறிய மின்னல் கோடுகள் இவர் அருகே வந்து சுழன்று போயுள்ளது. அது சித்தர்களே என்று அவரிடம் சொன்னேன். இருமுறையும் படம் பிடிப்பதை தடுத்துள்ளார்கள். போனால் போகிறது என்று மூன்றாம்முறை அனுமதித்தது தெரிகிறது.
சித்தர்கள் எந்த ரூபத்திலும் வருவார்கள். உங்களை கண்காணிப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்க.


சனி, 23 செப்டம்பர், 2017

இன்னும் வேகவில்லை!

இறையருள், சித்தர்கள் அருள் பெற்றவர்களிடம் ஒரு விதமான பொறாமை குணம் நிலவுகிறதே. அது ஏன்? என்று ஒரு நண்பர் கேட்டார்.

அது சமூகச் சூழல் கருதியோ, தன் ஆழமான வெளிப்பாtடினாலோ அப்படி இருக்க வாய்ப்புண்டு என்று சொன்னேன். அருள் பெற்றவர்கள் என்றாலே அவர்களிடம் உயர்ந்த பண்புதானே குடிகொள்ள வேண்டும், பின் ஏனிந்த வஞ்சம், அசூயை, பொறாமை, கோபம்? நானும் இதை சிலரிடம்  கவனித்துள்ளேன்.

தன்னை யாரேனும் ஓரங்கட்டிவிடுவார்களோ, புகழ் போய்விடுமோ, இருட்டடிப்பு செய்து விடுவார்களோ, நமக்கு போட்டியாக வந்திடுவாங்களோ, என்ற அச்சம் குடிகொண்டு விடுவதே காரணம். இந்த நினைப்பே சிரிப்பாக உள்ளது.. அவர்களிடம் இந்த குணம் இருக்கக் கூடாதே.. அல்லவா?

ஆனால் நான் பார்த்தவரை, பலரிடம் இந்த ஆபத்தான குணம் உள்ளது. 'உன்னைவிட நான் அனைத்தும் அறிவேன், நானே கடவுளின் அஜென்ட், என்னிடம் என்ன தவறு கண்டாய்,  குறைகூற உனக்கு என்ன விஷயம் தெரியும்?' இப்படியான மனோபாவமே உள்ளது.

இப்படி இருந்தா அவருக்கு அருள் இருந்து என்ன பிரயோஜனம்? தன்னுணர்ச்சி எப்போதுமே தலைதூக்கிக்கொண்டு இருந்தால் ஆபத்துதான். 'அவர் சித்து வேலை செய்பவர், நான் அப்படி இல்லை. நான் அழைத்தால் அந்த இறைவன் வருவார்' என்ற ரீதியில் பேசிய ஒருவரை பார்த்ததும், எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. பகவான் ரமணரை பொறுத்தவரை 'நான்' என்பது முக்கியமான சொல். அதுதான் தேடலைத் தரும். அந்த நான் என்பதை உணராதவரை அது ஆணவமா, கோவணமா என்று அறியாமலே இருக்கும் மனிதர்களே அதிகம்.

என் பார்வையில் எல்லோருமே சதாசிவ ரூபம்தான். 'நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை' போல, ஒருவருக்கு கிட்டிய இறை தரிசனமும் அருளும்,  மற்றவர்களுக்கும் கிடைக்கும் வகையில் சிந்தித்து செயல்பட்டாலே போதுமானது. எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் புலபட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதற்கு அவசியமுமில்லை. கற்றது விரல் நுனி அளவுதான் அதற்கே இந்த அமர்க்களம். இன்னும் கைமண் அளவு கற்றால் என்ன ஆகுமோ? அந்த ஔவையாரே என் மாணவிதான் என்று சொல்லும் காலமாகிவிடும்.

இறையருள் என்பது ஓடும் நதி. எல்லோருக்கும் பொது. அதிலிருந்து நீங்களும் முகந்து எடுக்கலாம், உங்களிடம் அதுவாகவும் கசிந்து வரலாம். இதில் உரிமை கொண்டாட என்ன இருக்கு? நதியின் தண்ணீர் தடையின்றி கிடைக்கிறதா என்பதே முக்கியம். குயவன் பூரணமாக வடிவம் தந்தும்கூட சரியாக சுடப்படாத மண்பானைகள் ஏராளம் உண்டு!

No automatic alt text available.

புதன், 20 செப்டம்பர், 2017

எழுந்து நிற்கவும் என்று சொல்லவேண்டிய நிலை!

Image result for please stand up for national anthem
திரையரங்கில் என் முன்புற இருக்கையில் ஒரு மூட்டுவலி ஆசாமி இருளில் சீட் நம்பர் தேடிக்கண்டு பிடித்து ஒருவழியாக வந்தமர்ந்து செட்டில் ஆனார். அதற்குள் 'தேசிய கீதம்' என்ற ஸ்லைட் போட்டு பாட்டு ஆரம்பித்தது. ஐயோ பாவம், எழுந்திருக்க கஷ்டப்பட்டு விட்டார். சட்டம் சிலருக்கு விலக்கு தந்துள்ளது. அப்படிபட்டோரின் உடல் தகுதியை யார் அங்கே பரிசோதிப்பது? சிரமம்தான். இப்படி எழாதவர்களைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்ததுவரை செய்தித்தாளில் படித்துள்ளோம்.
இங்கே எழாவிட்டால் 'திமிர்புடிச்ச ஆளு.. பாக்க நல்லாதானே இருக்கான், கொடியை அவமரியாதை செய்யிறான்.. ரெண்டு நிமிஷம் நிக்கமுடியாதாமா?' என்று விமர்சனங்கள் வந்து விழும். கேளிக்கைக்காக வரும்போது, எல்லாவித உடல்நிலை மக்களும் ஒரு பொது இடத்தில் கூடும் இடத்தில் இது என்ன உபத்ரவம்? என்றுதான் நாம் நினைப்போம். பல அசௌகரியத்தால் எழ முடியாதவர்கள் 'கால் வலி, மூட்டுவலி, ஆணி, ஆஸ்டியோ, வெரிகோஸ் அதனால் நான் எழுந்துக்கலை' என்று பக்கத்தில் முகம் தெரியாதவர்களிடம் எதற்கு விளக்கணும்?
கீதம் இசைக்கும்போது அனைவரும் நிற்கும் சமயம் அங்கே எழ முடியாதவர்களின் மனம் மட்டும் குற்ற உணர்ச்சியில் கிடந்து தவிப்பதை நம்மால் உணர முடிகிறது. அரசு விழா மேடை, கல்விக்கூடம், அலுவலகம் இங்கெல்லாம் இசைப்பது அவசியம்தான். மற்றபடி.?
தேசிய கீதம் பாடிக்கொண்டே தேச துரோக செயலில் ஈடுபடுவோர் இல்லையா என்ன? மனதில் பக்தி இருந்தால் இருந்தால் போதும்.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

குழந்தை பிறந்தபின் மொட்டை போடுவது ஏன்?

குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில் மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை.
ஆனால் ஏன் அப்படி மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா? அது சும்மா நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது இதற்கு. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மை சுற்றி என்ன தேனும் பாலுமா இருக்க போகிறது? இல்லை! இரத்தம் சதை மலம் சிறுநீர் என அனைத்தும் இருக்கும்.அதற்குள்ளேதான் நாம் பத்து மாதங்கள் இருக்கிறோம். இவையெல்லாம் எமது உடம்பில் எவளவு ஊறியிருக்கும்.
வெறும் ஐந்து நிமிடம் கடல்நீரில் விரலை வைத்து துடைத்து விட்டு சுவைத்து பாருங்கள் எமது விரல் அப்போதும் உப்பாகத்தான் இருக்கும். 5நிமிடம் உப்பு நீரில் வைத்த விரலே இப்படியென்றால் பத்து மாதம் மலம் சிறுநீர் இரத்தம் சதை இவற்றுக்குள் கிடந்த எமது உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.
இதெல்லாம் எப்படி வெளியேறும்?? எமது உடலில் உள்ள கழிவுகள் எல்லாம் மயிர்கால்கள் வழியாக வெளியேறும். தலையில் உள்ள கழிவுகள் வெளியேற வழிகள் குறைவு. இதனால் சிரசில் அந்தக் கழிவுகள் தேங்கி நிற்கும் சந்தர்பங்கள் ஏற்படுகிறது. இதனால் பிற்காலத்தில் பாரிய நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.
எனவேதான் சிரசில் மொட்டை போடுவது நேர்த்திக்கடன் என்ற பெயரில் முன்னோர்களால் பரப்பப்பட்டது. இதைப்போல் மீண்டும் ஒரு தடவை குழந்தைகளுக்கு மொட்டை போடுவார்கள். அது ஏற்கனவே மொட்டை போடும் போது ஏதாவது கிருமிகள் தவறியிருப்பின் இரண்டாவது மொட்டையில் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே.
தற்போது புரிகிறதா பிறந்த குழந்தைக்கு கோயிலில் மொட்டை போடுவது ஏன் என்பது. இது தொடர்பாக அறிவியல் ரீதியாக கூறினால் மக்கள் பின்பற்றமாட்டார்கள் என்பதற்காகத்தான் ஆன்மீகரீதியாக கூறி மக்களை பின்பற்ற வைத்துள்ளனர் முன்னோர்கள்.
ஆனால் அதற்கு ஆன்மிக ரீதியிலான வேறு ஒரு விளக்கத்தினையும் குறிப்பிட்டுள்ளனர். எது எப்படியே ஆன்மிகத்தில் கூறப்பட்ட பல்வேறு காரியங்களுக்கு அறிவியல் ரீதியிலான விளக்கங்கள் இருக்கின்றது என்பதே உண்மை.

திங்கள், 18 செப்டம்பர், 2017

பீஜ அட்சர ஒலிகள்

பல மந்திரங்களிலும் சித்தர் பாடல்களிலும் பீஜ அட்சரங்கள் கேள்விபபட்டிருப்போம்.. அம், வம், ஹர், ஹூர், ஸர், ங்ஞாவ், ஐம், உம், சட், புட், .. ஐங், சொய்ங், (சிரிப்பு வருதோ?) என்பது வரை உதாரணத்திற்கு சொன்னேன். இதுபோன்ற ஒலிகளைக் கேட்டாலே அது சம்ஸ்கிருத ஓசை என்று தவறாக நினைப்பார்கள் நம் தமிழ் நேசர்கள்.
சித்தர்களே இதுபோன்ற அட்சரங்களை தங்கள் பாடல்களில் சொல்லியுள்ளனர். இவை எல்லாவற்றையும் கூர்ந்து பார்த்தால் , பல வன விலங்குகளும், வீட்டுப் பிராணிகளும், பட்சிகளும் எழுப்பும் ஓசைகள் இதை ஒட்டியே இருப்பதைக் காணலாம். அப்படி என்றால் அவைகளும் மந்திரம் ஒதுகிறதா? இந்த அட்சரங்களுக்கு பொருள் கிடையாது, அவை சக்தி தரும் ஒலிகளாகவே கருதப்படும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பீஜஅட்சர கோர்வை என்று நிறைய pairing உள்ளது. விஷயம் தெரிந்தோர், அதை பார்த்தாலே அந்த மந்திரம் புருஷ அம்சமா, ஸ்த்ரி அம்சமா என்று கண்டுபிடித்திடலாம். இவை மந்திரங்களின் வித்துக்கள் என்று சொல்லலாம். 'ஓம்' என்ற பிரணவத்தோடு இவை சேர்த்து உச்சரிக்கப்படும்.
பிராணிகளுக்கு இயற்கையாகவே இறைவன் இந்த கத்தும் ஒலிகளைதத் தந்து அவைகளின் மூச்சு ஓட்டத்தையும் சுரப்பிகளின் வேலையையும் சீராக்குகிறார். மந்திரம் என்பது மனிதர்களுக்கு மட்டும்தான் என்று யார் சொன்னது? நம் கண்களுக்குப் புலப்படாத பல விஷயங்கள் அவைகளுக்கு புலப்படும். அப்படிப்பார்த்தால் நம்மைவிட அஃறிணையான  அது உயர்வான பக்தி நிலையில்தான் உள்ளது.
நம் ஆசாமிகள் மந்திரங்களின் முடிவில் வரும் 'நமஹ' என்ற ஒரு சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு சமஸ்கிருதம் என்பார்கள். அதற்கு பதில் 'போற்றி' போட்டுக்கொண்டால் ஆயிற்று. தமிழ் அல்லாத சப்தங்களை சமக்கிருதம் என்றால் மூத்த சித்தர்கள் பீஜங்கள் பற்றி சொன்னது எல்லாமே பொய்யா? தமிழில் வடமொழி சப்தங்களை பாம்பன் சுவாமிகள் (ஷண்முக கவசம்) சொல்லி உருவேற்றினார் என்ற கோணத்தில் பார்த்தால், வடமொழி உச்சரித்த ஒருவருக்கு தமிழ்க் கடவுள் முருகன் 'சடக்கர உபதேசம்' நேரில் செய்து வைக்கக்கூடாதே? தமிழ் சித்தர் அகத்தியரும் இதுபோன்று சொன்னார் என்றால் முருகன் இவரிடம் கனிவு காட்டக்கூடாதே?
சித்தர்களையே பகுத்தறியும் சந்தேகத்திற்கு உட்படுத்துவதாக இந்த கலியுகத்தில் தமிழ் ஆர்வம் அமைந்துள்ளது. சித்தர்கள் இயற்றிச் சொன்னதை பழித்துபேசி அவை பொய் என்று குற்றம் சொல்லும் கலியுக மூட மாண்பர்கள் உண்டு என்பதை போகர் முன்பே சொல்லியுள்ளார்.

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

ஜோதி தரிசனம்

நாஸ்திகவாதி: 'கடவுளைக் காணமுடியாது. அதை எவராலும் நிரூபிக்க முடியாது. நீங்கெல்லாம் எதற்கு கோயிலுக்குப் போகிறீங்கனு தெரியலை'
ஆஸ்திகவாதி: 'கடவுள் இருக்காருன்னு நம்புறேன். கோயிலுக்குப் போறேன். வேணும்னா நீயும் நம்பு'
நாஸ்திகவாதி: 'இல்லாத ஒன்றை எப்படி நம்புவேன். பகுத்தறிவோட பேசு. ஆதாரம் காட்டு'
ஆஸ்திகவாதி: 'நீ மட்டும் கடவுளை நம்பலைன்னு எனக்கு எப்படி தெரியும்? மனசுக்குள்ளேயே ஜெபம் பண்ணலாம், மந்திரம் உரு ஏத்தலாம். கடவுள்னு ஒன்று உன் சிந்தையிலே இல்லைன்னு நிரூபி. கற்பூரம் ஏத்தி சத்தியம் செய்'
நாஸ்திகவாதி: 'இல்லைனு சொன்னா நம்பணும். நான் நம்பலை நீயும் நம்பாதே'
ஆஸ்திகவாதி: 'இருக்குனு சொன்னா நம்பணும். நான் நம்புறேன்.. வேணும்னா நீயும் நம்பிக்கோ.'
ஆக, இருவருக்குமே அரூபம் பொதுவாக உள்ளது. அரூபனான இறைவனை ரூபமாக காட்டு என்று அவர்களும், அவன் எங்கும் எந்த ரூபத்திலும் உள்ளான் என்கிற இவர்களும், ஒருவருக்கொருவர் விளக்கிக்கொண்டு இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கருமை இருந்தால்தான் வெண்மை தெரியும். அதனால் (பகுத்தறிவு) நாஸ்திகவாதிகள் இருக்கட்டும்.
பக்தி என்பது ஆன்மாவை சார்ந்த செயல், அறிவைச் சாராது. ராஜராஜசோழன் ஆடம்பரமாகக் கட்டிய பிரகதீஸ்வரமும் உண்டு, பூசலநாயனார் மனதிலே எளிமையாகக் கட்டிய ஹ்ருதயாலீஸ்வரமும் உண்டு. அவன் எங்கும் இருப்பான்.
அடுத்தவரை தெரியாமல் மிதித்தால் கன்னத்தில் போட்டுக்கொண்டு, மன்னிப்பு கேட்கிறோம். எதற்கு? அவருள்ளும் சதாசிவம் இருக்கிறார் என்பதால்! கோபம் வெறி வந்து அவரை அடிக்கும்போது இது புலப்படுவதில்லை.
வாசி கற்று, சக்கரங்கள் திறந்து, சுழுமுனை தொட்டு பரமஜோதி காணும்வரை கோயிலுக்குச் செல்வதும், இறைவழிபாடு செய்வதும் தேவையே!
Image may contain: text

ஆசிகள் தரும் தென்புலத்தார்

ஆவணி, புரட்டாசியில் வரும் கிருஷ்ண பட்சத்திற்கு 'மஹாளய பட்சம்' என்று பெயர். மஹாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். இது ஒரு பட்சம் (பதினைந்து நாள்) அனுஷ்டிக்கபடுகிறது. மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் அவரவர் இல்லத்தில் கூடி ஆசி வழங்கும் நேரமே மஹாளயம். (Sep 6- 19).
அவர்கள் பிறப்பெடுத்திருந்தால் இங்கே எப்படி வருவார்கள்? ஆன்மா வருகிறது என்பது ஐதீகம். அவரவர் திதியில் நீங்கள் படைக்கும் உணவு, எங்கோ பிறப்பெடுத்திருக்கும் அந்த ஆன்மாவுக்கு எந்த ரூபத்திலாவது போய் சேரும். இதை ஹிரன்யரூபம் என்பார்கள். மூன்று தலைமுறையை ஒரு வம்ச சுற்று என்கிறார்கள். ஒரு தலைமுறை சுமார் 33 வருடங்கள். ஆடி அமாவாசையில் தர்ப்பணம் செய்யாமல் விட்டவர்கள் இந்த 15 நாளில் அவரவர் திதியில் செய்வது உத்தமம் என்கிறது சாஸ்திரம்.
எனக்கும் உங்களுக்கும் நம் பூர்வ ஜென்மங்களில் பிறந்த குடும்பத்தில் இடும் உணவானது இங்கே சரியான நேரத்தில் நமக்கு பசிக்கும் போதோ, தாகம் எடுக்கும் போதோ இலவசமாகக் கிட்டும். அதெப்படி கிட்டும்? என்று பகுத்தறிவு பேசக்கூடாது.
டீ/காபி/ஜூஸ் /நொறுக்ஸ்/சாப்பாடு என்று ஏதேனும் உண்டபின் நண்பர் பிடிவாதமாக பில் கட்டியிருப்பார். அல்லது கோயிலில் பிரசாதம் நமக்கு கைமேல் கிடைக்கும். அல்லது கடைகாரர் குறைந்த விலையில் நிறைய பழங்களையோ, உணவு பொருளையோ கொடுக்கலாம்.இப்படி ஏதோ அங்கு கூரியர் அனுப்பியது இங்கு நம்மிடம் டெலிவரி ஆனது. இப்படித்தான் அவை நம்மை வந்து சேருகிறது... நீங்கள் தருவது அவர்களைப் போய் அடைகிறது. நாமே சென்று காசு கொடுத்து வாங்கிய உணவுக்கு ஓட்டல்காரரை வாழ்த்துவோமா என்ன? தக்க நேரத்தில் தவித்த வாய்க்கு நீரும் உணவும் வந்து சேரும் போதுதான் நமக்குக் கொடுத்தவரை மனதார வாழ்த்துகிறோம். இதுவே தாற்பரியம். இந்த வாழ்த்து நமக்கு கொடுத்தவரையும், எங்கோ அனுப்பியவரையும் சென்று சேரும்.
ஈசனை, 'தென்னாடுடையவன்' என்கிறார்கள். அதாவது தென்னாடுதான் நம் மூதாதையர் பூமி (குமரிகண்டம்). அதனால்தான் தென்திசையில் வாழ்ந்து இறந்த மூதாதையர்களை 'தென்புலத்தார்' என்கிறார்கள்.
சித்தர் திருவள்ளுவர் இதற்கு முக்கியத்துவம் தந்து,
'தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை' என்று (குறள்.43) சொல்லியுள்ளார்.
இதன் பொருள்: - தென்புலத்தார், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான், என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய விருந்தோம்பலை தவறாமல் செய்வது சிறப்பு. ஆக, நம்முள்ளும் அவர்கள் மரபணுவாக, பாவ புண்ணியமாக வசிக்கிறார்கள் என்பது புரிகிறது அல்லவா?
அதுபோல் இல்லம்தேடி வந்தவர் யார் என்றும் நமக்குத் தெரியாது. அதனால்தான் 'அதிதி தேவோ பவ' என்றனர். அவருக்கு உபசரித்து விருந்தோம்பல் செய்யவேண்டும் என்றனர். இந்த நோக்கில்தான் 'ஐயமிட்டு உண்' என்று ஔவையார் சொன்னார். அதாவது, வீடுதேடி வந்தவருக்கு உணவளித்துவிட்டு பிறகு நீ உண் என்றார். 'Show hospitality to strangers, for they are angels in disguise' என்கிறது பைபிள்.
மேலை நாட்டினர் மூதாதையர்களை நினைவு படுத்தும் தினமாக Thanksgiving Day (அ) Day of the Dead (அ) All Souls' Day என்று பல பெயர்களில் கொண்டாடுவார்கள்.
Image may contain: one or more people and food

திடீர் வருவாய்

SIM, Data card எண்களோடு Aadhar எண் இணைக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக எல்லோருக்கும் SMS வந்து கொண்டிருக்கிறது. இதற்கு கடைசி தேதி பிப்ரவரி 6, 2018.
அருகிலுள்ள அந்தந்த நெட்வொர்க் மொபைல் ஆப்பரேடர் அலுவலகத்திற்குச் சென்று இந்த சேவையை இலவசமாகப் பெறலாம். ஒவ்வொரு முறையும் Biometric விரல் கைநாட்டு தேவைப்படும். இந்த சேவையை எல்லா ரீசார்ஜ் கடைகளிலும் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு SIM கார்டு இணைப்பிற்கும் ரூ.20 வசூல் செய்கிறார்கள். எதுக்கு இவ்வளவு வாங்கறீங்க என்று கேட்டதற்கு, 'பையோமெட்ரி கருவி மூவாயிரம் விக்கிது, அந்த பணத்தை இப்படித்தான் எடுக்கணும், ஓசில செய்யமுடியாதே சார்' என்றார்.  
மத்திய அரசு கொண்டுவந்த இத்திட்டத்தால் ரீடைல் கடைகள் நன்கு சம்பாதிக்கிறது. இந்தியாவில் 1.2 பில்லியன் மொபைல் உபயோகிப்பாளர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள். அதில் சுமார் பத்து சதவிகிதம் பேர் நேரடியாகப் போய் இலவச சேவை பெற்றாலும், எஞ்சிய இணைப்புகளுக்கு ரூ.20 வீதம் வசூல் என்றால் அது நாடு முழுதும் மொத்தமாக எவ்வளவு கோடி பெறும் என்று நினைத்துப்பாருங்கள். மலை பிரதேச ஊர்களில் இன்னும் அதிகமாக வசூல் செய்கிறார்களாம். தீவிரவாதிகளை கட்டுப்படுத்த இந்த திட்டமாம்.
No automatic alt text available.

நற்சிந்தனை

இன்று என் கையில் கிடைத்த பத்து ருபாய் தாளில் எழுதப்பட்டிருந்த ஒரு புதிர்..
'பெண்களுக்கு பிடித்தது பசங்க use பண்றது, பெத்தவங்களுக்கு பிடிக்காது. அது என்ன?'
'இதுக்கு ஆன்சர் 7 லெட்டர்ல வரும். கெஸ் பண்ணுங்க.'
Image may contain: one or more people
விடை என்னவென்று அறிந்துகொள்ள முகநூலில் இதை பதிவிட்டேன். அதற்கு விடை 'ROMANCE' என்று மெனக்கெட்டு பலபேர் பதில் போட்டிருந்தனர்.
ஏன் சாமி.. இதை நீட் தேர்வில் கேட்டிருப்பாங்களோ? இந்தமாதிரி லேவிகளுக்கு விடை தெரியாமத்தான் நிறைய பேர் ஃபெயில் ஆயிடான்களோ?

முருகன்- பூமி -செவ்வாய்

பூம்பாரை, பெரிச்சியூர் ஆகிய இடங்களில் போகர் செய்த சோதனை அவபாஷாண சிலைகள் உண்டு. சுத்தி செய்து முடிக்கப்படாத நிலையில் இருப்பது அவபாஷாணம் என்கிறார்கள். பூமியில் ஒரே ஒரு நவபாஷாண சிலை இருப்பது பழனியில்தான். இதுபோக இன்னொன்று இருப்பது செவ்வாய் (மங்கள்) கிரகத்தில். இது பலருக்குத் தெரியாது.
'பூமியில் இருக்கும் சிலை இது ஒன்றே என்று எங்களிடம் உள்ள பனையோலை சுவடியும் அதைத்தான் சொல்கிறது' என்று தவத்திரு ஸ்ரீ சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் முன்னொரு சமயம் என்னிடம் சொன்னார்.
ஆக, முருகனே தன் மேனியை தானே (போகர்) பாஷாண கலவைகொண்டு உருக்கிச் சாய்த்து சிலையாய் கட்டி, அதை தன்னுடைய கோளான செவ்வாயிலும், அக்கோள் கர்பமிருந்த பூமியில் இன்னொன்றையும் நிறுவினார். கலியுகத்தில் பிணி தீர்க்கும் சிலையாய் பழனியில் முருகன் இருப்பது நமக்குக் கிட்டிய பெரும் பேறு. போகர் ஜெனன சாகரம் வாசித்தவர்களுக்கு இது விளங்கும்.
'தரணி கர்ப்ப சம்பூதம்| வித்யுத் காந்தி சமப்ரபம்|| குமாரம் சக்தி ஹஸ்தம் தம்| மங்களம் பிரணமாம்யஹம்' என்ற சுலோகம் பூமி-செவ்வாய் உறவை விவரிக்கும்.
No automatic alt text available.
போகர் இந்த சிலையை ஒன்பது வித பாஷாணங்கள் சேர்த்து கட்டிய விதம் குறித்து ஒரு பாடல்.
"பாங்கான பாடாணம் ஒன்பதினும்
பரிவான விபரம்தான் சொல்லக்கேளு
கெளரி கெந்திச்சீலைமால் தேவி
கொடு வீரம்கச்சால் வெள்ளை
பகர்கின்ற தொட்டினோடு சூதம்சங்கு
பூரணமாய் நிறைந்த சிவசக்தி
நலமான மனோன்மணி கடாட்சத்தாலே
நண்ணி நீ ஒன்பதையும் கட்டுகட்டு.
நடக்கவே கலியுகத்தார் பிழைக்கவேண்டி
நாமான மனோன்மனியாள் கிருபையாலே
உள்ளபடி பாடாணம் ஒன்பதும்தான்
உருக்கிச் சாய்த்தேன் சிலையாய்தானே."
எல்லோரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். முகநூலில் ஈசன் வேறு, முருகன் வேறு என்று பேதம் காட்டி நிறைய பதிவுகளைப் பார்க்கிறேன். புராணங்கள் எல்லாமே கட்டுக்கதை என்பதால் நம்ப முடியாதவை என்றும், ஈசன் தன் அகவொளியிலிருந்து எதையுமே படைக்க இயலாதவர் என்றும், இப்படி இருக்க முருகனை அவர் சிருஷ்டித்தார் என்பதும் பொய் என்று யாரோ ஒருவர் ஈசனுக்கு impotent சான்றிதழ் அளித்திருந்தார். ஹஹஹா! ஈசனே தன் பஞ்ச முகத்தோடு அதோமுகம் (புலப்படா முகம்) சேர்த்து ஆறுமுகமானார். இந்த முகத்திலிருந்தே முருகன் சிருஷ்டியானான். திருமூலர் இதை (திருமந்திரம், பா: 524) உறுதி செய்துள்ளார். சிவன் வேறு முருகன் வேறில்லை.
"அதோமுகம் கீழ்அண்ட மான புராணன்
அதோமுகம் தன்னோடும் எங்கும் முயலும்
சதோமுகத்து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனும் ஆமே."
ஆக, முருகன் உதித்தது ஈசனின் ஆக்ஞா சக்கர ஒளியில், முருகனுக்கு சக்தி கொடுப்பது சக்தி, சக்தி உதித்தது ஈசனிடத்தில், ஈசனின் வாமபாகமே சக்தி /விஷ்ணு, விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் பிரம்மா. இப்படி முருகன் இருக்கும் இடத்தில் எல்லாமே உள்ளது. அப்படி என்றால் முருகனிடத்தில் நவ கோள்களும் இலயமாக வேண்டும்தானே? அதனால்தான் பழனி சிறப்பு வாய்ந்தது.


வெள்ளி, 8 செப்டம்பர், 2017

குருவடி நிழலில்

இன்று புனைந்த பாடல். குரு போகர் திருவடிக்குப் போற்றி.

பல்லாவரம் to கீழடி

சென்னை ஜமீன் பல்லாவரம் (மீனம்பாக்கம் சமீபம்) பகுதியில் 57 ஏக்கர் நிலப்பரப்பு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனால் தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம் பகுதிகள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. The Ancient Monuments and Archaeological Sites and Remains (Amendment and Validation) Act, (AMASR) 2010 சட்டம் இங்கு அமலில் உள்ளது.
இதன்படி வீடுகள் வாங்கவோ, மறு சீரமைப்பு செய்யவோ, நிலம் வாங்கவோ, விற்கவோ, புதிய கட்டுமானங்கள் எழுப்பவோ, மின்சாரம் இணைப்பு தரவோ அனுமதியில்லை. இவை Megalithic sites என்ற கற்கால நாகரிகத்தைச் சேர்ந்த பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தப்படும்.  
இந்த இடத்தில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. அங்கு பல தலைமுறைகளாய் குடியிருப்போர் தொல்லியல் துறையின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்துள்ளனர். அரசு என்ன கொடுக்குமோ அதை பேசாமல் வாங்கிக்கொண்டு போவதை மக்கள் விரும்பவில்லை.
நில அளவை பணிகளை மேற்கொள்ள வந்த ASI துறையினரைத் தடுக்க, அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அப்பகுதியில் சுமார் பத்தாயிரம் வீடுகள் உள்ளது. எல்லாம் எப்போது பறிபோகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஜமீன் பல்லாவரம், கீழடி, ஆதிச்சனல்லூர், அரியலூர் போல இன்னும் பல இடங்களில் தோண்டத் தோண்ட புது பொருட்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கும். ஏதோ ஒரு sample பகுதியை ஆய்வுக்காக வைத்துவிட்டு மற்றதை விட்டுவிட வேண்டியதுதான்.
அருங்காட்சியகம் முழுக்க இதுபோன்ற பொருட்கள் நிரம்பிக் கிடக்கிறது. சிலது இடமின்மை காரணமாக பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. பழங்கால தமிழர்களின் நாகரிகம் அறிந்து கொள்ள தற்போது வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுகிறது. இவற்றை அறிந்து கொள்வதால் நமக்கு என்ன நன்மை? அதனால் நாம் பயனடைவது என்ன? Past comes to haunt Pallavaram என்கிறது The Times of India.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடம்பற்றி முதன் முதலில் பிரிடிஷ் நில அமைப்பியலாளர் ராபர்ட் ப்ரூஸ் அறிவித்தார். இத்தனை வருடங்கள் இல்லாமல் அண்மைக்காலத்தில் திடீரென பழங்கால நாகரிகம் பற்றிய ஆர்வம் பொங்கி வந்துள்ளது.
தமிழர் நாகரிகம் குறித்து சங்க இலக்கியங்கள் நிறைய சொல்லி விட்டது. புதிதாக என்ன இருக்கு? இத்தனை வருடத்தில் உங்களில் எத்தனைப்பேர் Govt. Museum சென்று ஆர்வத்தோடு எல்லாம் பார்த்து இருப்பீர்கள்? இப்பதிவு பலருக்கு அதிருப்தியைத் தரும்.
தாங்கள் வாழும் பகுதியில் இப்படி ஏதும் கிடைக்கக் கூடாது என்று கடவுளை நித்தம் வேண்டுவோர்தான் அதிகம். இதுதான் யதார்த்தம்!
Image may contain: one or more people, text and outdoor