About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 11 ஜனவரி, 2018

புதையுண்ட பொக்கிஷங்கள் வெளிப்படும்!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டது. கர்னூல் மாவட்டம் சென்னூர் கோட்டையில் புதையல் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து கடந்த ஒரு மாதமாக சென்னூர் கோட்டையைச் சுற்றி 3 இடங்களில் சுரங்கம் தோண்டப்பட்டது. சுரங்கத்துறை சார்பில் ஸ்கேனர் மூலம் சென்னூர் கோட்டையச் சுற்றி சோதனை செய்யப்பட்டது.
ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்தே இதுபோன்ற பொக்கிஷங்கள் பாதாள சுரங்கத்தில் உள்ளது என்று செவிவழி செய்தியாக நம்பப் பட்டுவந்தது. ஆனால் உள்ளே (கதைப்படி) சப்த கன்னிகள் சிலைவரைதான் அடையாளம் வைத்துச் செல்லமுடிந்தது. அதன் பிறகு ஆழத்தில் நீர் தேங்கிய அகழி இருந்துள்ளதால் அதைத்தாண்டி யாரும் முயற்சிக்கவில்லை. கடந்த சில தினங்களாக தீவிரமாக ஆராயும் பணி நடந்தது. நீரை பம்ப்செட் மூலம் வெளியேற்றி உள்ளே நுழைந்துள்ளனர்.
பாதாள சுரங்கத்தின் நுழைவாயிலேயே வைரம் பொதிந்த கனிமங்கள் உள்ளதை கண்டுபிடித்தனர். தொழில்நுட்ப கருவிகள்கொண்டு உள்ளே ஸ்கேன் செய்தனர். அங்கே 12 மீட்டர் உயரத்திற்கு (40 அடி) வைர மலை உள்ளதை உறுதி செய்துள்ளனர். இதை மத்திய அரசின் ஒப்புதல்பெற்றே பிறகே கையகப் படுத்தும் பணி நடக்கும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
போதலூரி ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் தன்னுடைய 'காலக்ஞானம்' நூலில், கலியாண்டு 5100 க்குப்பிறகு நல்லமலா மலைத்தொடர் ஓரமாக கர்னூல், ஸ்ரீசைலம், கடப்பா போன்ற ஊர்களில் பல புதையல்கள் வெளிப்படும் என்பதை அன்றே தீர்க்க தரிசனத்தில் கூறியிருந்தார். அவர் சிறுவனாக இருந்தபோது பாதாள சுரங்கத்தில் அமர்ந்து எழுதிய இந்த நூல் கர்னூல் மாவட்டம், பானகானபல்லே அருகே 'ரவ்வலு கொண்டா' (வைரமலை) இடத்தில் உள்ளது.
போகரும் தன் நூலில் இதுபோல் எங்கெங்கே சொர்ண மலைகள் கிடாரங்கள் (அயோத்தி முதல் இலங்கை வரை) உள்ளன என்பதை வரைபடம் போலவே 'போகர் ஏழாயிரம்' நூலில் சொல்லியுள்ளார். ஆனால் அதை யாரும் இன்றுவரை நம்பியதில்லை. கப்ஸா விடுறதுக்கே கிளம்பிட்டாங்கையா என்றுதான் விமர்சனம் வரும். இப்போது சொன்னதுபோல் கிடைத்துவிட்டது. அடுத்து என்ன?
ஒப்புதல் கிடைத்தபின் இந்த மலை அப்படியே சுவாஹா ஆகுமா, அல்லது பிரித்து மேயப்படுமா என்பது இறை (Government) ரகசியம்!

வைர வேட்டைக்குப் போவோமோ?
-------------------------------------------------
ரவ்வலகொண்டா பற்றி பழைய பதிவில் சொன்னேன். ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் என்றுமே கனிமங்களுக்குப் பெயர் பெற்றது. ராயர்கள், குதுப்ஷாஹி, பாமினி, பீஜப்பூர் சுல்தான்கள், நிசாம் மன்னர்கள் எல்லோருமே வைரங்களைத் தோண்டி எடுத்து வந்தனர். அக்காலத்தில் ராயலசீமாவின் சந்தை தெருக்களில் வைரங்களைப் போட்டு விற்பனை செய்தார்களாம். அவை எல்லாம் கனிம உற்பத்தியில் வந்தது. ஆனால் பல காலங்களுக்குப் பிறகு மிகபெரிய அளவில் இப்போது வைரமலை புதையல் கிடைக்கிறது என்பது ஆச்சரியம்தான்.
ஒன்று, இவையெல்லாம் அக்காலத்தில் குறிக்கபட்டு அதற்கான அடையாளங்கள் வைக்கபட்டிருந்து பின்னர் அப்படியே காலப்போக்கில் போனவை. அல்லது, அக்காலத்தில் இறையருளாளர்கள் மூலம் சில இடங்களில் இருப்பதாக அறியப்பட்டு முயற்சித்து கைவிடப்பட்டு பிறகு நூற்றாண்டுகளாக செவிவழியாகப் பகிரப்பட்ட செய்தியாக இருக்கலாம்.
புயல் வெள்ளம் வந்தால் கர்னூல் ஜில்லா மக்களுக்கு ஆனந்தம். ஏன்? அப்போதுதான் எந்த பிரயத்தனமும் இல்லாமல் மழைநீர் களிமண்ணை அடித்துக்கொண்டு போகும், அதில் வைரக் கற்கள் அடித்து வரப்படும். இதை பொறுக்கவே கூட்டம் உண்டு. சிலர் வேலையை விட்டுவிட்டு இதையே முழுநேரத் தொழிலாகவும் செய்கிறார்கள். அங்கு கிம்பர்லைட் /லேம்ப்ரைட் கனிமங்கள் மிக அதிக அளவில் சர்வ சாதாரணமாக இன்றும் கிடைக்கிறது. வேறு மாநிலங்களில் இருந்து இங்கே மழைக்காலம் முடியும் வரை தற்காலிகமாக கூடாரம் போட்டு நல்ல அறுவடை செய்துகொண்டு போவார்கள். அதற்கேற்ப உழைப்பை போடவேண்டும். ஒருமுறை வந்துபோனால் 5 - 10 லட்சம் ரூபாய் வரை வைரங்கள் பல அளவுகளில் கிடைக்கிறது. குடிசைத் தொழிலுக்கு இந்த வருமானம் போதாதா? விவசாயம் சரியில்லாதபோது இதுதான் தொழில். வைர வேட்டையைப் பற்றி நான் புனைந்த ஒரு நாட்டுப்புற மெட்டுப் பாட்டு...
"கொண்டபக்க ரெய்தநேல துன்னி பாகசூசிந்தி
ரெங்குரெங்கு ரவ்வலு சேத்திமீத வெலிகிந்தி
மண்ட்டிலோக அடுசுபட்டி ரத்தினாலு பூடிந்தி
முக்கமுக்க பகிலிகொட்டி கொப்பவாடு சேசிந்தி."
('மலையோரம் வளமான நிலத்தை உழுது பார்த்ததில் வண்ணமய வைர ரவைகளாக கைமீது ஒளிர்ந்தது. பூமிக்ககுள் சேறுபூசிய ரத்தினங்கள் புதைந்திருக்கு. அதை துண்டுகளாக வெட்டி எடுத்து பணக்காரராகி விடலாம்') என்ற பொருளில் இதை எழுதினேன். 
80களில் என்னுடைய தாய்மாமன் கர்னூல் பகுதியில் ஒரு சிறிய கனிம சுரங்கத்தை வைத்திருந்தார். அதில் எமரால்ட், கார்னெட், விடல்ச்பா, மற்றும் வேறு ஏதோ கற்களும் கிடைத்தது. அவை பட்டைத் தீட்டாத தரம் பிரிக்கபடாதவை... நான் சிறுவனாக இருந்தபோது அவர் கொண்டுவந்த சில சின்ன வண்ணநிற தீட்டப்படாத கற்களை என் கையில் அள்ளிப் பார்த்த ஞாபகம் உண்டு. என் பள்ளிக்கூட பிராஜக்ட் வரக் செய்ய chart பேப்பரில் கோந்து போட்டு ஓட்ட அந்த சிறு வண்ணநிற கற்களை எடுத்துக்கவா என்று நான் கேட்டதை நினைத்தால் இன்றும் சிரிப்புதான் வருகிறது. 
இரண்டு ஆண்டுகள் மட்டுமே வைத்திருந்தபின் யாருக்கோ விற்றார். அதெல்லாம் பிராப்தம் இருந்தால்தான் கையில் தங்கும்.
Image may contain: food

1 கருத்து:

  1. Dont know if we should feel happy or sad about this diamond discovery. I pray that all these get used only for good purpose. In which book did bhogar mention about this?

    பதிலளிநீக்கு